Saturday, March 9, 2013

மாநிலகட்சிகள் வளரட்டும் - தேசிய உணர்வுகள் சிதையாமல்!



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

தமிழக முதல்வர் ஜெயலலிதா போகிற போக்கில் ஒரு சரவெடியை இன்று கொளுத்தி போட்டுள்ளார்.

"தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் தேசியகட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது!"

இந்த கருத்தில் இப்போதைய நிலைமையில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்!

இதே நிலை தான் இப்போது ஏறத்தாழ தேசிய அளவிலும் உள்ளது. இனி தேசிய கட்சிகள் தலைகீழாக நின்றாலும் தனித்து மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது.

கடந்த 20ஆண்டுகளாக தேசிய கட்சிகள் நாளுக்கு நாள் தேய்பிறையாகி, கூட்டணி அமைப்பதன் மூலமே மத்திய அரசில் அதிகாரத்திற்கு வர முடிகிறது. வரப்போகும் 2014 தேர்தலில் இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் தற்போது தங்களுக்கிருக்கும் எண்ணிக்கை பலத்தை கூட தக்கவைத்துக் கொள்ள முடியாத சூழலே நிலவுகிறது.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின் வளர்ச்சி காங்கிரசுக்கு பெரும் பின்னடைவைத் தரும். அதே போல் கர்நாடகாவில் எடியூரப்பாவின் கட்சி பா.ஜ.கவின் வாக்கு வங்கியை பாதிக்கும்.

ராஜஸ்தானிலும், கோவாவிலும் காங்கிரஸுக்கு முன்பிருந்த பலம் தற்போது குறைந்துள்ளது. அசாமில் அந்நிய ஊடுருவலை தடுக்க சக்தியற்ற ஆட்சி காரணமாக காங்கிரஸ் ஆட்டம் கண்டுள்ளது.

இதேபோல் பா.ஜ.கவும் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், இமாச்சலபிரதேசம் போன்றவற்றில் பலம் குறைந்து வருகிறது.
ஆனால், மாநில கட்சிகள் தற்போது வளர்ந்து வருகின்றன.

தேசியகட்சிகளில் ஏற்படும் பிளவே மாநில கட்சிகள் பிறப்பதற்கும், வளர்வதற்கும் வழி கோலுகிறது.

தமிழகத்திலும், பஞ்சாபிலும் 1967க்குப் பிறகு இழந்த ஆட்சியை காங்கிரசால் மீண்டும் மீட்டெடுக்க முடியவில்லை. 

1970களின் ஆரம்பத்தில் மேற்குவங்கத்தில் பறிகொடுத்த ஆட்சியை காங்கிரஸால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. 

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன்சமாஜ்கட்சி ஆகியவற்றிற்க்கு அடுத்த நிலையில் தான் காங்கிரசும், பா.ஜ.கவும் வருகிறது. 

பீகாரில் நிதிஸ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளமும், ஒரிசாவில் நவீன்பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளமும், பஞ்சாபில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அசாலிதளமும், 
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணமுள் காங்கிரசும் 
தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.திக என மூன்று மாநிலகட்சிகளும்
காங்கிரஸ், பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியுள்ளன.

தேசியகட்சிகளின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணங்கள்; அதன் தேசிய தலைமைகள் அதிகாரங்களை குவித்துக் கொண்டு மாநிலங்களில் மக்கள் ஆதரவுபெற்ற தலைமை வளராமல் தடுத்ததாகும்.

அடுத்ததாக, தெலுங்கானா பிரச்சினை, காவிரி பிரச்சினை உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சினையிலும் மக்கள் நலன்சார்ந்த உறுதியான முடிவெடுக்க முடியாத கோழைத்தனமான தலைமைகள் இருப்பது.
மேலும் தேசியகட்சிகளின் தலைமைகள் அந்தந்த மாநிலங்களுக்கேயுள்ள பிரச்சினைகள், மாநிலமக்களின் உணர்வுகள் இவற்றை புரிந்துகொள்ளக் கூட அக்கரைப் படாமல் மிகவும் அந்நியப்பட்டு போனதாகும்.

எனவே, தமிழக முதல்வர் பேசியுள்ளதை ஒரு விரிந்து, பரந்த தளத்தில் பார்க்கும் போது இனி இந்தியாவில் மாநிலகட்சிகளின் சகாப்தம் தான்! மாநிலகட்சி தலைமைகளால் தான் தேசிய அரசியலே தீர்மானிக்கப்படும்.

இந்தியாவில் தேசியகட்சிகள் சிறுத்துப் போகலாம் ஆனால் தேசிய உணர்வும், தேசிய நீரோட்டமும் சிறுத்துப் போய்விடலாகாது. 30க்கு மேற்பட்ட தேசிய இனங்கள், நூற்றுக்கணக்கான தெய்வநம்பிக்கைகள், விதவிதமான பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், ஏராளமான மொழிகள்...
என அனைத்தையும் சுதந்திரப்போராட்டத்தில் மகத்தான தியாகங்களே ஒன்றுபடுத்தி பாரத தேசத்தை கட்டமைத்தது.
இதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தேசிய கட்சிகளுக்கானது மட்டுமல்ல மாநிலகட்சிகளுக்கும் தான்!நிச்சயம் காப்பாற்றப்படும் என நம்புவோம்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
15-2-2013 

No comments: