Friday, May 24, 2013

வறுமையும், திட்டகமிஷனும்! வளமான கற்பனையில் திட்டக்கமிஷன்!




இந்தியாவில் திட்டம் தீட்டுபவர்கள் சாதாரணமக்களிடமிருந்தும், யதார்த்தங்களிலிருந்தும் எவ்வளவு தூரம் அந்நியப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் நமது திட்டக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையே அத்தாட்சி..!
இனி நகர்புறங்களில் நாளொன்றுக்கு 28 ரூபாய் 65 பைசாவுக்கும் குறையாக சம்பாதிப்பவர்களையும், கிராமப்புறங்களில் 22ரூபாய் 43 பைசாவுக்கும் கீழ் சம்பாதிப்பவர்களையும் மட்டுமே வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாக கணக்கில் வைப்பார்களாம்! அந்த வகையில் தற்போது இந்தியாவில் இதுவரை வறுமையில்  உள்ளவர்கள் எனக் கருதப்பட்ட 7.4% த்தினர் வறுமையிலிருந்து விடுபட்டு விட்டார்களாம்!
இந்த பணத்தைக்கொண்டு இன்றைக்கு ஒரு வேளை உணவு கூட வயிராற உண்ணமுடியாது. அது மட்டுமல்ல, திட்டக்கமிஷன் கூறியுள்ள 3 பைசா, 5 பைசா என்பவை புழக்கத்திலிருந்து மறைந்து பல ஆண்டுகளாகின்றன. 10 பைசா, 25 பைசாக்களே கூட இன்று புழக்கத்திலில்லை. இவையெல்லாம் இன்றைக்கு பாமரன் முதல் பள்ளிக்கூடச் சிறுவன் வரை அறிந்த உண்மை!
இந்த எளிய உண்மை திட்ட கமிஷன் தலைவர், துணைத்தலைவர்களான பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், மாண்டேக்சிங் அலுவாலியாவிற்கும் தெரியாமல் இருப்பது தான் கொடுமை!
இது ஒருபுறமிருக்க, வறுமைக்கான அளவுகோல் என்ன? அடையாளங்கள் என்ன? இந்தியாவில் எத்தனை சதவிகிதத்தினர் வறுமைகோட்டின் கீழ் வாழ்பவர்கள் என்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன.
தெண்டுல்க்கர் கமிட்டி  37% என்கிறது...
சக்சேனா கமிட்டி 50% என்கிறது...
இப்படியாக பற்பல கமிட்டிகள் பற்பல புள்ளிவிபரங்களை தந்துள்ளன! ஆனால் உலகவங்கி 2005 நிலவரப்படி நாளொன்றுக்கு சுமார் 70 ரூபாய் சம்பாதிப்பவர்களை வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களாகக் கணித்து, இந்தியாவில் 41.6% வறுமை கோடிற்கு கீழ் உள்ளனர் என்றது. கடல் நீரைக் கணக்கிட முடியாது, ஆற்றுமணலை அளவிட முடியாது என்பதைப் போலத்தான் மக்களின் உண்மையான பொருளாதார நிலைமையை யாராலும் துல்லியமாக கணக்கிட்டுச் சொல்ல முடியாது போலும்!
அதுவும் இந்தியாவில் ஏழைகளாகட்டும், பணக்காரர்களாகட்டும் தங்களது உண்மையான சம்பாத்தியத்தை பெரும்பாலும் வெளிப்படுத்தவிரும்புவதில்லை என்பதே யதார்த்தம்.
இந்நிலையில் இப்படி ஆளாளுக்கு அள்ளித் தெறிக்கும் புள்ளிவிபரங்களை பார்க்கும் போது பொய்களுக்கு நாகரீகமாக சூட்டப்பட்ட புதுப்பெயர் தான் புள்ளிவிபரங்களோ... என எண்ணத் தோன்றுகிறது.
உலக வங்கி தரும் ஒரு தகவல்படி உலகில் மிக மோசமான வறுமையிலுள்ள ஏழைகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா 14வது இடம் வகிக்கிறது. எத்தியோப்பியா உள்ளிட்ட, நாம் மிக வறுமையான நாடாக கருதியவை, நம்மை காட்டிலும் பெட்டர் என்பது உலக வங்கியின் கணிப்பு!
சமீபத்தில் வெளியான ஒரு சர்வதேச தகவல்படி உலகில் அதிகமான கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள நாட்டில் இந்தியா நான்காம் இடம் வகிக்கிறது. நமக்கு பிறகே ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி போன்றவை! அதாவது இந்தியா அதிகமான கோடீஸ்வரர்களைக் கொண்டுள்ள படுமோசமான ஏழ்மை நாடு.
என்னே விசித்திரம்!
ஒட்டிய வயிறு, ஒடுங்கிய தேகம், பஞ்சடைந்த கண்கள், பரட்டைத் தலைகள், உண்ண உணவுமில்லை, ஒதுங்க இடமுமில்லை, உடுத்த துணியுமில்லை, நாளும் நடக்கும் பட்டினிச்சாவுகள்... என இப்படி ஒரு புறமும்,
வானுயர்ந்த கட்டிடங்கள், வழக்கி ஒடும் வாகனங்கள், ஆடம்பர விழாக்கள், பளபளக்கும் நகரங்கள், பகட்டான வாழ்க்கை முறைகள், விலைஉயர்ந்த நுகர்பொருள் கலாச்சாரங்கள்,... என அப்படி ஒரு புறமுமாக இருவேறு அடையாளங்களை பெற்றுள்ளது இன்றைய இந்தியா!
மக்களுக்காகத் தீட்டப்படும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை தவிர்த்து அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், அரசு ஊழியர்கள் சிலரையும் கோடீஸ்வரர்களாக்கி கொண்டுள்ளன.
ஒரு பக்கம் செல்வச் செழிப்பு, இன்னொரு பக்கம் ஒரு வேளை உணவிற்கே திண்டாட்டம். உலகிலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கறுப்பு பண புழக்கமுள்ள நாடுகளில் முதலாவதாக இருப்பது மாத்திரமல்ல, ஸ்விஸ் வங்கிகளில் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்த இருவேறு நிலைமைகளுக்குள்ள இடைவெளி எவ்வளவுக்கு குறைகிறதோ அவ்வளவுக்கு வறுமை குறைந்துவிட்டதாக நாம் பொருள் கொள்ளலாம். சோற்று பஞ்சம் நாட்டில்! அறிவுப் பஞ்சம் திட்டக்கமிஷனில்!
24.3.2012

No comments: