Friday, March 8, 2013

உணவு பாதுகாப்பு மசோதா


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

உணவுப்பொருள்களை ஏழை, எளிய, நடுத்தர பிரிவு மக்களுக்கு மிகக்குறைந்த மானிய விலையில் வழங்குவதிலும், உணவுப்பொருட்களை கடைகளில் விநியோகம் செய்வதில் ஒரு ஒழுங்கு முறையை ஏற்படுத்துவதிலும் பல ஆண்டுகால அனுபவங்களை கணக்கில் கொண்டு ஆய்வு செய்து உருவாக்கப்பட்டது உணவு பாதுகாப்பு மசோதா.

இந்த மசோதா இன்று சில அரசியல்கட்சிகளாலும், வியாபார அமைப்புகளாலும் எதிர்க்கப்படுகிறது. 

மற்றொரு பக்கம் சமூக ஆய்வாளர்களாலும், பொதுநலன் விரும்பிகளாலும் வரவேற்கப்படுகிறது.

இம்மசோதா என்ன தான் சொல்கிறது என சுருக்கமாக பார்ப்போம்.
இது வரையிலுமான பொது விநியோகத்திட்டம் அதிக செலவுகளையும், அதிக விரயங்களையும் கொண்டுள்ளது. இவற்றை சீர்செய்து உரிய பயனாளிகள் பயன்பெறும் வகையிலும், இந்தியாவில் யாரும் பசியால் மடிந்தார்கள் என்ற பழியிலிருந்து தப்பவும் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் அதிகமாகப் பயன்பெறவும், மானிய உதவி தேவைப்படாதவர்களை விலக்கி, வழங்கப்படும் உதவி உரியவர்களுக்கு சென்று சேர்வதை உறுதிபடுத்துகிறது.

ஆனால், இந்தியாவில் பொது விநியோகத்திட்டத்தை, அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை அரசியல் சுயலாபத்திற்கு குறிப்பாக ஓட்டு அறுவடைக்கு பயன்படுத்திவரும் அரசியல் கட்சிகள் இம் மசோதாவை கடுமையாக எதிர்காவிட்டால் தான் நாம் ஆச்சரியப்படவேண்டும்.

வறுமையில் உழல்பவர்கள், ஓரளவு வாங்கும் வசதியுள்ளவர்கள் என இரு பிரிவாக மக்களை பிரிக்க கூடாதாம்! அனைவருக்கும் ஓட்டு மொத்தமாக மானியங்களை அள்ளித் தந்துவிடவேண்டுமாம்.
இது தான் அரசியல் கட்சிகள் வைக்கும் வாதம்! அடுத்ததாக வியாபார அமைப்புகளின் எதிர்ப்புகளை பார்ப்போம்.

உணவு தானிய விநியோகத்தில் நிகழும் கடத்தல், கலப்படம், தரக்குறைவு, காலாவதியானவற்றை விற்பனைசெய்வது போன்றவைகளை தடுக்கும் விதமாக இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விற்பனைவளாகங்களும், அதன் சுற்றுப்புறங்களும் சுத்தமாக இருப்பது, உணவுப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடமும், உணவு உற்பத்தி செய்யப்படும் இடமும் வெளிச்சமாக, காற்றோட்டமாக, எலிகள், பூச்சிகள் இல்லாதவகையில் இருக்க வேண்டி வரையறுக்கிறது இம்மசோதா.

உணவுக்கு பயன்படுத்தும் தண்ணீர் மாசில்லாமல் இருக்கவேண்டும். சூடான உணவுபொருட்களை பிளாஷ்டிக், பாலீதீன் பைகளில் 'பேக்' செய்வதையும் இம்மசோதா தடுக்கிறது. அத்துடன் சமைப்பவர்கள் நோயாளிகளாக இருக்ககூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறது.

நமது நாட்டில் இவையெல்லாம் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை.
எனவே இவற்றை கடைபிடிப்பது ஆரம்பத்தில் நமக்கு மிகச்சிரமமாக இருக்கும். ஆனால் இவை அவசியமானவை என்பதில் யாருக்குமே மாற்று கருத்து இருக்க முடியாது.
அதனால் தான் உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு இடைக்காலத் தடை வழங்க முடியாது என நீதிபதி சந்துரு உறுதிபட தெரிவித்துவிட்டார்.

அதே சமயம் இது அமல்படுத்தப்படுவதற்கான கால அவகாசத்தை அதிகப்படுத்தலாம். அதிலிருந்து விலக்கு பெற விரும்பும் சிறு வியாபாரிகளின் கோரிக்கையை பரிசிலீக்கலாம். நமது நாட்டில் சிறு வியாபாரிகளையும், சிறிய 'கேட்டிரிங்' அமைப்புகளையும் முறைப்படுத்துவது எளிதான விஷயமல்ல.

எனவே, உணவு பாதுகாப்பு மசோதாவின் சட்டதிட்டங்களை கடைபிடிக்கும் நிறுவனங்களை அங்கீகரித்து அடையாளப்படுத்தலாம். அதன் மூலம் தரமான உணவுப்பொருட்களை வாங்க விரும்புவர்களின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கும்.
நல்ல சீர்திருத்தங்கள் எதிர்பபுகள் இல்லாமல் அமலாவதில்லை. 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
05-2-2013

No comments: