Thursday, May 2, 2013

16வயது என்பதால் பயப்படவேண்டியதில்லை!



                                                                                                                     -சாவித்திரிகண்ணன்
  • அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்
  • பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள்
  • 16வயதிலிருந்து பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டைக்குள்ளாக்க வேண்டிய அவசியம்.

போன்றவையே மத்திய அரசு குற்றவியல் சட்டத்திருத்த மசோதா கொண்டுவருவதற்கான தேவையை உருவாக்கியது.

அதற்கு, இதற்கு முன் தேசம் தழுவிய பரந்துபட்ட விவாதங்கள், கடந்த கால குற்றப்பின்னணியில் சம்பந்தப்பட்ட வாயதினர் குறித்த புள்ளி விபரங்கள, பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்களின் கருத்துகேட்புகள் நடத்தப்பட்டிருக்கலாம்.


இதை வர்மா கமிட்டி ஒரளவு செய்தது. அதில் முழுமை இல்லை. இந்நிலையில் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான 'குற்றவியல் சட்டத்திருத்த மசோதா'விற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துவிட்டது. இதில் பாலியல் ரீதியான உறவுக்கான வயது 18லிருந்து 16ஆக குறைக்கப்பட்டுள்ளது. கட்சிகளிடையே இது கடும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சமாஜ்வாதிகட்சி போன்றவை இந்த வயது குறைப்பை கடுமையாக எதிர்த்துள்ளன.

காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்றவை வயது குறைப்பு காலத்தின் கட்டாயம், அவசியம் என்கின்றன.

எதிர்ப்பவர்கள் வைக்கும் வாதம், வயது குறைப்பால் மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் உயிர்ப்பிக்கப்படும், விடலை பருவத்தினரை செக்ஸ் உணர்ச்சிக்கு தூண்டும், கிராமப்புற சிறுபெண்களே கூட பாலியல் உறவில் ஈடுபடக்கூடும், அதிக கற்பழிப்புகள் நடக்கும், சிறுவயது தாய்மார்கள் அதிகரிப்பர்... என்பதாக உள்ளது. ஆனால் ஆதரிப்பவர்களோ, இது தேவையற்ற புகார்களை தவிர்க்கும். 16வயதில் உள்ள பெண்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு வாழ்க்கை அமைத்து தர தடையிருக்காது. சட்டம் சிறு வயதில் திருமணம் செய்வதை ஆதரிக்கவில்லை, வரவேற்கவில்லை.
அதே சமயம் நாட்டில் பல்லாயிரக்கணக்கில் பாதிக்கப்படும் பெண்களில் 16முதல் 18வயதிற்குட்ட பெண்களுக்கு நாள்தோறும் திருமணம் நடந்த வண்ணமுள்ளது. இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடே இல்லை. சிதம்பரம் - தில்லை வாழ் அந்தணர்கள் தொடங்கி சீரழிந்துகிடக்கும் சேரிப்பகுதிகள் வரை பெரும்பாலான திருமணங்கள் 18வயதிற்குள் நடக்கின்றன.

சமீபத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து முதல்வரைச் சந்தித்து தங்கள் சமூகத்திற்கு திருமணவயது வரம்பை 16ஆக தளர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து அழுத்தம் தந்தனர்.

சினிமா, டி.வி, பத்திரிகை, இணையதளம், பற்பல தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் வழி பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டுள்ள ஒரு சமூகத்தில் சட்டத்தால் இது நாள் வரை எதையும் தடுக்கமுடியவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் வயது குறைப்பு பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்க உதவுமென்றால் வரவேற்பதில் தவறில்லை.

40வயது ஆசிரியர் 16வயது மாணவியை காதலித்து ஓடுகிறார்...
17வயது மாணவன் 30வயது ஆசிரியையுடன் ஓடுகிறான்...
எந்த சட்டத்தால் இதை யெல்லாம் தடுக்க முடிந்திருக்கிறது...?
குடும்ப வளர்ப்பு முறைகள், பாலியல் குறித்த புரிதல்கள், கலாச்சாரத்தால் கட்டமைக்கப்படும் கண்ணியம், பண்பாட்டால் வளர்த்தெடுக்கப்படும் பக்குவம், தனிமனித ஆளுமை... இவற்றால் தான் பாலியல் தவறுகளைக் களைய முடியும்.

'சட்டத்தால் எல்லாம் சாதித்துவிடலாம்' என்பது வரலாற்றில் எப்போதும் சாத்தியப்பட்டதாக தகவல்கள் இல்லை.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
18-3-2013

No comments: