Monday, March 18, 2013

ரயில்வே பட்ஜெட்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டாயிற்று..
சில எதிர்பார்ப்புகள், பல ஏமாற்றங்கள் கலந்த கலவை தான்! எப்படி பார்த்தாலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் இதற்கு மேல் சிறப்பான ஒரு ரயில்வே பட்ஜெட்டை தந்துவிட முடியாது.
புதிய ரயில்கள் விடப்படுமா? ஆம், 94 புதிய ரயில்கள் விடப்பட உள்ளன.

ஆனால், இது நடைமுறைக்கு எப்போது வரும் என்பதை சொல்லமுடியாது. சென்ற ஆண்டு 175 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அறிவிக்கப்பட்டதில் பாதி கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
ஆனாலும், பட்ஜெட்டுக்கு பட்ஜெட் மக்களுக்கு தாற்காலிகமாகவேனும் ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதை பாராட்டத்தான் வேண்டும்!
இந்தியாவில் ரயில்வே துறை என்பது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாம் பெற்ற பெரும் பலனாகும். 1853ல் ஆரம்பித்து 1947வரை அவர்கள் உருவாக்கித் தந்த அடிப்படை கட்டமைப்புகளின் மேல் தான் நாம் பெருமளவு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கடந்த 65 ஆண்டுகளில் புதிய ரயில் பாதைகளை 20 விழுக்காட்டிற்குமேல் நம்மால் அதிகரிக்க இயலவில்லை. ஆனால் பயணிகள் எண்ணிக்கையோ 2000விழுக்காடாகிவிட்டது!

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல் புதிய நில ஆர்ஜிதமில்லாமல் புதிய ரயில்பாதைகள் சாத்தியமில்லை. அது வரை குண்டுசண்டிக்குள் குதிரை ஒட்டுவது போல் ஜிகினா அறிவிப்புகள் தான் தர முடியும்.

1,52,000 புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்கிறார் ரயில்வே அமைச்சர். ஆனால் ரயில்வேயில் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களோ இதைக்காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாயுள்ளன. ஆனால்,வேலைவாயுப்புகளில் 47,000பணியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு என்பதை மனம் திறந்து பாராட்டித்தான் ஆகவேண்டும்!

வெளிநாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பே அதிவேக புல்லட் ரயில்கள் அறிமுகமாகிவிட்டன. ஆனால் இப்போது தான் நாம் இதற்கு ஆரம்ப கட்ட வேலைகளை செய்யவுள்ளோம். மற்ற நாடுகளில் 500கி.மீ வேக ரயில்கள் இயங்கும் போது இங்கே 160கி.மீ வேகமே சாதனையாக பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் பயணிகள் கட்டணம் ரூ 12,000 கோடிஉயர்த்தப்பட்ட நிலையில் தற்போது உயர்த்தாது அதிசயமல்ல. அதே சமயம் சூப்பர் பாஸ்ட் ரயில்கள், தக்கல் முறை போன்றவற்றிற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சரக்கு கட்டண உயர்வு சகல விலை உயர்வுக்கும் அடித்தளமிடும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1856ல் உருவாக்கப்பட்ட முதல் ரயில்வே ஸ்டேசன் - வடசென்னை ராயபுரத்தில் 70 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருந்தும் - இன்னும் நவீனப்படுத்தப்படாமல்அலட்சியப்படுத்தப்பட்டுவருவது அநீதியாகும்!

ஆளில்லா ரயில்வே கேட்கள் மூடப்படும் என்பது தீர்வாகாது. ஒன்று ஆட்களை நியமிக்கவேண்டும் அல்லது நவீனமயப்படுத்தப்பட்ட தானாக மூடித்திறக்கும் கேட்கள் நிறுவப்படவேண்டும். நவீனப்படுத்த வேண்டிய சிக்னல்கள், கம்யூனிகேஷன்கள், இண்டர்லாக்கிங்சிஸ்டம் போன்றவை வரும் போது தான் மக்கள் பலனடைய முடியும்.

அடிக்கடி நிகழும் ரயில்விபத்துகள், உயிர்பலிகள் போன்றவை குறித்த சுயபரிசிலனை ரயில்வேதுறையிடம் எதிர்பார்க்க முடியாது. இதற்காக உருவாக்கப்பட்ட கமிட்டிகளின் பரிந்துரைகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை. பாதுகாப்பான பயணத்திற்கான உத்திரவாதம் எல்லா பட்ஜெட்டிலும் இருப்பது போல் இந்த பட்ஜெட்டிலும் இருக்கிறது. அவ்வளவே! நாளொன்றுக்கு இரண்டரைகோடி பயணிகளை பெற்றுள்ள ரயில்வேதுறை அதற்கு தக்க லாபத்தில் ஏன் செயல்படமுடிவதில்லை? 10,40,000 பணியாளர்களைக் கொண்டுள்ள ரயில்வே 10,000கோடி லாபத்தைகூட ஈட்ட முடியவில்லை. என்பது ரயில்வே நிர்வாகத்திறன் போதாமையைத் தான் உணர்த்துகிறது.

12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு ரயில்வேக்கு தேவைப்படும் தொகை இரண்டரை லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேவைக்கும் யதார்த்த நிலைமைக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பது கண்கூடாகும்!
இந்திய மக்கள் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தை தான் மிகவும் விரும்புகின்றனர். அப்படி விருப்பப்படும் அனைவருமே பயணப்படத்தக்க வகையில் ரயில்வே துறை விருத்தியாக வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
26-2-2013

No comments: