Saturday, March 9, 2013

வளர்ச்சி அரசியலா? வாக்குவங்கி அரசியலா?

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

இந்திய தலைநகர் தில்லியில் மாணவர்கள் மத்தியில் பேசிய முதல்வர் நரேந்திரமோடி வாக்கு வங்கி அரசியல் என்ற பாதையை தவிர்த்து வளர்ச்சி அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும் எனப் பேசியுள்ளார்.

சமீப காலமாக இது போல் எந்த அரசியல்வாதியும் பேசத்துணியவில்லை. நரேந்திரமோடி மீது நமக்கு எத்தனையோ விமர்சனங்கள் இருந்த போதிலும் அவருடைய இந்தப்ேப்ச்சும், கடந்த காலங்களில் குஜராத் மாநில நிர்வாகத்தில் அவர் கடைபிடித்த அணுகுமுறைகளும் உண்மையில் வரவேற்க வேண்டியவையே!

வாக்குவங்கி அரசியல் என்பது 1960களின் பிற்பகுதியில் தான் அறிமுகமாகியது தமிழ்நாட்டில்! அதே போல் இந்திய அரசியலில் வாக்கு வங்கி அரசியலை முதன்முதாலாக கையில் எடுத்தது இந்தாரகாந்தி காலத்தில் தான்!

வாக்குவங்கி அரசியல் அறிமுகமாகியில்லாத தமிழ்நாட்டில் ஒமந்தூரார் ராமசாமி, மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர்... போன்றோர் ஆட்சியில் தான் தமிழகம் நிலைத்த பயனைப் பெற்றது.

வைகை,கீழ்பவானி, மணிமுத்தாறு, அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புல்லம்பாடி, பரம்பிக்குளம், நொய்யாறு, ஆழியாறு போன்ற அணைகளைக் கட்டி பாசனவசதி, குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதெல்லாம் 1967க்கு முன்பு தான்! 

காவேரி டெல்டா இன்று உயிர்புடன் வாழ்வதற்கு மேட்டூர் அணையும், தென்மேற்கு பகுதியில் வறட்சி பிரதேசங்கள் வளம்பெறக் காரணமான பெரியாறு அணையும் பிரிட்டிஷ் ஆட்சி நமக்கு தந்த கொடைகளாகும்!!
மேற்படி அணைகள் இல்லையென்றால் இன்று தமிழகத்தில் வேளாண்மையே இல்லை. இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் ஏரிகள், குளங்கள் சிறப்பாக தூர்வாறப்பட்டு பராமரிக்கப்பட்டன. அந்த காலகட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க புதிய அணைகள் உருவாகவில்லை.
அதே போல இன்றைக்கும் மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, பெரம்பூர் இணைப்புரயில்பெட்டி தொழிற்சாலை, திருச்சி பெல் ஆலை, மணலியில் எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையம் போன்றவை சுதந்திரத்திற்கு பிறகான முதல் இருபதாண்டுகளில் உருவாக்கப்பட்டவையே. 
இதையெல்லாம் விட கிராமங்கள் தோறும், நகரங்களின் மூலைமுடுக்கெல்லாம் கல்விச்சாலைகள் பல உருவானது காமராஜர் காலத்தில் தான்!

இந்த வளர்ச்சி அரசியலை மக்கள் உரிய வகையில் மதித்து போற்றி இருந்தால், வாக்கு வங்கி அரசியல் வளர்ச்சி பெற்று இருக்காது.

'ரூபாய்க்கு இரண்டுபடி லட்சியம் ஒரு படி நிச்சயம்' - என அரிசியில் ஆரம்பித்த வாக்கு வங்கி அரசியல் 2007ல் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று வந்து 2011ல் முற்றிலும் இலவசம் என்றாகிவிட்டது. இதனால் தமிழகத்தில் வேளாண்மையே வீழ்ச்சியடைந்துவருகிறது.

இலவச டிவியில் தொடங்கி தற்போது, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி... என வளர்ந்து கொண்டேபோகும் வாக்கு வங்கி அரசியல் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இன்று மக்கள் திரளை மதுபோதைக்கு அடிமையாக்குகிறது.
விவசாயத்திற்கு தண்ணீர், ஏழைகளுக்கு மருத்துவம், உழைப்பதற்கு வேலை... போன்றவற்றிற்க்கு உத்திரவாதம் தருவதே வளர்ச்சி அரசியல்.

லஞ்சலாவண்ய மற்ற நிர்வாகம், தடைகளற்ற தொழில்வளர்ச்சி, அச்சமற்ற சமூகச் செயல்பாடுகள், புதிய முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரம் போன்றவற்றை உறுதிபடுத்துவதே வளர்ச்சி அரசியல்.

வளர்ச்சி அரசியல் மக்களை கண்ணியமாக மதிப்பது! அவர்களை சொந்தக் காலில் நிற்க வைப்பது, நாட்டின் வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பை உத்திரவாதப்படுத்துவது.

வாக்கு வங்கி அரசியல் என்பது கானல்நீர். வாக்கு வங்கி அரசியலில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அரசியல்வாதிகளுக்கும், ஊழலில் ஊறித்திளைக்கும் அதிகாரவர்கத்திற்குமே சாத்தியப்படும். ஏழைகள் மேன்மேலும் ஏழைகளாவார்கள்.
வாக்குவங்கி அரசியலுக்கு மயங்காத, வளர்ச்சி அரசியலை வேண்டுகின்ற வாக்களர்களை தயார்படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
07-2-2013

No comments: