Friday, March 8, 2013

'விவசாயக் கடன் ரத்து'


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

"விவசாயிகளுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ள ரூ 70,00கோடி ரத்து செய்யப்படலாம். இதன்மூலம் விவசாயிகள் நலனில் அக்கரை கொண்ட அரசு தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்பதை நீங்கள் உணரவேண்டும்"

மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ஹரியானாவில் நடந்த விவசாயிகள் பேரணியில் இவ்விதம் பேசியுள்ளார்!

2014 தேர்தலை மனதில் வைத்து பேசப்பட்ட பேச்சு தான் இது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2008ல் இதே போல் ரூ 52,000கோடி விவசாயக் கடனை இதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ரத்து செய்தது. இந்த விவசாயக்கடன் ரத்து தொடர்பாக மத்திய கணக்கு தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கை பல அதிர்ச்சிகரமான தகவல்களை நமக்கு சுட்டிக் காட்டியது.

இந்த கடன் ரத்தால் பலனடைந்த பல லட்சம் பேர் விவசாயத்திற்கே சம்பந்தமில்லாதவர்கள். மற்ற பல லட்சம் பேரே ஒரளவு விவசாயதம்தில் தொடர்புடையவர்கள் எனினும் கடன் தள்ளுபடிக்கு தகுதியில்லாதவர்கள்.

விவசாயக்கடன் வழங்கல் தொடர்பான கணக்குகளை ஆராய்ந்ததில் சுமார் 20,000க்கு மேற்பட்ட கணக்குகளில் ஆவணமோசடி நடந்துள்ளன.
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெருமளவிலான உண்மையான விவசாயிகளுக்கு இந்த கடன் தள்ளுபடி குறித்த செய்தியே தெரியவில்லை. தெரிய வந்த நிலையில் உண்மையான விவசாயிகளுக்கு குறைவான கடனே தள்ளுபடியாகியுள்ளது.

இப்படி ஒரு மத்திய தணிக்கை துறையின் அறிக்கைக்குப் பிறகும் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், "சென்ற முறை விவசாயக் கடன் ரத்தானதில் விவசாயிகள் பெருமளவு பலனடைந்துள்ளனர்" என்று பேச முடிகிறதென்றால் மக்கள் அறியாமையின் மீது ஆட்சியாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தான் அது உணர்த்துகிறது.

நாட்டின் எந்த பகுதியில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேவை என்ன? என்ற புரிதல் இல்லாமல் பொத்தாம் பொதுவாக ஒட்டு மொத்த விவசாயக்கடன் ரத்து என்பது யாரைத் திருப்திபடுத்த? இப்படியான அரியல் உள்நோக்கம் கொண்ட அறிவிப்பால் நபார்டு வங்கி மேன்மேலும் நலிந்து போவது தான் நடக்கிறது. கடன் பெறும் போதே, 'கட்டவேண்டாம் தேர்தல் வரும் - கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என்ற எண்ணமே விவசாயிகளுக்கு ஏற்படும். சில சமூகவிரோத சக்திகள் விவசாயத்தின் பேரில் கோடிக்கணக்கில் கடன் பெற்று ஆதாயமடையவே இது போன்ற அறிவிப்புகள் வழிவகுக்கின்றன.

சமீபத்தில் தான் நமது பிரதமர் மன்மோகன்சிங், "விவசாயத்தை குறைவான மக்கள் சார்ந்திருக்கும் போது தான் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்" என திருவாய் மலர்ந்தார். இதன்பொருள் சிறுகுறு விவசாயிகள், விவசாயத்திலிருந்து வெளியேறட்டும். குறிப்பிட்ட சிலகார்பரேட் நிறுவனங்கள் நவீன கருவிகளைக் கொண்டு விவசாயம் செய்யட்டும் என்பது தான்!

'ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சமீபத்திய ஆட்சியில் சுமார் ஒன்றரைகோடி விவசாயிகள் விவசயாத்திலிருந்து வெளியேறியுள்ளனர்' என்ற தகவலை ஒரு அரசுத்துறை நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது.

இத்துடன் நாளொன்றுக்கு சுமார் 50விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நாடாக இன்றைய இந்தியா திகழ்கிறது.

"2004தொடங்கி தற்போது வரையிலுமான ஆட்சியில் இந்தியா முழுமையிலும் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்" என்று தேசிய குற்ற ஆவண ஆணையம் தெரிவிக்கிறது.
மற்றொரு தகவல் இந்தியாவில் 50சதவிகித விவசாயிகள் வறுமையின் காரணமாக தங்கள் நிலங்களை அடகுவைத்துள்ளனர் மற்ற சிலர் விற்றுள்ளனர் என தெரிவிக்கிறது. இந்த நிலங்களெல்லாம் தற்போது யார் வசம் இருக்கின்றனவோ அவர்களெல்லாருமே இந்த விவசாயக் கடன் தள்ளுபடியால் அமோக பலனடைவார்கள்!

எனவே, விவசாயக்கடன் தள்ளுபடி என்பது வறுமையில் வாடும் சிறுகுறு விவசாயிகள் மட்டுமே பலன் பெறத்தக்கதாக அமையவேண்டும். அதே சமயம் விவசாயம் சிறக்க திட்டமிட்ட நீர்நிர்வாக மேலாண்மையும், நிலவளத்தை மேம்படுத்த இயற்கை வேளாண்மைக்கான செலவில்லாத உரத்தயாரிப்புகளுமே இன்றைய காலத்தின் தேவையாகும்.

தேசத்தின் முதுகெலும்பான விவசாயிகள் ஒரு புறம் பசி, பட்டினி, வறுமை, நீரின்மை, இயற்கை இடர்பாடுகளால் நொந்து, வெந்து வாட, மற்றொரு புறம் அவர்களின் பெயரால் யார்யாரோ பல்லாயிரம் கோடி பணத்தை 'அபேஸ்' பண்ணுவதற்கு 'விவசாயக்கடன் தள்ளுபடி' என்ற அறிவிப்பு உதவிவிடக்கூடாது என்பதே மக்களின் தவிப்பு! 


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
11-2-2013

No comments: