Friday, May 24, 2013

கூடங்குளம் போராட்டம் இதுவே முடிவுக்கு வரவேண்டிய தருணம்!



217 நாட்கள் இழுபறியாய் இருந்த பிரச்சினை இரண்டுங்கெட்டானாக இருக்கிறதோ தமிழக அரசு...? என தமிழக மக்களை இடியாப்ப சிக்கலில் ஆழ்த்திய பிரச்சினை இப்போது தமிழக முதல்வரின் உறுதியான முடிவால் திருப்புமுனை பெற்றுள்ளது.
மத்திய நிபுணர் குழுவினரின் விளக்கம், மாநில நிபுணர் குழுவின் விளக்கம், அணுவிஞ்ஞானி அப்துல்கலாம் தந்த அழுத்தமான நம்பிக்கை, மிக அதிக காலகட்டம் எடுத்துக் கொண்டு அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அவமதிக்காமல் கையாண்ட தமிழக முதல்வரின் அணுகுமுறை தற்போது கூடங்குளத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் படியிலான ரூ 500 கோடிக்கான திட்டம்... போன்ற சகல அம்சங்கைளையும் உள்ளடக்கி பார்க்கும் போது தமிழக அரசின் முடிவில் தவறு காண்பதற்கு ஒன்றுமில்லை.
2011 ஜுன் மாதம் கூடங்குளத்தின் முதல் அணுஉலையும், 2012 மார்ச்சில் இரண்டாம் அணுஉலையும் செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் பெருந்திரளான மக்களின் எதிர்ப்பால் காலந்தாழ்த்தப்பட்டு அடுத்த மாதம் முதல் உலையும் அதற்கடுத்த இரண்டு மாதத்தில் இரண்டாம் உலையும் செயல்பட உள்ளது. இதன்மூலம் கிடைக்கவுள்ள மின்சாரத்தில் தமிழகத்திற்கு 45% தருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. கடும் மின் தட்டுப்பாட்டை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் இந்த அணுமின் உற்பத்தி தவிர்க்க முடியாத தேவை என்பதே பெரும்பாலான மக்களின் எண்ணமாகும்!
கூடங்குளத்தில் இந்த இரண்டு மின் உலைகளை தவிர்த்து 2008ல் நிறுவப்பட்ட மேலும் நான்கு மின் உலைகளும் இயங்கத் தொடங்கும் போது மொத்தம் 9200 மெகாவாட் மின்சாரம் கிடைக்ககூடும்! இதில் கணிசமான பங்கு தமிழகத்திற்கு தரப்படும் போது அது தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு வரப்பிரசாதமாகும்!
இதுவரை போராட்டம் நடத்திய வகையில் நாம் அணுஉலை எதிர்ப்பாளர்களையும், அப்பகுதி மக்களையும் குறை சொல்வதற்கில்லை. இந்த போராட்டம் மொத்தத்தில் அணுமின் நிலையம் தொடர்பான விழிப்புணர்வையும், பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டிய தேவையையும் ஒருங்கே பெற்றது. இதனால் அப்பகுதி மக்களின் சமூக பொருளாதார வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் வாக்குறுதிகள் தரும் அளவுக்கு இறங்கிவந்துவிட்டன. இந்நிலையில் போராட்டம் முடிவுக்கு வருவதே நல்லது.
ஒரு மக்கள் நலன் சார்ந்த போராட்டத்தை இவ்வளவு காலம் தொடர்ந்து நடத்த எவ்வளவு மன உறுதியும், தியாகமும் தேவையோ அதைவிட அதிகமாக அதை காலத்தின் தேவை கருதி, யதார்த்த சூழலை உணர்ந்து கைவிடவும் தேவை!
முன் நகரும் முனைப்பு மாத்திரமல்ல, பின்வாங்கும் புத்திசாதுரியமும் போராட்ட களத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகும்!
இது நம் அண்ணல் காந்தி தன் அறப்போராட்டங்களில் நமக்களித்த படிப்பினையாகும்!
இனியும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்வோம் என போராடுவது அப்பகுதி அப்பாவிமக்களுக்கு அளப்பரிய இன்னல்களையே தரும். இது வரை அவர்கள் சந்தித்த இழப்புகள் போதாதா? எனவே அரசு அதிகார மையங்களின் அடக்குமுறைகள் பிரயோகப் படுத்தப்படுவதற்கு முன்பாக, போராட்டம் படிப்படியாக நீர்த்துபோய் நிர்மூலமாவதற்கு இடமளிக்காமல், இப்போதே போராட்டத்தை வாபஸ் பெற்றுவிடுவது, தமிழக மக்களின் வரவேற்பையும், மரியாதையும் போராட்டக்காரர்களுக்கு பெற்றுத் தரும்.
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போனதாக வரலாறில்லை!
கூடங்குளம் போராட்டம் இதுவே முடிவுக்கு வரவேண்டிய தருணம். போராட்டக்காரர்கள் அச்சப்பட வேண்டியதில்லை தமிழக மக்களின் ஆதரவைப் பெறுவது அவர்களின் தார்மீக கடமையாகும்! நம்பிக்கைகள் பொய்த்தால் போராட்டத்தை மீண்டும் உயிர்பிக்கலாம்!
பின் குறிப்பு: ஒரு தொலைநோக்கு பார்வையில் மக்கள் நலன் சார்ந்த மதிப்பீட்டின் படி அணுஉலை கூடாது. ஆனால் தற்காலிக அவசரதேவைகளை கருத்தில் கொண்டு பார்த்தால் இது தற்போது தவிர்க்கமுடியாது. எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியது.
19.3.2012

No comments: