Friday, March 8, 2013

அதிகரிக்கும் அரசியல் படுகொலைகள்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்


சமீபகாலமாக தமிழகத்தில் அரசியல் படுகொலை அதிகரித்து வருவது மக்களுக்கு அதிரச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி - 31-ல் மட்டுமே மதுரையில் சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷூம், சென்னை அருகே தி.மு.க ஊராட்சி தலைவர் சங்கரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை பொட்டு சுரேஷ் தனது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி தலைவர் சங்கர் காரில் சென்றபோது வெடிகுண்டு வீசப்பட்டு, அதிலிருந்து தப்பி அவர் ஓடியபோது வெட்டி கொல்லப்பட்டுள்ளார்.

இது போன்ற படுகொலைகள் - அதுவும் மிகுந்த செல்வாக்குள்ளவர்கள் படுகொலைக்களாவது - சமூகத்தளத்தில் பெரும் பதற்றத்தையே தோற்றுவிக்கிறது.

சென்னையில் எம்.கே.பாலன், திருச்சியில் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், முன்னாள் அமைச்சர்கள் ஆலடி அருணா, தா.கிருஷ்ணன், தி.மு.க பிரமுகர்கள் பூண்டிசெல்வன், வெங்கடாச்சலம், தலித் இயக்க தலைவர்கள் பசுபதிபாண்டியன், பூவை மூர்த்தி.. போன்றவர்களின் கொலைகள் ஊடகங்களில் மிக அதிகமாக விவரிக்கப்பட்ட போதிலும், இவை ஏன் நிகழ்கின்றன? இதில் உண்மை குற்றவாளிகள் ஏன் பிடிபடுவதில்லை? என்பது மக்களுக்கு புதிராகவே உள்ளது.

பெரியகட்சிகளின் அதிகாரமையங்களோடு அடையாளப்பட்டு வலம்வருபவர்களே பெரும்பாலும் கொல்லப்படுகிறார்கள் என்பது கவனத்திற்குரியது.
அரசியல் அதிகாரத்தை கொண்டு அதீதமாக பணம் ஈட்டும் வகையிலும், அதில் சட்டவிதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக சிலருக்கு வாய்ப்பளித்தும், சிலரது வாய்ப்பை தட்டி பறித்து செயல்படும் வகையிலுமே இந்த வித அரசியல் படுகொலைகள் நடக்கின்றன.

இன்னும் சில இடங்களில் அத்துமீறிய அதிகாரமையமாக செயல்படும் அரசியல் சக்திகளை எதிர்த்ததால் தங்கள் இன்னுயிரைச் சிலர் இழந்துள்ளனர். இதில் மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் லீலாவதியின் கொலை மிகவும் முக்கியத்துவமானது. மக்களுக்காக நீதி கேட்டவகையில் அவர் அநியாயமாக கொலையுண்டார்.

இதேபோல தர்மபுரி அருகில் தளி சட்டமனற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ராமச்சந்திரனின் சட்டவிரோத செயல்பாடுகளை தட்டிகேட்டவகையில் பெரியார் திராவிடர் கழகத்தின் பிரமுகர் பழனிச்சாமி படுகொலைசெய்யப்பட்டார். மிகச்சமீபத்தில் இந்தப்பட்டியலில் மக்களுக்காக தொண்டாற்றிய தமிழ் தேசிய இயக்கத்தின் மோகன்ராஜ் சேர்ந்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க பெரிய பலமான அரசியல்கட்சியல்ல. ஆயினும் அந்த கட்சியைச் சேர்ந்த நாகை புகழேந்தியும், மருத்துவர் அணியின் அரவிந்தும் சமீபத்தில் படுகொலையான போது தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், 'தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன' என எச்சரிக்கை மணியடித்தார்.

டிசம்பர் - 20ந்தேதி தி.மு.க தலைவர் கருணாநிதி விடுத்த ஒரு அறிக்கையில், "தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் 928 கொலைகள், 768 கொள்ளைகள், 956 வழிப்பறிகள் நிகழ்ந்தன" என பட்டியலிட்டார்.

இந்த சமூகம் கொலைகள், கொள்ளைகள் மலிந்து, சமூக மதிப்பீடுகள் சிதைந்து போவதற்கு, 'அரசியலை தொண்டு செய்வதற்கானது' என்ற அறப்பார்வையிலிருந்து அகற்றி, சட்டவிரோதமாக சம்பாதிக்கும் தொழிலாக மாற்றிய அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே பொறுப்புள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அமைச்சராயிருந்த ஆ.ராசாவின் நண்பர் சாதிக்பாட்சாவின் மரணம் ஏற்படுத்திய மர்மம் இன்றுவரை விலகவில்லை..! 

அரசியல் அறம் நிலை குலைந்து பொதுப்பணத்தை சூறையாடுவது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது என்று மாறிப்போனபிறகே இப்படிப்பட்ட கொலைகள், கொள்ளைகள் அதிகரிக்கின்றன என்பது தான் உண்மை!

சட்டங்கள், கா வல்துறை, நீதித்துறை, அரசாங்கம் போன்றவற்றால் இது போன்ற படுகொலைகளை ஒரளவுக்கு மேல் கட்டுபடுத்த முடியாது.
இந்த சமூகம் இன்று ஓரளவுக்காவது அமைதியாய் இருப்பதற்கு காரணம், மிகப்பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த உழைப்பை நம்பி வாழ்வதாலும், அதில் கிடைத்ததை கொண்டு திருப்தி பெறுவதாலும் தான்! 


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
01-2-2013

No comments: