Thursday, May 2, 2013

உளவுத்துறையின் முக்கியத்துவம் உணராத அரசாங்கம்


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்


ஒரு அரசாங்கத்தின் வெற்றிக்கு வெளியில் தெரியாத தூணாக இருப்பது உளவுத்துறை.

அப்படிப்பட்ட உளவுத்துறையில் சுமார் 30% பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளது. இதற்கான திறமையான ஆட்கள் கிடைக்கவில்லை என்று மத்திய உளவுத்துறை செயலாளர் ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிபடுத்துவதிலும் வெளியிலிருந்தும் வரும் ஆபத்துகளை முன்கூட்டியே தடுப்பதிலும் இண்டலிஜன்ஸ் பீரோ எனப்படும் ஐ.பி.யின் பங்களிப்பு மகத்தானது, அப்படியிருக்க, இத்துறையில் இவ்வளவு அதிகமான பணியாளர் பற்றாக்குறை என்பது அதாவது மொத்த பணியிடங்களில் 26,867,ல் 8272 பேர் குறைகிறார்கள் என்பதும், அதற்கு திறமையானவர்கள் கிடைக்கவில்லை என்பதும் கவலையளிக்கும் செய்தியாகும்.

தற்போது இந்தியாவின் பல இடங்களில் அடிக்கடி நடக்கும் குண்டுவெடிப்புகள், குறிப்பாக மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவிய விவகாரம் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கப்படாதது போன்றவை உளவுத்துறையின் போதாமையை காட்டுகிறது.

ஆனால், பணியிடப் பற்றாகுறைக்கு முக்கிய காரணம் இதில் இருக்க கூடிய ஆபத்துகளும், கஷ்டங்களும் எனப்படுகிறது. சமீபகாலமாக உளவுத்துறையில் பணியாற்ற வரும் இளைஞர்கள் எல்லைபகுதிகளுக்கு அனுப்படும் போது வேலையை ராஜீனாமா செய்து வேறு வேலைகளுக்கு தாவிவிடுகிறார்கள்.

பொதுவாக இன்றைய இளம் தலைமுறையிடம் கடின உழைப்பு, நாட்டுபற்று குறைந்து இருப்பது ஒரு காரணமென்றால், கடின உழைப்புக்கும், நாட்டுப்பற்றுக்குமான முன்மாதிரியான தலைமை நடைமுறையில் அரிதாகப் போனதும் மற்றொரு காரணாமாகும்.
இது தவிர உளவுத்துறைக்கு தரப்படும் அரசியல் அழுத்தங்கள், திசைதிருப்பப்படும் செயல்பாடுகள், குளறுபடிகள், ஊழல்கள் போன்றவற்றோடு போதிய நிதிபலமில்லாமல் செயல்பட நிர்பந்திக்கப்படுவதும் உளவுத்துறையின் பின்னடைவுகளுக்கு காரணமாகிறது.
உளவுத்துறையை உரிய முறையில் கையாளத் தெரிந்த அரசாங்கத்தால் மட்டுமே உள்நாட்டு கலவரங்களையும், போராட்டங்களையும் முன்கூட்டியே உணர்ந்து நிவாரணமளிக்க முடியும். அதேபோல் அந்நிய ஊடுருவலை அறவே தடுத்து பயங்கரவாதச் செயல்களுக்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்.

உளவுத்துறையை ஆளும் தரப்பினர் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே ஈடுபடுத்தும் போது, அதன் அளப்பரிய ஆற்றல் விரயமாக்கப்படுகிறது - அது பணியில் இருப்பவர்களையும் விரக்தியடைய வைக்கிறது என்பதே உண்மை.

"சிறந்த ஒற்றர்களை பெற்றிராத அரசன் வெற்றிபெறுவதற்கு வேறுவழி இல்லை" என அன்றே வள்ளுவர் கூறியுள்ளார். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
13-3-2013

No comments: