Saturday, March 9, 2013

மது எதிர்ப்பு போராட்டங்கள்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி தமிழகம் முழுமையிலும் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் பெருந்திரளான ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியே எதிர்பார்க்காத வகையில் இந்த ஆர்பாட்டங்களுக்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக பெண்கள் மது எதிர்ப்பு கோஷம் எழுப்பி தங்கள் உணர்வை எழுச்சியோடு வெளிபடுத்தி உள்ளனர்.

அந்த அளவிற்கு மதுவின் ஆதிக்கம் பெண்களின் நிம்மதியை குலைத்துள்ளது. குடும்பங்களை சிதைத்துள்ளது..!

காந்திய இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமே மதுவை எதிர்த்து பிரச்சாரம் செய்த நிலைமாறி இன்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளாக மதுவிற்கு எதிராக இயக்கங்கள், போராட்டங்கள் நடத்துகின்றன என்றால், அது மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் நிர்பந்தங்கள், அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

தமிழகத்தில் மதுவிற்கு எதிராக பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவரும் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி, பற்பல போராட்டங்களை நடத்தியுள்ளது. பா.ம.க தந்த நிர்பந்தத்தால் சென்ற ஆட்சியில் மதுவிற்பனை நேரம் சிறிதளவு குறைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதும் பழைய நிலைமையே மீண்டும் அமலாகிவிட்டது.

இதன்பிறகு தமிழருவிமணியனின் காந்திய மக்கள் இயக்கம் மதுஎதிர்ப்பை மக்கள் நலன் சார்ந்து முனைப்பாக மேற்கொண்டது. இதன் விளைவாக ம.தி.மு.கவும், மனிதநேய மக்கள் கட்சியும் மது எதிர்ப்பில் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளன.

வைகோ மிக நீண்ட நடைபயணத்தை தன் தொண்டர்களுடன் தென் தமிழகத்தில் நடத்தியபோது மக்களின் மகோன்னத ஆதரவு மதுவிற்கு எதிராக வெளிப்பட்டது.

"தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்ற சம்பத்தில் மதுவின் பின்ணணி இருக்கிறது" என்று வைகோ கூறுவதை அலட்சிப்படுத்த முடியாது.
மதுவால் குடும்பத்தகராறு, வறுமை, குழந்தைகளின் பசி, பட்டினி கொடுமைகள், படிப்பு பழாவது... குடும்ப வன்முறை கொலையில் முடிவது, குழந்தைகள் அநாதைகளாவது... என எண்ணற்றதீமைகள் அரங்கேறுகின்றன.

இதனால் தான் நீதிநூல்கள் அனைத்திலும் மதுவை தவிர்க்கும் படி கூறப்பட்டுள்ளது.

"தீமைகள் அனைத்திற்கும் தாயான தீமை - போதை தரும் மதுவே" என நபிகள் கூறியுள்ளார்.

மதுவிற்பனையின் அதிகரிப்பு அதற்கு இணையாக சாலைவிபத்துகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காந்தியப்போராட்டங்களால் 'மதுகுடிப்பது பாவகரமானது' என்ற எண்ணம் சமூகத்தின் பொது மனசாட்சியிடம் இருந்தது. மதுவிலக்கு தளர்த்தப்பட்டு அரசாங்கமே மது விற்பனையில் ஈடுபடத் தொடங்கியது முதல் குடிப்பழக்கம் சமூக கலாச்சாரமாக மாறியது. சிறுவர்களும், பெண்களில் சிலரும் கூட மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர்.



தமிழகத்தில் சுமார் 7,000மதுபானக் கடைகளும், சுமார் 4,000 மதுபார்களுமாக திரும்பிய திக்கெல்லாம் தென்படுவதால் - பார்ப்பவர் மனதில் சலனமும், சபலமும் தோன்றி குடிப்பழக்கம் வேரூன்றுகிறது.
அரசாங்கத்திற்கான வருமானம் என்பது மக்களின் வருமான இழப்பாக குடும்பங்களின் பசி, பட்டினி, வன்முறை வேதனையாக - கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூகத்தீமையாக - மொத்தத்தில் மக்கள் நலனுக்கே தீமையாக - உருமாறி வருவது கண்ணுக்கு புலப்படும் யதார்ததமாக உள்ளது.

எனவே, உடனடியாக பூரணமதுவிலக்கு சாத்தியமில்லை என்றாலும், படிப்படியாக மதுவிற்பனையை மட்டுப்படுத்துதல், மதுக்கடைகள், பார்களை குறைத்தல், மதுவிற்பனை நேரத்தை குறைத்தல் ... என அமல்படுத்தப்படுமானால் கூட அதில் தமிழ் சமூகம் அளப்பரிய நன்மைகள் பெறும்! குறிப்பிடத்தக்க அளவு தீமைகள் குறையும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
18-2-2013

No comments: