Tuesday, March 19, 2013

தொலைபேசி ஒட்டுகேட்பு புகார்கள்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

தொலைபேசி ஒட்டுகேட்பு தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது.

பா.ஜ.க தலைவர் அருண்ஜேட்லி, நிதின்கட்கரி, விஜய்கோயல் உள்ளிட்ட 60பேர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக வெங்கையாநாயுடு அ.தி.மு.கவின் மைத்ரேயன், கம்யூனிஸ்டு தலைவர்கள் டி.ராஜா, சீதாராம்யெச்சூரி போன்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் சுஷில் குமார்ஷிண்டே, "தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படவில்லை. ஆனால் தொலைபேசிகளுக்கு வந்த அழைப்புகள் குறித்த தகவல்கள் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த சேகரிப்பில் ஈடுபட்ட தனிநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்" எனக்கூறியுள்ளார்.

"இந்த பதிலில் திருப்தி அடையாத வெங்கையாநாயுடு, "அந்த தனிநபர்களின் நோக்கம் என்ன? அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விபரங்கள் தேவை. காங்கிரஸ் அரசின் தூண்டுதல் இல்லாமல் இவை நடைபெற்றிருக்க முடியாது..."
எனக் குமுறியுள்ளார்.
வெங்கையாநாடுவின் கோபம் நியமானது தான்!
ஆனால், இந்த தொலைபேசி ஒட்டு கேட்பு புகாருக்கு ஆளாகாத அரசாங்கங்களே இல்லை. இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளின் மீதும் இந்த புகார்கள் உள்ளன. "பா.ஜக.க ஆட்சி செய்த இமாச்சல பிரதேசத்தில் 2007 - முதல் 2012 வரை 1000தொலைபேசி ஒட்டுகேட்புகள் நடந்துள்ளன" என்று வீரபத்திரசிங் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கள் தொலைபேசி யாராலும் ஒட்டுகேட்கப்படாது என்று இன்றைய தினம் எந்த அரசியல்வாதியும் அல்லது முக்கிய வி.வி.ஐ.பியும் நம்பத் தயாரில்லை. ஏனெனில் எந்த ஒரு அரசும் உளவுத்துறை இல்லாமலோ, ஒற்றர்கள் இல்லாமலோ செயல்பட்டதாக சரித்திரமே இல்லை. எனவே உலகம் முழுமையும் இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு புகார்கள் அடிக்கடி எழுந்து விவாதிக்கப்பட்டு வருவதை நாம் புறந்தள்ள முடியாது.
தொலைபேசி ஒட்டுகேட்பு என்பது இல்லாவிட்டால் இந்தியாவின் புகழ் பெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலமாகியிருக்க வாய்ப்பில்லை.

அரசியல் தரகர் நீராராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் இந்திய அரசியலில் ஏற்படுத்திய அதிர்வுகள் மறக்க கூடியதல்ல.
அப்போது பிரதமர் மன்மோகன்சிங், "வரி ஏய்ப்பு, நிதிமுறைகேடுகள் போன்றவற்றை கண்டறிய தொலைபேசி உரையாடல்களின் ஒட்டுகேட்பு தவிர்க்க முடியாது. அதேசமயம் அவை கவனமாக பதிவு செய்யப்படவேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து டிசம்பர் 2012ல் தொலைபேசி உரையாடல் மற்றும் இணையதள சேவையை சட்டப்படி ஒட்டுகேட்கும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், இந்த தொலைபேசி ஒட்டுகேட்பை அனைத்து முக்கிய தலைவர்களின் மீதும் நிகழ்த்துவதை நியாயப்படுத்திவிடமுடியாது. ஜனநாயகத்தில் தனிநபருக்குள்ள 'பிரைவேசி' - அரசியல் சட்டத்தால் உறுதிபடுத்தப் பட்டதாகும் இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
01-3-2013

No comments: