Monday, February 11, 2013

ஊழல் ஒழிய லோக்பால் வரட்டும்..


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் விளைவாக இரண்டு அறிவிப்புகள் இன்று வெளியாகி உள்ளன.

ஒன்று, வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 'லோக்பால் மசோதா' கொண்டுவரப்படும். 
மற்றொன்று, அரசியல்வாதிகள், உயர்அதிகாரிகள் ஊழல்களை விசாரிக்க 22 சி.பி.ஐ நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.

கடந்த பல ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட முறை பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட்டது. ஆனால் நிறைவேற்ற முடியவில்லை.

இதனால் அண்ணாஹசாரே தலைமையிலான ஒரு குழு இதற்காகப் போராடியது. சந்தோஷ்ஹெக்டே, அரவிந்த் கேஜ்ரிவால், பிரசாந்த்பூஷண் ஆகியோர் 'ஜன்லோக்பால்' என்ற ஒரு முன்மாதிரி மசோதாவை அரசுக்கு உருவாக்கி கொடுத்தனர்.

அதில் பிரதமர், நீதிபதி உள்ளிட்டவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்! எந்த ஊழல் வழக்கும் இரண்டாண்டுகளில் நடத்திமுடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவேண்டும். ஊழல்வாதிகளின் சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற வலுவான வடிவம் தரப்பட்டிருந்தது.

இந்த ஜன்பால் மசோதாவை இந்தியாவில் மிகப்பெரும்பாலான அரசியல்கட்சிகள் விரும்பவில்லை. இதனால் வலுக்குறைந்த லோக்பால் மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டுவந்தது. அந்த மசோதாவும் 2011ன் இறுதியில் நாடாளுமன்றத்தில் மட்டுமே தாக்கலானது மாநிலங்களவையில் அதனை தாக்கல் செய்ய முடியவிலைல.

இந்நிலையில் மத்திய அரசின் மீதான ஊழல்புகார்கள் அதிகரித்தன.
எனவே, தன் மீதான ஊழல் கரைகளை கழுவிக்கொள்ளும் பிராயசித்தமாகவாவது இந்த லோக்பால் மசோதாவை நிறைவேற்றியாக வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

அண்ணாஹாசரே பிப்ரவரி மாதம் தொடங்கி லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நாடுமுழுக்க சுற்றுப்பயணம் செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தான் தற்போது மத்திய அமைச்சரவை கூடி லோக்பால் மசோதாவை கொண்டு வருவதென முடிவெடுத்துள்ளது. 

இதன் அடுத்தகட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் 'லோக்ஆயூக்தா' நிறுவப்பட வேண்டும். அப்போது தான் மாநில அரசுகளின் ஊழல்கள் ஒரளவேனும் குறையும். இந்த வகையில் இந்திய மாநிலங்கள் பத்தில் ஏற்கெனவே லோக்ஆயுக்தா நிறுவப்பட்டு அதன் மூலம் அந்தந்த மாநிலங்கள் சில சிறப்பான பயன்பெற்றதைக் கூட பட்டியலிட்டு கூறமுடியும்! தன்மீது நம்பிக்கையுள்ள எந்த மாநில அரசுக்கும் லோக்ஆயூக்தாவை கொண்டுவருவதில் தயக்கமிருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவில் இப்போது 34 உயர்நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் ஏற்கெனவே லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தேங்கி உள்ளன. இந்நிலையில் 22 சி.பி.ஐ நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஏனெனில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மீதான ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தேங்கியுள்ளன.

ஏற்கெனவே சில முறை இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
ஆனால், இதை நிறைவேற்றத் துணியவில்லை மத்திய அரசு. எனவே இந்த முறை இரண்டு மாதகால அவகாசத்தில் 22 சி.பி.ஐ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டேயாக வேண்டும் என கால அவகாசத்தை கணித்தே கூறிவிட்டது உச்சநீதிமன்றம்!

லோக்பால் மசோதா - வலுவானதா? வலுவற்றதா? என்ற வாதங்கள் இருந்தபோதிலும் முதலில் அது வரட்டும் பின்னர் அதை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் நிலைபாடாக உள்ளது.

அதே போல சி.பி.ஐ நீதிமன்றங்கள் வந்தால் மட்டும் போதாது.
ஊழல் அரசில்வாதிகள், அதிகாரிகள் விசாரிக்கும் அனுமதியை அரசு விரைந்து வழங்கவேண்டும். சிபி.ஐ சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
31-1-2013

No comments: