Monday, March 18, 2013

குண்டுவெடிப்புகள் -என்ன செய்யவேண்டும்?


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

தீடீர் தீடீரென அரங்கேறும் குண்டுவெடிப்பு சம்பவங்கள்...
குற்றுயிராய் குலைந்து போன சடலங்கள்...
குருதி வழிய உயிருக்கு போராடும் மனிதர்கள்...
நிச்சயமில்லாத வாழ்க்கை தான் மனிதனுக்கு, என்றாலும் அது நிம்மதியற்ற வாழ்க்கையாகவும் 1990க்குப் பிறகு மாறிக்கொண்டிருக்கிறது - இந்தியாவில்!

மதவாத அரசியல் தலையெடுக்கத் தொடங்கியதிலிருந்து நாட்டில் பயங்கரவாதச் செயல்களுக்கு பஞ்சமில்லை என்றாகிவிட்டது.

பயங்கரவாதத்தை கையிலெடுத்தவர்கள் மதத்தையும் தொலைத்து விடுகிறார்கள், மனிதத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.
உளவுத்துறையின் பலவீனமா? என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பே உளவுத்துறை எச்சரித்துள்ளதை பா.ஜ.கவின் வெங்கையா நாயுடுவே பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

அப்படியானால் காவல்துறையின் கவனக்குறைவா?
மாநில அரசின் அலட்சியப் போக்கா? என்றால்,
"இல்லை நாங்களும் கவனமாகத் தான் செயல்பட்டோம்" என்கிறார் ஆந்திரமுதல்வர். இத்தகைய தொடர்குண்டு வெடிப்பு நிகழ்வுகள் பாகிஸ்தானுக்கு பழக்கமானது. இப்போது இந்தியாவுக்கு பழக்கமாகிக்கொண்டிருக்கிறதோ என்ற அச்சமேற்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் 20க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை இந்தியா அனுபவித்து விட்டது.

20 ஆண்டுகளில் இந்தியாவில் குண்டுவெடிப்பு நிகழாத மாநிலமே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

அமைதி பூங்காவான தமிழகம் 1998ல் கோவை தொடர்குண்டுவெடிப்பைக் கண்டது. அதற்குப் பின் அசம்பாவிதங்கள் இல்லை என்பது ஒரு ஆறுதல்.

ஓட்டுவங்கி அரசியல் தான் பயங்கரவாதச் செயல்களுக்கான விதையைத் தூவுகிறது.

இப்படி ஓட்டுவங்கி அரசியல் செய்பவர்களே. இந்த உண்மையை ஒப்புக்கொண்டாலும், "அதை நாங்கள் செய்யவில்லை
அவர்கள் தான் செய்கிறார்கள்" என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விடுகிறார்கள்.

இரு கைகளும் சேர்ந்து தட்டும் போது தான் சத்தம் ஏற்படுகிறது என்பது மக்களுக்கு புரியாமலில்லை.

"பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும், ஒழிக்கவேண்டும்" என்று ஆக்ரோஷமாகப் பேசிப்பேசி வளர்த்துவிட்டுக் கொண்டிருக்கும் சூது நிறைந்த அரசியலே இந்திய அரசியல்!

ஆயிரம் துப்பாக்கியால் சாதிக்க முடியாததை அறிவின் பலத்தோடு சாதிக்க முடியும். அருள் நிறைந்த இதயத்தால் சாதிக்க முடியும்.

வேகவேகமாக நிறைவேற்றப்பட்டு வரும் தூக்குதண்டனைகள் நியாயமா? அநியாயமா? என்ற விவாதித்திற்குள் நாம் செல்ல விரும்பவில்லை!
ஆனால் விவேகமானது தானா? என்று கண்டிப்பாக மறுபரிசிலனை செய்தாக வேண்டும்.

அறம் சார்ந்த அரசியலை குழிதோண்டிப் புதைக்கும் மோசமான அரசியலை நடத்திக்கொண்டு 'பயங்கரவாதத்தை ஒழித்துகட்டுவோம்' என்பது வெறும் பாசாங்காகவே பார்க்கப்படும்.

பயங்கரவாதத்திற்கு எதிராகவோ அல்லது பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியோ வெளிப்படும் உணர்ச்சிகரமான சொல்லாடல்களை தவிர்த்துவிட்டு மனிதநேயத்தோடு சுயபரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள்.

தற்போதைய தேவை - நிதானமான - பாரபட்சமற்ற அரசியல் நிர்வாகச் செயல்பாடுகளே!

வெறுப்பு, பகைமை, துவேஷத்தை தவிர்த்த விவேகமான அரசியல் தலைமையால் தான் பயங்கரவாதத்தால் உண்டாகியிருக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியும்.
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
22-2-2013



No comments: