Friday, March 8, 2013

காணாமல் போகும் குழந்தைகள்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொது நல வழக்கால் ஒரு பூகம்பத்தின் அதிர்வுக்கு இணையான குலைநடுங்க வைக்கும் குழந்தைகள் கடத்தல் செய்தி அம்பலமாகியுள்ளது.

நமது நாட்டில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகின்றன. அதுவும் குறிப்பாக ஏழை,எளிய குடும்பத்தின் குழந்தைகளே இவ்விதம் காணாமல் போகின்றனர்...! காணாமல் போகும் குழந்தைகள் கடத்தப்பட்டு பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். காணாமல் போகும்குழந்தைகளில் மிகச்சிலரே கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோருடன் இணைகின்றனர் என்பதே அந்தச் செய்தியாகும்!

நமது அரசுகள் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக மிகுந்த அலட்சியத்தை காட்டுகின்றன என்பது இதை விட அதிர்ச்சி தருவதாகவுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு ஜனவரி 17ல் விசாரணைக்கு வந்த போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை உள்ளடக்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் சம்மந்தப்பட்ட கோவா, ஒரிசா, தமிழ்நாடு, குஜராத், அருணாசலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் - பிப்பரவரி -5ல் நேரில் ஆஜராகவேண்டும் என ஆணையிட்டனர். ஆனால், தமிழ்நாடு, குஜராத், அருணாசலபிரதேச தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.

இதனால் உச்சநீதிமன்றம், "சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அடுத்தமுறை ஆஜராகவில்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்" என கடுமையாக எச்சரித்துள்ளது.

குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து நமது ஆட்சியாளர்கள் ஏன் இவ்வளவு அக்கரையின்மையுடன் இருக்கிறார்கள்...? ஒருவேளை அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லாதது கூட ஒரு காரணமோ...? தெரியவில்லை!

ஆனால், உச்சநீதிமன்றம் குழுந்தைகள் விஷயத்தில் காட்டும் தீவிர அக்கறை, புண்பட்ட இதயங்களுக்கு ஒரு அருமருந்தாகவுள்ளது!

இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவைச் சுற்றிலுமுள்ள நாடுகளில் மட்டுமே 2011-12-ஆம் நிதியாண்டில் கடத்தப்பட்ட குழந்தைகளில் மீட்டெடுக்கப் பட்டவர்கள் 1,26,321. மீட்டெடுக்கப்படாத சிறார்களோ பல லட்சம்!
அதுவும் குறிப்பாக கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவில் மட்டுமே 50,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். தினசரி சராசரியாக 100 குழந்தை களேனும் காணாமல் போகின்றனர்..!

இதெல்லாமே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்!

காணாமல் போகும் குழந்தைகளில் பெற்றோர், உறவினர்களால் கைவிடப்பட்டவர்களும் கணிசமானவர்கள். 

வறுமை, பெற்றோர்களின் முறைகேடான பாலியல் உறவுகள் போன்றவை குழந்தைகளை நிர்கதியற்றவர்களாக்குகின்றன.

இப்படி நிர்கதியான குழந்தைகளை சமூக விரோத சக்திகள் கடத்தி, குழந்தை தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாக, பிச்சைகாரர்களாக மாற்றி விடுகின்றனர்!

இவை தவிர, படிக்க மறுக்கும் சிறார்கள், குடும்ப வன்முறைக்கு இலக்காகும் சிறார்கள் தாங்களே வீட்டை விட்டு ஓடிப்போய் பல்வேறு இக்காட்டுகளில் மாட்டிக் கொள்கின்றனர். 

சென்ற ஆண்டு தற்கொலை செய்து கொண்ட சிறார்களின் எண்ணிக்கை மட்டுமே 8000 என்பது நாம் குழந்தைகளை வீடுகளிலும், கல்விக் கூடங்களிலும், பொதுதளங்களிலும் எவ்வாறு நடத்துகிறோம் என்பதற்கு அத்தாட்சியாகும்!

வருங்காலத் தலைமுறையை உரியமுறையில் வளர்த்தெடுக்காத சமூகம் - குழந்தைகளின் நலனை, உரிமைகளை காப்பாற்றத் தவறிய ஒரு சமூகம் - சாபத்திற்குரியது.

குழந்தைகள் என்பவை குறிப்பிட்ட இரு பெற்றோருக்கு பிறந்திருக்கலாம். ஆனால், அவர்களை பேணி வளர்ப்பதில் அரசுக்கும், ஓட்டு மொத்த சமூகத்திற்கும் உள்ள பொறுப்பு மிகவும் முக்கியமானது. அனைத்து குழந்தைகளுமே நாட்டின் சொத்து. மனித குலத்தின் மகத்தான பொக்கிஷங்கள்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
06-2-2013

No comments: