Thursday, May 2, 2013

பிரிக்ஸ் மாநாடு


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

தென் ஆப்ரிக்காவின் தர்பன் நகரில் பிரிக்ஸ் நாடுகளின் ஐந்தாவது மாநாடு மார்ச் 26,27 தேதிகளில் நடைபெறுகிறது. நமது பிரதமர் மன்மோகன்சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா என இந்தியாவின் முக்கிய அமைச்சர்கள் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளனர் என்பதில் இருந்து இதன் முக்கியத்துவம் விளங்கும். 

ரஷ்யா, பிரேசில், சீனா, இந்தியா, தென்அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டான பிரிக்ஸ் அமைப்பின் வயது நான்கு தான்! இது உருவானதன் முக்கிய நோக்கம் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அரசியலை எதிர்கொள்வதேயாகும்.

குறிப்பாக அமெரிக்காவின் ராணுவரீதியான அணுகுமுறைகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பாய்ச்சல் இவற்றால் வளரும் நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதாகும்.

இந்த ஐந்து நாடுகளின் மக்கள் தொகை மட்டுமே உலகின் எஞ்சியுள்ள 188நாடுகளின் மக்கள் தொகைக்கு ஈடானது என்ற வகையில் இந்த அமைப்பு உலகின் சரிபாதி மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது எனலாம்.

அந்த வகையில் கடந்த நான்கு மாநாடுகளில், நேட்டோ படைகளின் லிபியா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு, சிரியா, ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க நிலைபாடு, ஈரானின் அணு ஆயுத சோதனை, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் இறுக்கமான சூழ்நிலை போன்றவை விவாதிக்கப்பட்டு ஐந்து நாடுகளும் ஒருமித்த முடிவு காணவேண்டும்.

ஒரு வகையில் அமெரிக்கா என்ற ஒற்றை வல்லரசை எதிர்கொள்ள, பகை, வெறுப்பு, துவேஷம் இல்லாமல் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு ஒரு செக்பாயிண்ட் வைக்க, பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது என்று நாம் அர்த்தம் கொள்ளலாம்.

அதேசமயம் அமைதி, பாதுகாப்பு குறித்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு பிரிக்ஸ் நாடுகளுடான பொருளாதார பரிவர்த்தனை, வேளாண்மை, விளையாட்டு... என பற்பல அம்சங்களிலும் இணைந்த செயல்பாடு வலுப்பெற்று வருகிறது.

இந்தியாவின் உள்நாட்டு செயல்பாடுகள் எவ்வாறு இருந்தாலும், அயலுறவு கொள்கைகளில் இந்தியாவின் அணுகுமுறை நடுநிலைமையுடனும் அறிவுபூர்வமாகவும், அனைத்து நாடுகளையும் அரவணைத்துச் செல்வதாகும் தொடர்ந்து இருக்கிறது.

இதற்கு மகாத்மாகாந்தியும், ஜவஹர்லால்நேருவும் போட்டுத்தந்த அடிப்படைகளே காரணமாகும்.

இன்றைக்கு காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பானாலும் சரி, சார்க் நாடுகளின் கூட்டமைப்பானாலும் சரி, பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பானாலும் சரி இந்தியாவின் நிலைபாடு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு தற்போதைய பொருளாதார தேக்க நிலை உடைபடுவதற்கும், உள்கட்டமைப்பு, முதலீடு போன்றவைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நல்லதே நடக்கட்டும்.




தந்தி டிவி,
EDITORIAL VOICE,
March 2013

No comments: