Friday, May 24, 2013

அண்ணா நூற்றாண்டு நூலகம் சர்சைகளும், சாத்தியங்களும்




சர்வதேசத் தரத்தில், ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமாகத் திகழும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
.தி.மு. ஆட்சிக்கு வந்ததும், தி.மு.  ஆட்சியில் உருவான இந்நூலகத்தை டி.பி. வளாகத்திற்கு இடமாற்றுவதாக அறிவிக்க, சமூக ஆர்வலர்கள் பலரும் உயர்நீதி மன்றம் சென்று இடைக்கால  தடைபெற்றனர்.
கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் சுமார் 180கோடி செலவில் 3.75 லட்சம் சதுர அடி பரப்பில் ஒன்பது தளங்களுடன் இந் நூலகம் கட்டப்பட்டுள்ளது.
15,000 சதுர அடியில் குழந்தைகளுக்கான பிரிவு! அதில் குழந்தைகளைக் கவரும் வகையிலான கட்டமைப்புகள், கம்யூட்டர்கள், பூங்காக்கள், விளையாட்டு பொருட்கள் எனத் தொடங்கி,
பார்வையற்றோர்களுக்கான சிறப்புப் பிரிவு! அதில் 500க்கும் மேற்பட்ட பிரைலி புத்தகங்கள், குறுந்தகடுகள் என்பதாகவும், கல்வித் தேடல் கொண்ட மாணவர்கள் தொடங்கி, கலை, இலக்கிய தாகம் கொண்ட படைப்பாளிகள் வரை ஒவ்வொரு தளத்திலும் அந்தந்த தரப்பினர் பலன்பெறும் வகையில் சிறப்பான திட்டமிடல்களுடன் இந்நூலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலகத்தை இன்றைய அரசு விரும்பியபடி, அப்படியே குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றவாய்ப்பில்லை. முற்றிலும் இடித்து புதிய கட்டிடத்தை குழந்தை மருத்துவமனைக்கான திட்டமிடலுடன் தான் கட்டியாக வேண்டும்.
தென் சென்னையில் சர்வதேச தரத்தில் ஒரு குழந்தைகள் நல மருத்துவமனை கட்டவேண்டும் என்ற தமிழக அரசின் நோக்கம் வரவேற்கத் தக்கது.
அதற்கு தற்போதைய அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடிக்காமலே அந்நோக்கத்தை நிறைவேற்ற வாய்ப்புண்டு. இந்த இடத்தில் தான் சென்ற முறை ஆட்சியில் இருந்தபோது முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகம் கட்டத் திட்டமிட்டார். அதற்காக அண்ணா பல்கலைக்கழகம், நெடுங்சாலைத்துறை ஆகியவற்றில் பேசி 42 ஏக்கர் நிலமும் பெறப்பட்டது. பின்னர் அத்திட்டம் சில எதிர்ப்புகளால் கைவிடப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் வெறும் 8 ஏக்கர் மட்டுமே அண்ணா நூலகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத பெரும் பரப்பளவு அப்படியே தான் உள்ளது அதை சம்பந்தப்பட்ட துறைகளிடம் பேசி, மீண்டும் பெற்று, தமிழக அரசு குழந்தைகளுக்கான மருத்துவமனை கட்டும் தன் நோக்கத்தை யாரையும் பாதிக்காத வகையில் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
தற்போது இந்த நூலகத்திற்கு நாளொன்றுக்கு 1,500 முதல் 2,000 பேர் வருகிறார்கள். விடுமுறை நாட்களில் சுமார் 3,000 பேர் வந்து பயன்படுத்துகிறார்கள்.
சகல தரப்பினரின் ஒட்டுமொத்த வரவேற்பையும் பெற்றுள்ள இந்நூலகத்தை மேலும் சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் முன்னணி படைப்பாளிகள், இலக்கியவாதிகள், இதழாளர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு...!
அதனால் தான் இந்நூலகத்தை இடமாற்றம் செய்யும் அரசின் முடிவை ஆளும்கட்சி  தவிர அனைத்து முக்கிய கட்சிகளும் எதிர்க்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகம், ..டி என்று உயர்கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பொருத்தமான இடத்தில் தான் இந்நூலகம் உள்ளது. அரசு விரும்பினால் டி.பி. வளாகத்தில் இதைப் போல மேலும் ஒரு நூலகத்தை கட்டலாம், அது மத்திய சென்னை, வடசென்னை வாசிகளுக்குப் பயன்படட்டும்.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனாலேயே பாராட்டப்பட்ட, யுனெஸ்கோ உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்ட, சுமார் 12 இலட்சம் புத்தகங்களைக் கொண்ட, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி பேசுபவர்களும் பயன்படுத்தி வருகிற, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவை தமிழக அரசு மாற்றிக் கொள்ளும் பட்சத்தில் அதை  தமிழகமே தலை வணங்கி வரவேற்கும்!
9.3.2012

No comments: