Friday, May 24, 2013

ராணுவ தளபதி VS இந்திய அரசு




விரும்பத்தகாத விவாதங்கள் இன்று அனல்தெறிக்க அனைத்து மட்டங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் 120கோடி மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழும் இந்திய ராணுவத்தின் வலிமை மற்றும் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
ஒரு தனிமனிதரின் பிரச்சினை தற்போது எல்லைகளைக் கடந்து நாடாளாவிய விவாதமாகிவிட்டது.
இந்தப் பிரச்சினையின் மூலகர்த்தா இந்தியத் தரைப்படைத்தளபதி வி.கே சிங் என்ற விஜயகுமார்சிங்.
சர்ச்சைக்குள்ளான அவரது பிறந்த வருடம் தொடர்பான விவகாரத்தில், தான் ஒருவருடத்திற்கு முன்னதாகவே ஓய்வுபெறுவதை ஏற்கமுடியாத அவர், நீதிமன்றம் வரை சென்றதை நாடறியும்.
இன்னும் இரண்டுமாதங்களில் ஓய்வுபெறவிருக்கும் வி.கே.சிங் ஒரு ஆங்கில நாளிதழுக்கு தந்த பேட்டியில், சென்றவருடம் இராணுவத்திற்கு முக்கிய தளவாடங்கள் வாங்கும் விவகாரத்தில் தனக்கு 14கோடி லஞ்சம் தர முன்வந்தததையும், அதை தான் மறுத்ததால் பழிவாங்கப்பட்டதாகவும் கூறி, இச்சம்பவத்தில் தன் சக அதிகாரிகளாயிருந்த சிலரின் பெயர்களையும் பாதுகாப்பு அமைச்சர் .கே.அந்தோணி அவர்களிடம் அவர் பேசிய விவரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
இதன் எதிர்வினையாக இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல்தெறிக்கும் விவாதம் மூன்று நாட்களாக தொடர்கிறது. இதைத் தொடர்ந்து வி.கே.சிங் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இராணுவப் பிரச்சினைகள், பற்றாக்குறைகள் தொடர்பாக எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியாகி, ஊர் மட்டுமல்ல, உலகமே கைகொட்டி சிரிக்கும் வண்ணம் இந்திய ராணுவ ரகசியங்கள் அம்பலப்பட்டுள்ளன.
ஜெனரல் வி.கே.சிங் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். அவரது ஊடக பேட்டியில் வெளிப்பட்டவை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு பொறுப்பு மிக்க இராணுவ உயர் அதிகாரி இராணுவ பிரச்சினைகளை பொதுத்தளத்தில் விவாதித்து சர்ச்சை ஏற்படுத்துவது ஏற்புடையதா?
அவர் முயற்சி செய்திருந்தால், உள்ளுக்குள்ளே உக்கிரமாகப் போராட்டம் நடத்தி ஊழலை ஓரளவாவது குறைத்திருக்கலாமே!
இது தவிர இராணுவத்தில் மெகா ஊழல்கள் வி.கே.கிருஷ்ணமேனன், ஜெகஜீவன்ராம் காலம் தொட்டு நடந்து வருவது அரசல்புரசலாக பாமரன் வரை அறிந்த உண்மைதான்!
இதை தடுக்கும் அதிகாரப் பொறுப்பில் இருந்த தரைப்படைத் தளபதி அதற்காக தன் பதவிகாலத்தில் உருப்படியாக ஒன்றும் செய்யாத நிலையில் இன்று உண்மைகளைப் பேசுகிறேன் என குழப்புவது ஏன்? இது ஒரு புறமிருக்க மூன்றில் ஒருபங்கு மக்கள் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் நம் நாட்டில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு ஒதுக்கப்படுவதை விடவும் மிக பிரம்மாண்டமான நிதி இந்தியராணுவத்திற்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. மக்களின் பெருமளவிலான வரிப்பணம் ஒரு சில தரம்கெட்ட இராணுவ தளவாட நிறுவனங்களுக்கும், இடைத் தரகர்களுக்கும், ஊழலில் ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கும் சென்று கொண்டிருப்பது கண்டிப்பாக தடுக்கப்பட்டேயாக வேண்டும். தங்கள் பணத்தையெல்லாம் இராணுவத் தளவாடங்களுக்கு தாரைவார்த்து விட்டு வாயையும், வயிறையும் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானுகோடி எளிய மக்களையும், உயிரைப் பணயம் வைத்து கடும் குளிரிலும், பனிமலைகளின் முகடுகளிலும் காவல் அரணாக நிற்கும் ஆயிரக்கணக்கான சிப்பாய்களையும் ஒரு கணம் மனதில் நிறுத்தி பார்க்கவேண்டிய பொறுப்பு சம்மந்தப்பட்ட அனைவருக்குமே இருக்கிறது.
நமது இராணுவத்தளபதி வி.கே.சிங் நேர்மையானவர். ராணுவத்தில் உயர் பதவிகளை வகித்துவரும் ஒரே குடும்பத்தின் மூன்றாவது தலைமுறைக்காரர். ராணுவத்திற்குள் நிகழ்ந்த சுயநலம் சார்ந்த உள் அரசியலில் அவர் பதவி காலத்தில் ஓராண்டு பறிபோகவுள்ளது. இதை ஒரு மிகப்பெரிய இழப்பாகக் கருதி அவர் மத்திய அரசோடு போராடுகிறார். ஆனால் மத்திய அரசு இதில் உண்மையின் பக்கம் நிற்கவில்லை என்பதே ராணுவதிலுள்ள நேர்மையாளர்களின் கருத்து. அதனால் இப்பிரச்சினையை இதற்கு மேலும் வளர்த்தெடுத்தால் விரும்பத்தகாத விளைவுகளே உருவாகும். விட்டுத் தள்ளுவதே விவேகமாகும்!
28.3.2012