Thursday, April 11, 2013

வழக்குகளின் தேக்கம்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

"நமது நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தற்போது 3கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன...." என மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வானி குமார் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த 3கோடி வழக்குகளில் எத்தனைகோடி மக்கள் சம்பந்தப்பட்டிருப்பார்களோ..! ஆனால் அவர்கள் நீதிமன்ற படிகட்டுகளில் ஏறி இறங்கி அலைகழிந்தே தங்கள் நிம்மதியை இழந்திருப்பார்கள்...

வழக்கு, வாய்தா, வக்காலத்து, இழுத்தடிப்பு... என அலைந்தலைந்தே சொந்த வேலையை சிலர் தொலைத்திருக்கலாம். வழக்கறிஞர் கட்டணத்திற்காக பலர் சொத்துகளை தொலைத்திருக்கலாம்.வழக்கு அலைச்சல்களால் பலர் குடும்ப உறவுகளை தொலைத்திருக்கலாம்.
வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதற்கு நீதிமன்ற அலுவலர்களின் அலட்சியம், வழக்கறிஞர்களின் பொறுப்பின்மை, காவல்துறையின் ஒத்துழைப்பின்மை... என பல காரணங்கள் இருக்கின்றன.
அதே சமயம் நீதித்துறையில் உள்ள நீதிபதிபணியிடங்கள் நிரப்பபடாது இருப்பது மிக முக்கிய காரணமாகும்.

இந்தியாவில் உள்ள 21 உயர்நீதிமன்றங்களில் உள்ள சுமார் 900நீதிபதி பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நிரப்படாமல் உள்ளன. உயர்நீதிமன்றங்களுக்கே இந்த நிலை என்றால் மாவட்ட நீதிமன்றங்கள் போன்ற 1100 கீழ்நிலை நீதிமன்றங்களில் நிரப்பப்படாத நீதிபதி பணியிடங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டியதில்லை...!

சமீபத்தில் பார்கவுன்சில் பொன்விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் "நீதித்துறைபணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும். அதே சமயம் வழக்குகள் விரைந்து முடிய காவல்துறையும், வழக்கறிஞர்களும் ஒருங்கிணைந்து செய்லபடவேண்டும்" என்றார்.
நீதிமன்றங்களை நாடி நீதியை நிலைநாட்டுவதென்றால் தலைமுறைகளைத் தாண்டி தவம் கிடந்தால் தான் உண்டு என்ற நிலைமை தொடருமானால், நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்படவர்களே தங்கள் போக்கில் தீர்ப்பு வழங்க தொடங்கிவிடக்கூடும். பிறகு இதனால் சட்டம், ஒழுங்கை காப்பாற்றுவது சவாலாகிவிடும்.

2001ஆம் ஆண்டு விரைவு நீதிமன்றங்கள் என 1562 அமைக்கப்பட்டு பத்தாண்டுகளில் சுமார் 60லட்சம் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன.
அதன்பிறகு நிதிபற்றாக்குறையால் அந்த நீதிமன்றப் பணிகளில் தொய்வு ஏற்பட மத்திய அரசு காரணமாயிற்று.

நாட்டில் பாலியல் வழக்குகள் மட்டுமே சுமார் 25,000நிலுவையில் உள்ளன. பருவ மங்கையாய் இருக்கும் போது பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பாட்டியான காலத்தில் நீதி கிடைத்தாலென்ன? கிடைக்காவிட்டால் தான் என்ன?

டெல்லி மாணவி கற்பழிப்பு விவகாரத்திற்க்குபிறகு தான் மத்திய அரசு விழித்தெழுந்து பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க மாநில அரசுகளுக்கு உத்திரவிட்டது.

சமீபத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க கிராமபஞ்சாயத்து அளவிலும், சிற்றூர்கள் அளவிலும் நீதிமன்றங்களை அமைக்க, குறிப்பாக நடமாடும் நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டபோது வழக்கறிஞர்கள் இதனை கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

"தங்களிடம் வரும் வழக்குகள் குறைந்துவிடக்கூடாது, விரைவில் முடிந்து விடக்கூடாது..." என்று நினைக்காத வழக்கறிஞர்கள் அபூர்வம்.
எனவே, சட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் வாழ்க்கை தானே வாதாடும் உரிமை வழங்கப்பட்டுள்ளதை உணர்ந்து விபரமானவர்கள் தங்கள் வழக்கை தாங்களே வாதாட முன்வரவேண்டும்.

இதற்கான இலவச சட்ட உதவி மையங்கள் நிறைய ஏற்படுத்தப்படவேண்டும். இந்த சட்ட விழிப்புணர்வால் பல ஏமாற்றங்கள், விரக்திகள் தவிர்க்கப்படும்.

தற்போது தமிழிலேயே ஏராளமான சட்ட புத்தகங்கள் வந்துள்ளன. இது மட்டும் போதுமானதல்ல. அரசாங்கம் தன் கடமைக்கு நீதிமன்றங்களை கம்யூட்டர்மயமாக்கி நவீனபடுத்தி, அனைத்து நீதிபதி பணியிடங்களையும் நிரப்பவேண்டும்.

குறைந்தபட்ச காலக்கெடுவை நிர்ணயித்து விடுவதும், காலம் தாழ்த்தப்படுவதன் பின்லுள்ள அநீதிகளைக் களைவதும் வழக்குகள் விரைந்து முடிவுக்கு வர துணைபுரியும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
08-3-2013

No comments: