Monday, March 18, 2013

குடியரசுத்தலைவர் உரை

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆரம்பமாக மத்திய அரசின் நிலைபாட்டை விளக்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரிவான உரையாற்றியுள்ளார்.

மூன்று மாதங்கள் நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் சர்ச்சைகுரிய 71 மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றவுள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்...
எத்தனைமுறை சபை நடத்தமுடியாமல் ஒத்திவைக்கப்படக்கூடும் என்பதெல்லாம் விரைவில் தெரியவரும்.

அடுத்த ஆண்டு தேர்தலை, சந்திக்கவுள்ள நிலையில் மத்திய அரசு கொண்டுவர உள்ள பட்ஜெட் மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது என நாம் நம்புவதற்கே வாய்ப்பில்லை.

ஏனெனில், நிர்வாகத்திறமையின்மை, ஊழல், அலட்சியம் காரணமாக நமது பொருளாதாரம் 8.5% வளர்ச்சியிலிருந்து படிப்படியாக இறங்கி சென்ற ஆண்டு 6.2% இருந்தது. தற்போது 5% பொருளாதார வளர்ச்சியைத் தான் மிகவும் கடினப்பட்டு எட்டமுடிந்துள்ளது. இதை 5.4% மாக உயர்த்துவதற்கே கூட அரும்பாடுபட்டாக வேண்டியுள்ளது எனில், சிற்சில கடுமையான பொருளாதார நிலைபாடுகளை எடுப்பது தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசு சொல்லக்கூடும்.

உங்கள் பணம் உங்கள் கையில் என்ற நேரடி மானியம்
நில ஆர்ஜித மசோதா
உணவு பாதுகாப்பு மசோதா
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு
போன்ற பலவற்றால் நாட்டில் இன்னும் ஒராண்டில் ஏற்படும் தாக்கங்களே ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ளது.
மத்திய அரசு அடுத்த தேர்தலை கருதியே திட்டங்களைத் தீட்டுவதும், கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதுமாக செயல்பட்டுவருவதால் தான் நாட்டில் சொல்லிக் கொள்ளதக்க அளவில் வளர்ச்சி ஏற்படாமல் மக்கள் பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள்.

மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் 5கோடி மக்கள் வாழ்க்கையே மாற்றமடைந்துவிட்டது என குடியரசு தலைவர் உரையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் கிராமங்களின் நீராதாரத்தை வலுப்படுத்த, நிலங்களை வளப்படுத்த உதவியாக மத்திய அரசால் கூற முடியவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஊழல் மலிந்தும், ஊதாரித்தனங்கள் நிறைந்தும் இத்திட்டம் செயல்பட்டு வருவதை பல ஆய்வுகள் கூறியும் மறுபரிசிலனையே இல்லை.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு 1,23,580கோடி 12வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருமிதப்பட்டுள்ளார் குடியரசுத்தலைவர்.
ஆனால் யூனிசெப் தகவலின்படி இந்தியாவில் ஊட்டச் சத்துகுறைவால், நோயால், பசியால் மடியும் குழநதைகளின் எண்ணிக்கை 16லட்சம்!

2011-12ஆம் ஆண்டில் மட்டும் காணாமல் போய் மீட்க முடியாமல் போன சிறுவர்கள் 35,000த்திற்கும் அதிகம்!

இது போன்ற மாற்றமுடியாத நிலைமைகள் ஆண்டுக்காண்டு மோசமடைந்து வருவதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் பட்ஜெட்டில் ஒரு பெருந்தொகை ஒதுக்கிவிட்டதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக அரசாங்கள் கருதலாகாது

'உணவுதானிய உற்பத்தியில் தன்நிறைவு அடைந்துள்ளோம்' என பெருமைப் பட்டுள்ளார் பிரணாப் முகர்ஜி. ஆனால் இந்த பெருமைக்கு காரணமாக உள்ள விவசாயிகளின் தற்கொலைகள் எண்ணிக்கை குறித்த நினைவை தவிர்க்க முடியவில்லை.

கூடன்குளத்தில் ஏற்கெனவே இருக்கும் இரண்டு அணு உலைகளுக்கான மக்கள் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் மேலும் இரண்டு அணு உலைகள் அங்கு உருவாக்கப்படும் எனத் தெரிக்க்ப்பட்டுள்ளது.

காகிதத்தில் அச்சிடப்பட்டு வாசிக்கப்படும் கவர்ச்சிகரமான உரைக்கு மக்கள் மயங்கிய காலங்களும், மலைத்துப்போன சம்பவங்களும் இருந்தன.
ஆனால் நிதர்சனத்தில், அனுபவத்தில் தாங்கள் உணர்ந்ததைக் கொண்டே மக்கள் தீர்ப்பு அமையும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
21-2-2013



No comments: