Thursday, May 2, 2013

சோனியாவின் நீண்டகால தலைமை சாதனையா? சோதனையா?


                                                                                                                  -சாவித்திரிகண்ணன்

இந்திய காங்கிரஸ் நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட ஒரு மாபெரும் இயக்கம் மட்டுமல்ல. 30 தேசிய இனங்களாக சிதறியிருந்த மக்களை இந்தியா என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்த பேரியக்கமுமாகும்.

ஒரு யாகமாக, தவமாக கட்டி எழுப்பபட்ட தேசிய இயக்கம் இன்று ஒரு பெரும் தேக்க நிலைக்கு வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு (சோனியா) ஒரே தலைவர் கடந்த 15 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறார் என்பதை என்னவென்று சொல்வது?
இது கட்சிக்குள் ஜனநாயகம் இருக்கிறதா? என்ற கேள்வியை பலமாக எழுப்பி உள்ளது.

1885ல் காங்கிரஸ் தோன்றியது முதல் 1965வரை அக்கட்சியில் ஆண்டுதோறும் ஜனநாயக பூர்வமாக தேர்தல் நடந்து தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாபெரும் தலைவர்களாக அறியப்பட்ட வல்லபாய்பட்டேல், நேதாஜி, கோபாலகிருஷ்ண கோகலே, லாலாலஜபதிராய், அவ்வளவு ஏன் மகாத்மா காந்தியே கூட ஒராண்டுக்கு மேல் தலைவராகத் தொடரவில்லை.

நேருவின் குடும்பத்திற்குள்ளேயே பார்த்தாலுமே கூட மோதிலால் நேரு ஒராண்டு மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். ஜவஹர்லால்நேரு அவ்வப்போது இடைவெளிவிட்டு ஐந்தாண்டுகள் தலைவராக இருந்துள்ளார். ஆனால் இந்திராகாந்தி தான் முதன் முதலாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஐந்தாண்டு நீடிப்பு கொடுத்து இருமுறை தேர்வாகி ஆறு ஆண்டுகள் தலைவராக இருந்தார். அதன்பிறகு ராஜீவ்காந்தி சுமார் 7ஆண்டுகள் தலைவர் பொறுப்பில் இருந்தார்.
ஆனால் தற்போது சோனியாகாந்தியோ 15 ஆண்டுகளை முடித்து 16 ஆண்டாகவும் தலைவராகத் தொடர்ந்து காங்கிரஸ் வரலாற்றிலேயே நீண்டகாலத் தலைவர் என்ற 'ரெக்கார்டு பிரேக்' உருவாக்கி உள்ளார்.
ஒரு வகையில் ஒரு பேரியக்கத்தை ஒரு பெண் நீண்டகாலமாகத் தலைமை ஏற்று நடத்துகிறார் என்பது பெருமையான விஷயம் என பார்க்கப்பட்டாலும், இவருக்கு முன் காங்கிரஸ் தலைமை ஏற்ற 'ஹோம்ரூல்' இயக்கம் கண்ட புரட்சி பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையாரும், கவிக்குயில் சரோஜினிதேவியுமே கூட ஒராண்டு மட்டுமே தலைவராக இருந்துள்ளனர்.

அறிவில், தியாகத்தில், போராட்ட குணத்தில் சிறந்தோங்கிய இந்த தலைவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இன்று சோனியா அவர்கள் நீண்டகாலத் தலைவராக நீடிப்பது சாதனையா? அல்லது அந்த இயக்கத்திற்கு நேர்ந்த சோதனையா?

அந்த காலத்தில் பரந்துபட்ட இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் திறமையான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் சேலம் விஜயராகவாச்சாரி,
ஸ்ரீனிவாச அய்யங்கார், பெருந்தலைவர் காமராஜர் போன்றவர்கள் அகில இந்திய தலைவர்களாயினர். பட்டாபி சீதாராமய்யா, நிஜலிக்ப்பா போன்றோர் ஆந்திராவிலிருந்து அகில இந்திய தலைமைக்கு வந்தனர்.
ஆனால் இன்று காங்கிரஸின் தலைமை பதவி என்பது டெல்லி என்ற ஒரே ஒரு யூனியன் பிரதேசத்திற்குள் மட்டுமே சுருங்கிவிட்டதா? என்பதையும் கடந்து - ஒரே ஒரு குடும்பத்திற்குள் மட்டுமே என்ற சுழற்சியையும் கடந்து - ஒரே ஒரு நபரைச் சார்ந்து என்றாகிவிட்டதே!
இது பன்முக கலாச்சாரங்களை இனங்களை பிரதிநிதத்துவப்படுத்தும் ஒரு இயக்கத்திற்கு பெருமை தானா?

அத்துடன் காங்கிரஸ்காரர்கள் கொள்கைக்கு வாழ்ந்தவர்கள் என்ற நிலைமாறி நேரு குடும்பத் தலைமையின் கீழ் மட்டுமே கேள்வியின்றி ஒன்று பட முடிந்தவர்களாகவுள்ளனர் என்ற யதார்த்தத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. வேறுயாரேனும் தலைமைக்கு வந்தால் சிதறிவிடுவார்கள் என்ற நிலைமையும் உள்ளது.

சுயநலமிக்க தனிநபர்கள், குழுக்கள், அதிகார ஆர்வலர்கள் ஒன்று பட்டு செயல்படுவதற்கு தன்னலமற்ற தியாகத் தலைமை தேவைப்படுவதில்லை தானே! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
15-3-2013

No comments: