Wednesday, January 2, 2013

அத்துமீறுவது யானைகளா? மனிதர்களா?


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

யானைகள் தாக்கி மனிதர்கள் இறக்கும் செய்திகள் அடுத்தடுத்து வந்த வண்ணமுள்ளன.

பயிர்களை உண்ணவரும் யானைகளின் உயிர்களை பலி கொள்ளும் செய்திகளும் தொடர்ந்து கொண்டுள்ளன.

ஒரிரு நாட்களுக்கு முன்பு இரயிலில் அடிபட்டு ஆறு யானைகள் இறந்தன. மின்வேலிகளில் அகப்பட்டு பல யானைகள் இறந்துள்ளன. 
மைசூர் நகருக்குள் இரு காட்டு யானைகள் நுழைந்த செய்தியறிந்து அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இந்த வகையில் ஒவ்வொர் ஆண்டும் யானைகளால் பாதிக்கப்படும் குடும்பங்கள் சுமார் ஆறு லட்சம். 
மனிதர்களால் பலி கொள்ளப்படும் யானைகள் பல்லாயிரம்!

யானையை தெய்வமாக வழிபடும் மரபும், கோயில்களில் கொண்டுவைத்து ஆசிர்வாதங்கள் பெரும் நடைமுறைகளும் உள்ள நாட்டில் தாம் வருடந்தோறும் யானைகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. வனப் பகுதிகள் சமீபகாலமாக பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அங்கே தேயிலை, வாழை, கரும்பு, காபி தோட்டங்கள் திடீர் திடீரென தோன்றுகின்றன. ரிசார்டுகள், கிளப்ஹவுஸ், கெஸ்ட்ஹவுஸ்... போன்ற கட்டிடங்கள் சகட்டு மேனிக்கு எழுகின்றன. இந்த செல்வந்தர்களுக்கு தேவைப்படும் உழைக்கும் சக்தியைத் தர புதுப்புது கிராமங்களும் வனப்பகுதியில் தோன்றுகின்றன. தனியார் சுற்றுலாக்கள் வனப்பகுதிகளில் தங்கு தடையின்றி நடக்கின்றன. இந்த சுற்றுலா பயணிகள் குடித்துவிட்டு எரிந்த கண்ணாடி பாட்டில்களை மிதித்து ரணகாயப்பட்டு, காலப்போக்கில் காலில் சீழ்பிடித்து இறக்கும் யானைகள் அநேகம்.

யானைகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வந்தால் அது பரப்பரப்பான செய்தியாகிறது. 
ஆனால், யானையின் வசிப்பிடங்களுக்குள் மனிதர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பது, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போடுவது, பெரிய, சிறிய கட்டிடங்களை எழுப்புவது போன்றவை செய்திகளாவதும் இல்லை. சட்டப்படி தடுக்கப்படுவதும் இல்லை. 

1882 - ல் சென்னை வனச்சட்டம் இயற்றப்பட்டது. 1927 ல் இந்திய வனச்சட்டம் உருவாக்கப்பட்டது. இவை இரண்டுமே அடிமை இந்தியாவில் பிரிட்டிஷார் தங்கள் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தி, பழங்குடிகளை அப்புறப்படுத்த கொண்டுவந்தவை. இந்தச்சட்டங்களே இன்றைய ஆளும் அதிகார மையங்களுக்கு உதவிக்கொண்டுள்ளன. எனவே நாட்டு மக்களுக்கு கிடைத்த சுதந்திரம் நம் காட்டு விலங்குகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை! ஆனால் புலிகள் காப்பகங்கள் என்பதாக அறிவிக்கப்பட்டு, வனப்பகுதிகளை பாதுகாக்கும் முயற்சிகள் ஒரளவே வெற்றி பெற்றுள்ளன. 'புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும்' என்ற உச்சநீதிமன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதில்லை.

யானைகளின் இயல்பே அவை எந்த இடத்தையும், நிரந்தர குடியிருப்பாக்கி கொள்ளாதபோக்காகும். அதிக பட்சம் ஒரிடத்தில் 20 அல்லது 25நாட்கள் தங்கும். ஒரு யானையின் ஒரு நாளைய தீனி அளவு என்பது 150 முதல் 270 கிலோ வரையிலான இலை, தளை, பழங்கள் போன்றவையாகும். இதற்காக நாளொன்றுக்கு 10, முதல் 12 மணிநேரங்கள் நடந்து இரைதேடக் கூடியவை. பருவ நிலைகளுக்கு தக்கபடி இடம்பெயரும். எந்தெந்த உணவு, எந்தெந்த பகுதிகளில், எவ்வெப்போது கிடைக்கும் என்பதற்கேற்ப அதன் பயணம் சுமார் 500சதுர கீலோமீட்டர் பரப்பளவில் சுழற்சி முறையில் நடைபெறக் கூடியதாகும்.

இந்நிலையில் அவை சுற்றித்திரியும் பகுதிகளை நாம் ஆக்கிரமிப்பதால் மட்டுமே அவை தங்கள் எல்லைகளைக் கடந்து வருகின்றன.
ஆகவே, தேவை உறுதியான வனப்பாதுகாப்புச் சட்டம்.

நமது வனப்பகுதிகளை 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய நிலைமைக்கு மீட்டெடுக்க முடியுமானால் - இந்த 50 ஆண்டுகளில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் முற்றாக அகற்ற முடியுமானால் - அதற்குப் பிறகு ஏன் யானைகள் நம் பகுதிகளுக்கு வரப்போகிறது? 


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
2-1-2013

No comments: