Sunday, February 10, 2013

அரசு மருத்துவமனைகளும், அத்தியாவசிய தேவைகளும்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

மருத்துவமனைகள் என்பவை உயிர்களை காப்பாற்றுவதற்காக என்பது தான் நம் அனைவரின் எண்ணமாக உள்ளது. ஆனால் நமது அரசு மருத்துவமனைகளோ உயிர் பறிப்பிற்கான உறைவிடங்களாகி விட்டனவோ... என்று எண்ணத்தக்க சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

சமீபத்தில் கொளத்தூர் அரசு மருத்துவமனையில் கழிவறை சென்ற 14வயது சிறுவன் விக்னேஷ் தடுப்புச்சுவர் சரிந்ததில் நான்காவாது மாடியிலிருந்து விழுந்து உயிர் இழந்துள்ளான்.

கடந்த வருடம் சுதந்திரத்தினம் ஆகஸ்ட் 15 அன்று பிறந்தது ஒரு குழந்தை! எடை குறைவாயிருந்த அக்குழந்தை கஸ்தூர்பா அரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் எலி கடித்து குதற இறந்துபோனது.
இதன் பிறகு மருத்துவமனை வளாகத்தில் உள்ள எலிகள், சுற்றித்திரியும் நாய்கள், பாம்புகள், பன்றிகள்... என ஒரு வேட்டையே நடத்தப்பட்டு அந்த பிரச்சினை ஆறப்போடப்பட்டுவிட்டது.

ஆனால், இன்று வரை அரசு மருத்துவமனைகள் சந்திக்கும் அவலங்கள் பல முடிவுக்கு வரவில்லை.

அரசு மருத்துவமனைகளில் மக்களின் உயிர்காக்கும் மருந்துகளில் சுமார் 40வகை மாத்திரை, மருந்துகள் பெரும்பாலும் 'ஸ்டாக்கில்' இருப்பதில்லை. பற்றாக்குறை பதிலை கேட்டு பதறியபடி நோயாளிகள் வெளியில் அலைந்து திரிந்து வாங்கி கொள்ளவேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில் 2011-12ஆம் ஆண்டில் மருந்துமாத்திரைகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ 7கோடியே போதாமல் இருந்த நிலையில், 2012 - 13க்கு 6கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு நிதிகுறைத்ததையடுத்து, மாநில அரசும் இவ்விதம் குறைத்துள்ளது. மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியில் ஏழில் ஒரு பங்கைத் தான் 120கோடி மக்களின் ஆரோக்கியம் காக்கும் மருத்துவத்திற்கு ஒதுக்கிறது... போன்றவை இன்னும் விரிவான தளத்தில் விவாதிக்க வேண்டியுள்ளது.

இதனால் அரசு மருத்துவமனைகள் சந்திக்கும் அவலங்கள் சொல்லி மாளாது. தமிழகத்தில் சுமார் ஆயிரத்து நானூற்று சொச்சம் ஆரம்ப சுகாதாரமையங்கள் உள்ளன! இதில் நூற்றுக்கணக்கான மையங்களில் டாக்டர்கள் இல்லை. மற்ற சில நூற்றுக்கணக்கான ஆரம்ப சுகாதார மையங்களிலோ தற்காலிக டாக்டர்கள் தான்! இது மட்டுமின்றி நர்ஸ்கள், மருத்துவபணியாளர்கள், ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் பற்றாக்குறை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. பல்லாயிரக்கணக்கணக்கில் மருத்துவதுறை பணியிடங்கள் நிரப்படவேண்டியுள்ளன.

இந்நிலையில் சுமார் 2000டாக்டர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஆணையிட்டுள்ளது ஒரளவு ஆறுதல் அளிக்கிறது.

நாற்றமெடுக்கும் கழிவறைகள், குவிந்து கிடக்கும் குப்பைகள், அகற்றப்படாத மருத்துவகழிவுகள்... போன்றவைகளால் அரசு மருத்துவமனைகள் நோய்பரப்பும் மையங்களாகி வருகின்றன - காரணம் குறைந்த கூலிக்கு வேலைசெய்யும் துப்புரவு பணியாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள   முடியாத நிதி பற்றாக்குறை!

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சினை - விலை உயர்ந்த ஸ்கேனிங்கை வெளியே எடுத்துவரும்படி நிர்பந்திப்பது! - அதுவும் அரசு டாக்டர்கள் பரிந்துரைக்கும் இடத்திற்குச் சென்று! இதில் என்ன கமிஷனோ...?

தி.மு.க ஆட்சியில் ரூ 500கோடி மருத்துவகாப்பீடு திட்டத்தால் பயனடைந்தது அனைத்துமே தனியார் மருத்துவமனைகளே!

ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் மருத்துகாப்பீடு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ 750கோடி நிதியில் அரசு மருத்துமனைகளுக்கு கிடைப்பதோ சுமார் 200கோடி தான்!
இந்த மருத்துவகாப்பீடு நிதியை முழுக்க, முழுக்க அரசு மருத்துவமனைளே பெற்று பயனடையும் விதமாக கூடுதல் மருத்துவமனைகளும், கூடுதல் மருத்துவர்களும், 24மணிநேர அறுவை சிகிச்சை ஆபரேஷன் அரங்குகளும் அமைத்தால் அது நிரந்தப்பலன் தரும்!

தமிழகத்தில் 'டாஸ்மாக்' கடைகளின் நேரம் 15 மணிநேரத்திற்கும் போது அரசு மருத்துவ மனைகளின் ஆபரேஷன் தியேட்டர்களின் நேரமே 8மணிநேரத்திற்கும் குறைவாக உள்ளது. இந்நிலை மாறி 24மணிநேரம் ஷிப்டு முறையில் இயங்கினால் அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் ஆறுதலடைவார்கள்!

அரசு மருத்துவமனைகளுக்கு இன்றைய இன்றியமையாத தேவைகள்; கூடுதல்நிதி, கூடுதல் மருத்துவமனை, கூடுதல் பணியாளர்கள், அக்கறையான நிர்வாகம், மனிதாபிமானமுள்ள மருத்துவ அணுகுமுறைகள்! அரசு கவனிக்குமா?



தந்தி டிவி,
EDITORIAL VOICE,
29-1-2013 

No comments: