Saturday, February 2, 2013

யாராயிருந்தாலும் குற்றத்திற்கு தண்டனை வேண்டும்


-சாவித்திரிகண்ணன்


பாலியல் குற்றங்களுக்கு எதிரான மக்களின் தார்மீக ஆவேசம் பொங்கி பிரவாக மெடுத்துக் கொண்டிருக்கும் சூழலில் பிரமிளா சங்கர் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.

"பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நமது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் ஆணையிட வேண்டும்" என்ற அந்த வழக்கில் நமது உச்சநீதிமன்றம் கூறியுள்ள கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

"அவர்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் எங்களுக்கில்லை. பாராளுமன்றமும், சட்டமன்றமும் தான் இதில் முடிவெடுக்க வேண்டும். ஆனால் தற்போது விரைவு நீதிமன்றங்கள் உருவாகியுள்ளதால் இவர்களின் மீதான வழக்குகளை வேகப்படுத்தி விரைந்து நீதியை நிலைநாட்டலாம்"
இது மிகச்சரியான ஆலோசினை.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளதினாலேயே ஒருவர் சஸ்பெண்ட் ஆகிவிடுவார் எனில் இதற்காகவே நிறைய குற்றச்சாட்டுகள் யார் மீது வேண்டுமானாலும் பதிவாகக்கூடும்.

ஆனால் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டநிலையில் அது நிலுவையில் நீண்டநாட்களாக வருடங்காளாக இழுத்தடிக்கப்படுவது தான் கொடுமை.

இதைத்தான் அரவிந்த் கேஜரிவால், "இது போன்ற வழக்குகள் இந்தியாவில் 20,25 வருடங்கள் இழுத்தடிக்கப்படுவதால் தான் நாங்கள் லோக்பால் மசோதாவை கோருகிறோம்" என்றார்.

தற்போதைய நமது பாராளுமன்ற எம்.பிக்களில் 162பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கொலை, கொலைமுயற்சி, ஆள்கடத்தல், கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம்... என பல குற்றச்சாட்டுகள் கொண்டவர்கள் பாராளுமன்றம் என்ற பாதுகாப்பில் வளைய வருகின்றனர்.

இதனால் இவர்கள் மீதான வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கின்றன.
ஆனால் அவ்வாறில்லாமல் இனி மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளுக்கு மற்றவற்றை காட்டிலும் மிகுந்த முக்கியத்துவம் தந்து நியாயமாக நடத்தி முடித்து தீர்ப்பு தந்தாக வேண்டும். குறைந்தபட்சம் 3மாதம் அதிகபட்சம் 6மாதம் என கால நிர்ணயம் செய்து போர்கால வேகத்தில் இவை நடைபெற்றால் தான் மக்களுக்கு நம்பிக்கை துளிர்க்கும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
4-1-2013

No comments: