Thursday, April 18, 2013

சிவகுமாரின் சிலிர்க்கவைக்கும் பேச்சு


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

கலையுலக மார்கண்டேயர் நண்பர் சிவகுமார் அவர்கள் இந்த எளியோனுக்கு அவர் பேசிய சிடிக்கள் சிலவற்றை அனுப்பினார்.

அதில் 'நேருக்குநேர்' பாகம் -2 என்ற சி.டி கும்பகோணத்தில் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றியது. வீடியோ பதிவு மிகவும் நேர்த்தியாகவும், நுட்பமானதாகவும் ஆரம்பத்திலேயே கும்பகோணக் கோயில்களின் எழிலை கண் முன் கொண்டு வருகிறது.

பார்வையாளர்கள் தரப்பிலிருந்து எழும் கேள்விகளுக்கு அவர் பதில் உரைப்பது போன்றதாக முழுநிகழ்வும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அவர் சிறந்த பேச்சாளரல்ல,
ஆற்றல் மிக்க எழுத்தாளரல்ல,
கரைகண்ட நிபுணருமல்ல,
ஆனால், அவரால் தொடர்ந்து முன்று மணிநேரம் பெருந்திரளான மக்களை இருத்தி தன் பேச்சை கேட்க வைக்க முடிகிறது என்றால் அதற்கு முதல் காரணம் ஜீவத்துடிப்புள்ள பேச்சு! 

அனுபவங்கில் இருந்து உருவம் பெற்ற உரையாடல்!

ரத்தமும், சதையுமாக வெளிப்படும் உணர்ச்சிகள்...!
இவை போதாதென்று அபாரமான தகவல்கள்!

கும்பகோணம் நகரத்தை பற்றி கேட்கும் போது அங்கே பிறந்து சாதனை படைத்த அனைவரையும் நினைவிற்கு கொண்டு வருகிறார். இதன் மூலம் அங்குவந்த பார்வையாளர்களுக்கும் தனக்குமான பலமான பிணைப்பை உறுதிபடுத்திவிடுகிறார்.

சிவாஜியைப்பற்றி அவர் பேசும் போது உணர்ச்சியின் உச்சநிலையில் உரையாடல்களை நிகழ்த்துகிறார். சிவாஜியின் தீவிர ரசிகனாய் அவர் கூறும் விவரணைகள், ரசணைகள், பிரமிப்புகள், சிவாஜியை ஒப்புயர்வற்ற நடிகர் என்பதை நிலை நிறுத்துவதற்காக கூறும் உதாரணங்கள் அனைத்துமே கோடானுகோடி சினிமா ரசிகர்கள் உள்ளத்தின் பிரதிபலிப்புகளே! சிவாஜிக்கும் அவருக்குமான நெருக்கமான சம்பவங்கள் அதில் சிவாஜி வெளிப்படுத்திய உணர்வுகள் போன்றவை கேட்பவர்களின் இதயத்தை இளகவைத்ததை கண்கூடாகக் காண முடிந்தது. ஈரமுள்ள இதயங்களை கசியவைத்து கண்ணீர்துளிகளை சிந்தவைத்தது. 

எம்.ஜி.ஆரின் ஈகை குணத்தைக் கூறும் போது அவர் கும்பகோணத்தில் சிறுவயதில் இருந்தவர் என்பதை கூறத் தவறவில்லை.

பத்மினியைச் சொன்னதாகட்டும், ஜெமினிகணேசன் ஒரே ஒரு நாள் அவருக்கு சாப்பாடு ஊட்டியதை நா தழ,தழக்க நினைவுகூர்ந்து தந்தைக்கு இணையாக பாவித்ததைக் கூறியதாகட்டும், நாகேஷின் பன்முகத்திறமைகளை வியந்தோதியதிலாகட்டும், தமிழ்சினிமா ஸ்டுடியோ அதிபர்களை நினைவுகூர்ந்ததிலாகட்டும், அதிலும் குறிப்பாக ஏ.வி.எம் நிறுவன அதிபர் மெய்யப்பச் செட்டியாரை நினைவுகூர்ந்ததிலாகட்டும், அவரது நாடக உலக ஆசான் மேஜர் சுந்தரராஜனின் மேன்மைகளை விளக்கியதிலகாட்டும் மனித உறவுகளை பேணி வருவதில் அவர் காட்டிவரும் அக்கறை, மற்றும் நன்றியுணர்வில் தான் அவரது வெற்றி புதைந்துள்ளது என்பதை உணரமுடிகிறது.
தமிழ்நாட்டின் நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை ஏறத்தாழ அவர் முழுமையாகக்கூறி அனைவரையும் ஒரே தட்டில் நிறுத்திவிட்டார். இதில் யார் மனதும் புண்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறை மேலோங்கியிருந்தது. ஆனால் இவர்களில் கலைவாணர் என்.எஸ்கிருஷ்ணரின் சமகாலத்தவரான காளிஎன்.ரத்தினம் விடுபட்டது ஆச்சரியமே!

நடிப்பில், பாடுவதில், அங்கசேஷ்டைகளை துல்லியமாக வெளிப்படுத்துவதில், நவசரமுக பாவங்களை கொண்டுவருவதில் நிகரற்றவராக நிகழ்ந்த காளி என்.ரத்தினம் தொடர்ந்து கண்டுகொள்ளப்படாதவராக இருப்பதால் இந்த கவனக்குறைவு நிகழ்ந்திருக்கலாம்.

சபாபதி படம் ஒன்று போதும் காளி என்.ரத்தினத்தின் புகழை என்றென்றும் நிலைநாட்டுவதற்கு! அதில் கதாயாகனையும் விஞ்சி முக்கியத்துவம் பெற்றார் என்பதற்கு படத்தில் அவருக்கு ஐந்து பாடல்கள் தரப்பட்டிருந்தன என்பதே சாட்சி!

இது போன்ற சிற்சில கவனக்குறைவுகள் அவரது பேச்சில் தவிர்க்கமுடியாதவை! ஏனெனில் அவர் ஒரு குறிப்பிட்ட சப்ஜெக்டை மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏறத்தாழ சூரியனுக்கு கிழுள்ள அனைத்து விசயங்களையும் சகட்டுமேனிக்கு பேசுகிறார்.
எந்த ஒரு குறிப்பிட்ட கேள்விக்கும் குறிப்பிட்ட பதில் மட்டும் தருவதோடு அவர் நிறுத்திக் கொள்வதில்லை. அந்த பதில்களில் சம்பந்தப்பட்ட மனிதர்கள், சம்பவங்கள் என்னென்னவோ அவை அனைத்தையும் வலிந்து தன் பேச்சுக்குள் கொண்டு வருகிறார்.
இதன் வழியாக மன எழுச்சியோடு, எடுத்துக் கொண்ட பொருளுக்கு மாறாகவும் பற்பல திசைகளில் சஞ்சரிக்கிறார். ஆனால் இவை பார்வையாளர்களுக்கு சலிப்பு ஏற்படுத்துவதில்லை. எனினும் ஒரளவாவது அவர் இவற்றை தவிர்க்கலாம்!

இறுதியாக நிகழ்ச்சி முடிந்து ஒரு ஜவுளிக்கடையைத் திறந்துவைக்கையில் ஒரு பெண்மணி தமிழகத்தில் மதுபெருக்கம் சிறுவர்களை சீரழிப்பது குறித்து கேள்வி கேட்கையில் அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை மணியாகவும், வேண்டுகோளாகவும் வைக்கும் கோரிக்கை அட்சரலட்சம் பெறும். உண்மையிலேயே இந்த மனிதர் சமூகபிரக்ஞையுடன் சிந்திப்பவர் என்பதில் சந்தேகமே இல்லை!

ஓட்டுமொத்த சி.டி.யும் பார்த்து முடிந்த போது சிவகுமார் எப்போது மகாபாரதத்தைப் பற்றி பேசப்போகிறார் என்ற ஆவலை உண்டாக்கிவிடுகிறார். ஏனெனில் மாகபாரதக் காவியத்தை நன்கு உள்வாங்கியவர்களால் சக மனிதர்களை புரிந்துகொள்வதில், சமூகத்தை தெரிந்து தெளிவதில், அரசியல் போக்குகளை, ஆன்மீகநுட்பங்களை நன்கு உணர்வதில் தேர்ச்சி பெறமுடியும். இது நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் துணைபுரியும்.
எனவே அந்த மகாகாவியம் - எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழிவில்லாத சிரஞ்ஜிவித்துவம் பெற்ற இலக்கியம் - சிவகுமார் வழியாக இன்றைய இளையதலைமுறைக்கு அறிமுகமாகவேண்டும். 

No comments: