Thursday, May 2, 2013

இலங்கை பிரச்சினையும், அரசியல் ஆதாயங்களும்


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

ஒரு பிரச்சினையின் உண்மைத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்றால் அதை ஓட்டு அறுவடைக்கான அரசியலாக்கினாலே போதுமானது. தற்போது இலங்கை பிரச்சினைக்கு அந்த கதி தான் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

இலங்கை பிரச்சினையைப்பொறுத்தவரை அது தமிழக அரசியல் கட்சிகளின் அரசியல் வியாபாரத்திற்கான கச்சாப் பொருளாகிவிட்டது பெரிய துர்அதிர்ஷ்டமே!

இலங்கையில் தமிழ்மக்கள் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள இயலாமல் ஜனநாய உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளனர். அதிலிருந்து மீள அவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவர்களை மேன்மேலும் இன்னல்களுக்கு ஆளாக்கும் வகையிலான அரசியலை இங்கே தங்கள் சொந்த லாபத்திற்காக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசியல் கட்சிகள் சந்தர்பத்திற்கேற்ப இலங்கை பிரச்சினையில் செயல்படுவதால் இந்த பிரச்சினை குறித்து தமிழக மக்களிடம் உண்மையாக ஏற்பட்டிருக்கவேண்டிய தாக்கம் கூட ஏற்படவில்லை.
இதில் போராடுபவர்களின் உள்நோக்கங்களில் இதன் உண்மைத் தன்மை சிதைகிறது.

தனிஈழக் கோரிக்கை என்பது இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்திய தேசியத்திற்கு எதிரான - தன்மையில் சென்று கொண்டிருப்பது...,

இலங்கைத் தம்ிழர்களுக்கான அநுதாபம் என்ற எல்லைகடந்து இனவெறி அரசியலாக வளர்த்தெடுக்கப்படுவது...,

எந்த உள்நோக்கமுமில்லாத மாணவர்சக்தியை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிராகத் தூண்டிவிடுவது....
போன்றவை தமிழகத்தின் இரு பெரிய அரசியல்கட்சிகளின் போட்டாபோட்டி அரசியல் காரணமாக கவனிக்கப்படுவதில்லை.

இந்தச்சூழலில் சமீபத்தில் சென்னையில் பேசியுள்ள பா.ஜ.கவின் முக்கிய தலைவர் தனிஈழத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார். மத்தியில் பா.ஜ.க அரசு அமைந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என ஆர்பரித்துள்ளார். 

"இலங்கையை இரண்டாக பிளக்கும் கோரிக்கைக்கு நாங்கள் ஒரு போதும் உடன்படமாட்டோம்" என்றே இது வரை பா.ஜ.கபேசி வந்துள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்த காலங்களிலும், இல்லாத காலங்களிலும் பா.ஜ.கவின் தேசியத் தலைமை இந்த நிலைபாட்டைத் தான் எடுத்திருக்கிறது.

யஷ்வந்த்சின்கா பா.ஜ.க அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராயிருந்தபோது ஒருங்கிணைந்த இலங்கை என்ற நிலைபாட்டையே பேசியுள்ளார்.
2009ல் இலங்கையில் உச்சகட்டபோர் நடந்து மனிதபேரழிவு ஏற்பட்ட நிலையிலும் பா.ஜ.கவின் நிலைபாட்டில் மாற்றம் இல்லை.

போர் முடிந்து இந்திய எம்.பிகளுக்கு தலைமைதாங்கி சுஷ்மாசுவராஜ் இலங்கை சென்று வந்தபோது, இலங்கைத் தமிழர்களிடமே கூட தனி ஈழம் என்ற கோரிக்கை எழவில்லை. இங்கிருப்பவர்கள் தான் பேசுகிறார்கள்" என்றார்.

சமீபத்தில் ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் என்ன முடிவெடுப்பது என பிரதமர் மன்மோகன்சிங் கூட்டிய கூட்டத்தில் கூட,

"இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என பா.ஜ.க தலைமை முடிவெடுத்தது.
தமிழகம் வந்து மேடையேறி கர்ஜிக்கும் யஷ்வந்த்சின்கா இதை ஏன் இந்தியப் பாராளும்னறத்தில் இது வரை சொல்லவில்லை? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆதாய அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடுவதா? தன்கட்சித் தலைமைக்கே உறுதிபாடில்லாத உடன்பாடில்லாத ஒரு கருத்தை ஒரு தேசியத் தலைவர் ஏதோ உதார்விடும் போக்கில் பேசலாமா?

இலங்கை பிரச்சினையில் யஷ்வந்த் சின்காவின் பேச்சு தற்காலிக தந்திரமா? அல்லது தலைகீழ்மாற்றமா?
துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் நிராயுத பாணிகளான மக்களை மேன்மேலும் நிர்கதியற்ற நிலைமைக்குத் தள்ளும் மேடைபேச்சு வீரவசனங்கள் தேவையா? சிந்திப்போம். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
04-4-2013

No comments: