Saturday, February 2, 2013

ராகுலின் வருகை



                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

நேரு குடும்பத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய தலைமை கிடைத்துள்ளது ஆச்சரியத்திற்குரியதல்ல!

42வயதான ராகுல்காந்தி எட்டாண்டுகள் அரசியல் பணியாற்றி, சில எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளார் - மறுக்க முடியாது.

மோதிலால் நேரு, ஜவஹர்லால்நேரு, இந்திராகாந்தி போன்ற அவரது குடும்பத்தின் முதல் மூன்று தலைமுறை, சுதந்திரப்போராட்ட கால அனுபவத்தை, தியாகத்தை பின்னணியாகப் பெற்றிருந்தது! இந்த மூவருக்கும் அரசியலில் தலைமை ஏற்கவேண்டும் என்பது ஒரு இலக்காகவே ஆரம்பத்திலிருந்தே அமைந்தது.

ஆனால், ராஜூவ்காந்தி தன் அம்மாவின் படுகொலைக்குப் பிறகு கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை ஏற்க நிர்பந்திக்கப்பட்டார். இந்திரா மரணத்திற்கு பிறகான தேர்தலில் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற்று பிரதமரானார். ஆனால் அடுத்த தேர்தலுக்குள் செல்வாக்கிழந்து ஆட்சியை பறிகொடுத்தார். ஆனபோதிலும் கட்சியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் என்ற 'இமேஜ்' அவர் இறப்பது வரை தொடர்ந்தது.

பாட்டி இந்திராவின் படுகொலையை 14 வயதில் பார்த்து, அப்பா ராஜூவின் கொடூர முடிவை 21 வயதில் எதிர்கொண்டு, 'அரசியலே வேண்டாம்' என்று 34வயதுவரை விலகி இருந்தவர் ராகுல்காந்தி!

வீட்டிலிருந்தபடியும், டூன் பள்ளியிலுமாக ஆரம்பகல்வி, ஹார்வர்ட், கேம்பிரிட்ஜ் என்று வெளிநாட்டில் உயர்கல்வி என்று மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வளர்க்கப்பட்டவர். படிப்பை முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் தன்னை 'இன்னார்' என அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் அடக்கமாகப் பணியாற்றியவர், பெரிய குடும்பத்து பிள்ளைகள் சிலருக்கே உரித்தான ஆடம்பரம், ஊதாரித்தனம், அதிகாரதுஷ்பிரயோகம் போன்றவை இல்லாமல் வளர்ந்தவர், குறிப்பாக அதிகாரம், பதவி ஆகியவற்றிக்கு ஆசைப்படாததாக அவரது இயல்பு இருந்தது இதற்கு அதிகாரம், பதவி போன்றவற்றால் அவரது குடும்பம் பெற்ற ஈடுசெய்ய முடியாத பேரிழப்புகள் காரணமாயிருந்திருக்கலாம்.

துணைத்தலைவராக பதவி ஏற்றபோது அவர் ஆற்றிய உரையில் இருந்த நெகிழவைக்கும் உணர்வுகள், பட்டவர்த்தனமான வெளிப்படைத்தன்மை மாற்றத்திற்கான ஏக்கம் போன்றவை அவரிடம் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளன.

இதே போன்ற உரைகளை அவரது தந்தை ராஜீவ்காந்தியும் ஆற்றியுள்ளார். உரைகள் ஏற்படுத்தும் உணர்வுகளைவிட செயல்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் தோற்றுவிக்கும் உணர்வுகளே காலத்தை கடந்து நிற்கும்! 

ஜவஹர்லால் நேருவைக் காட்டிலும் மிகச்சிறந்த பேருரைகளை ஆற்றி இந்திய மக்களின் இதயங்களை கவர்ந்த அரசியல் தலைவர் இந்தியாவில் இது வரை எவருமில்லை!

ஆயினும் சூழ்நிலை நிர்பந்தங்கள் ஆகப்பெரிய ஆளுமைபடைத்த நேருவையே கட்டிப்போட்டன. ஓரளவுக்கு மேல் அவரால் மாற்றங்களை உருவாக்க முடியவில்லை!


  • சூது,வாது,தந்திரம்... என்பவற்றோடு அதிகாரப்பசிகொண்ட அரசியல்சகாக்கள்.


  • பொருளாதார பலத்தால் அரசாங்கத்தையே ஆட்டிவைக்கும் பெரிய தொழில் அதிபர்கள்


  • ஊழல், அலட்சியம், சுயநலம்... போன்றவற்றில் ஊறித்திளைத்த அதிகாரவர்க்கம், போன்றவர்களை நுட்பமாகக் கையாண்டு, மக்கள் நலைப் பேணுவது என்பது ஒரு அசாதாரணமான அரசியல் ஆளுமையாகும்!

இவர்களை சரியாக கையாளமுடியவில்லை என்றால் அவர்கள் ராகுல்காந்தியை கையாளத் தயாாராகிவிடுவார்கள்!

காஷ்மீர் பிரச்சினை, நக்சல்பாரிகளின் வளர்ந்து கொண்டிருக்கும் வன்முறைகள், மததீவிரவாதங்கள், ஜாதியமோதல்கள், அதிரவைக்கும் ஊழல்கள், பதறவைக்கும் பாலியல் வன்முறைகள், வறுமை, வேலையின்மை, பொருளாதார பிரச்சினைகள்... என இந்தியாவின் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து ராகுல்காந்தி இது வரை தன்னுடைய தெளிவான கருத்துகளை வெளிப்படுத்தியவரல்ல!

எனவே, இவை பற்றி இனிமேல் தான் அவருடைய பார்வைகள் தெரியவரும்! 
இந்திய மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அவரே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக அவர் பிரதானப்பட்டுவிட்டார் என்பதும், தவிர்க்க முடியாத இந்த சவாலை இந்த தேசமும், அவரும் எதிர்கொண்டாக வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமாகும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
22-1-2013 

No comments: