Thursday, May 2, 2013

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தும் உண்மைகள்



                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

விக்கிலீக்ஸ் - உலக ஊடகத்தின் வீரசாகஸத்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.

இது 2006 தொடங்கி கடந்தே ஆறேழு ஆண்டுகளாக பல அதிரவைக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தி வரும் இணையதளமாகும்.

இது ஈராக்கில் அமெரிக்காவின் அத்துமீறல்களை அம்பலப்படுத்திய போது, "அய்யோ இதென்ன கொடுமை...!" என உலகமே துடித்தது. 

இதே போல் அடுத்தடுத்து அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு மற்றும் ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள அமெரிக்க தூதரகத்தை உளவுத்துறையாக்கி கொண்ட சாதுரியங்கள் எல்லாம் வெளியான போது அமெரிக்க அரசே அலறியது.

இது போல் ஜெர்மன், அரபுநாடுகள், இந்தியா என எல்லா நாட்டு விவகாரங்களையும் விக்கிலீக்ஸ் வெளியீட்டு வருகிறது.

இந்திய அரசியல்வாதிகள், முக்கிய விவிஐபிகள் யார் யார் ஸ்விஸ்வங்கிகளில் எவ்வளவு பணத்தை போட்டுவைத்துள்ளனர் என்பதை துல்லியமாக வெளியிட்டது விக்கிலீக்ஸ் தான்!

அந்த விக்கிலீக்ஸ் தான் ராஜீவ்காந்தி பைலட்டாக இருந்த காலத்திலேயே ஸ்வீடன் ஜெட் விமானத்தை இந்திய இராணுவம் வாங்குவதற்கு ஸ்வீடனின் சாப்ஸ்கானியா நிறுவனத்திற்காக இடைத்தரகராக செயல்பட்டதாகவும் இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் தனது நாட்டின் வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய செய்தியில் இத்தகவல் உள்ளதாகவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 

ஆனால் இந்த விவகாரத்தில் நமது ராணுவம் ஸ்வீடனின் ஜெட் விமானத்தை வாங்காமல் இங்கிலாந்தின் ஜாகுவார் ரக போர் விமானங்களை வாங்கியுள்ளது.

1970களில் ராஜீவ்காந்தி பைலட்டாக இருந்த கால நிகழ்வு இது. ஆக, ராஜூவின் சிபாரிசை அன்றைய இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசின் ராணுவம் புறக்கணித்துள்ளது என்பது ஒரு வகையில் நாம் பெருமைபடக்கூடிய செய்திதான்!

ஆனால், காங்கிரஸ் கட்சியோ, "இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, விக்கிலீக்ஸ்சின் செய்திக்கு மதிப்பளிக்க வேண்டாம்" என மன்றாடுகிறது. ஆனால், பா.ஜ.கவின் பிரகாஷ் ஜாவேத்கரோ, "காங்கிரஸின் தலைமைகக் குடும்பம் ராணுவ பேரங்களில் அன்றிலிருந்தே ஈடுபட்டு வருவதைத்தான் இது காட்டுகிறது" எனக் கூறியுள்ளார். 

இந்தியாவில் முதன்முதலாகப் பேசபட்ட பெரிய ஊழலே டி.டி.கிருஷ்ணமாச்சரி நமது ராணுவத்திற்கு வெளிநாட்டிலிருந்து ஜீப் வாங்கியதில் நடந்த ஊழல் தான்!

அன்றிலிருந்து போபர்ஸ் ஊழல், சமீபத்தில் இத்தாலி நிறுவனத்திடமிருந்து இந்திய விவி.ஐபிக்களுக்கான சொகுசுவிமானங்கள் வாங்கியதில் ஊழல் என வரிசையாக அம்பலமாகிவருகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகள் - குறிப்பாக ஏழைகள் அதிகமுள்ள நாடுகள் - இன்று ராணுவத்திற்குத்தான் தங்கள் பட்ஜெட்டில் மிக அதிக நிதியை ஒதுக்குகின்றன. பக்கத்து நாடுகளுடனுடனான பகைமை, பதற்றம் இந்த அதிக நிதி ஒதுக்கலுக்கு துணைபுரிகின்றன.
தகவல் அறியும் உரிமைச்ட்டம் வாயிலாக ராணுவ விபரங்களை கேட்கவும் வழியில்லை!

இந்நிலையில் ஆட்சியாளர்கள் தாங்களாகவே மனசாட்சியுடன் நடந்து கொள்வது ஒன்றே தீர்வாகும் என நாம் இது வரை எண்ணியிருந்த வேளையில் தான் விக்கிலீக்ஸ் சில விபரங்களை வெளியிட்டுள்ளது. 

பொதுவாக இந்திய ஊடகங்கள் பெரும்பாலும் உண்மைகளை ஊமையாக்கியே பழக்கப்பட்டவை.
மறைக்கப்படும் உண்மைகள் தான் நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு துணை செய்கின்றன. உண்மைகள் வெளிப்படும் போது அநீதியின் பயணத்திற்கு அணைபோடப்படுகிறது. 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
09-4-2013




No comments: