Thursday, May 2, 2013

இலங்கைத் தமிழருக்கான போராட்டங்களின் அரசியல்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தி.மு.கவும், விடுதலைசிறுத்தைகட்சியும் விலகுவதாக அறிவித்துள்ளன.

போருக்கு பிறகான இலங்கை அரசின் செயல்பாடுகளை கண்டிக்கும் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஐ.நா.அவையில் இந்தியாவும் ஏற்க வேண்டும் என்ற தி.மு.கவின் வற்புறுத்தலுக்கு இது வரை இசைவான பதில் வராத நிலையில் தி.மு.கவின் விலகல் அறிவிப்பு விரக்தியின் வெளிப்பாடா? நாடகாமா? என்ற விவாதங்களை உருவாக்கியுள்ளன.

"தி.மு.கவின் வற்புறுத்தலை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் எங்கள் முடிவை மாற்றிக் கொள்வோம்" என கருணாநிதி கூறியுள்ளதிலிருந்து மத்திய அரசு முடிவெடுக்கும் முன்பே தி.மு.க முந்திக் கொண்டு தன் முடிவை அறிவித்துள்ளது என்பதை உணரலாம்.

"ஒரு வேளை அரசிலிருந்து நாங்கள் விலகும் முடிவு எடுத்ததினால் தான் மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்தது" என்ற ஒரு நாடகம் பேசி வைத்து நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகமும் மக்களுக்கு எழுகிறது.

எது எப்படியானாலும், இலங்கை பிரச்சினைக்காக தி.மு.க அதிகமாக அக்கறை காட்டிவருகிறது என்று நிருபிக்க வேண்டிய நிர்பந்தம் தி.மு.கவிற்கு ஏற்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தில் இலங்கை பிரச்சினைக்கு ம.தி.மு.க, பழ.நெடுமாறன், சில சிறிய தமிழ்தேசிய குழுக்களைத் தவிர்த்து பெரிய கட்சிகள் உச்சகட்ட போர் அங்கு நடக்கும் காலகட்டத்தில் கூட முக்கியத்துவம் தந்ததில்லை.

அ.தி.மு.க இது வரை இலங்கை பிரச்சினைக்காக அணி திரட்டி வீதிகளில் இறங்கிப் போராடியதில்லை. ஆனால், அதே சமயம் தி.மு.க டெசோவை ஆரம்பித்து சென்னையிலும், டெல்லியிலும் மாநாடு நடத்தி, ஐ.நா சபைக்கு ஸ்டாலினை அனுப்பி, ஈழ அரசியலை தூக்கி பிடித்தது. போதாக்குறைக்கு பந்தத்தையும் நடத்தி காட்டியது.
இதற்கு போட்டியாக கருணாநிதி எதிர்பாளர்கள் இலங்கை பிரச்சினையில் உணர்ச்சிகரமாக களத்தில் இறங்கத் தொடங்கினார்கள். அவர்கள் மாணவர்களை முன் நிறுத்தி ஊடக பலத்தோடு போராட்டத்தை விரிவுபடுத்தியும், வீரியபடுத்தியும் சென்றதை அ.தி.மு.க அரசு தடுக்கவில்லை. இலங்கை சுற்றுலா பயணிகள், புத்த துறவிகள் தாக்கப்பட்டதில் இந்த அரசு எதிர்நடவடிக்கை எடுக்கவில்லை. அதே சமயம் 2009ல் இலங்கையில் உச்சகட்டபோரில் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்டபோது தமிழகத்தில் எந்த போராட்டங்களும் நடை பெறாமல் சட்டம் ஒழுங்கை சரியாக அமல்படுத்தி மத்திய அரசின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டது அன்றைய தி.மு.க அரசு.

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் போட்டிச் செயல்பாடுகள் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளன.
இலங்கை பிரச்சினையில் இலங்கை அரசு போரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உரிய நீதி வழங்கவில்லை. அந்த மக்கள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவம் நிலைகொண்டு ஜனநாயக செயல்பாடுகளை முடக்கியுள்ளது. போரில் சரணடைந்த போராளிகளின் நிலை என்னவென்றே தெரியவில்லை...? தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் மட்டுமல்ல, வாழும் உரிமையே மறுக்கப்பட்டு வருகிறது.

இவையாவும் உண்மையாகவே மிகவும் கவலைதரக்கூடியவை.... அங்கே ராஜபக்சே ஆட்சி நடக்கும் வரை இச்சூழல் மாறும் சாத்தியமில்லை!

இந்நிலையில் ஐ.நாசபையில் கொண்டுவரும் தீர்மானமோ, இந்திய அரசு அதற்கு ஆதரவாக எடுக்கும் நிலைபாடோ இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. கடந்த கால கசப்பான அனுபவமே இதற்கு சாட்சியாகும்.

ஆனால், இலங்கையில் ராஜபட்சேவின் தமிழர்விரோத ஆட்சியை சிங்கள மக்களே விரும்பவில்லை. மொத்தத்தில் ராஜபட்சேவின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்பதே இலங்கையிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயக சக்திகளின் குரலாக உள்ளது. அந்த குரல் வலுப்பெற வேண்டும். அப்போது அங்கே நடைபெறவிருக்கும் ஆட்சிமாற்றம் ஒன்றே தமிழர்கள் பிரச்சினைக்கு விடிவாக முடியும். அந்த ஆட்சி மாற்றத்திற்காக அங்குள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைவதும், பலம் பெருவதுமே தற்போது நடக்க வேண்டிய ஒன்றாகும். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
19-3-2013

No comments: