Thursday, January 3, 2013

நீதிமன்றங்களில் தமிழ்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

உயர்நீதிமன்றங்களில் வழக்குமொழியாக தமிழை பயன்படுத்துவது குறித்த சர்ச்சை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

மொழி அரசியலால் தமிழகத்தின் சமூகச் சூழல் விழி பிதுங்கி நிற்பது புதிய விஷயமல்ல, என்றாலும் இதற்கு தெளிவான தீர்வு கிடைத்தபாடில்லை.

1949ல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் இந்தியில் வழக்காடவும், தீர்ப்பு கூறவுமான அனுமதி பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார் ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா போன்ற வட இந்திய மாநில உயர்நீதிமன்றங்களில் இந்தி வழக்கு மொழியாக உள்ளது. மேற்குவங்கம், கர்நாடாகா போன்ற மாநில உயர்நீதிமன்ங்களில் பிராந்திய மொழிகளில் அவ்வப்போது வழக்குகள் சகஜமாக நடத்தப்பட்டு வருகின்றன. சர்ச்சைகள் இல்லை.

ஆனால் தமிழகத்தில் சுமார் 50 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்குவதற்கான போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் பிராந்திய மொழிகளை வழக்கு மொழியாக பயன்படுத்துவது தொடர்பான தெளிவான வழிகாட்டல்கள் இல்லை. 
இதைத்தான் பிராந்திய மொழி எதிர்ப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர்.

ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 340 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963 ஆட்சிமொழி சட்டப்பிரிவு 7ன் படி உயர்நீதிமன்ற வழக்குகளை மாநில மொழிகளில் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டே 2006 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது தமிழக சட்டசபையில் உயர்நீதிமன்த்தில் தமிழை வழக்குமொழியாக்குவது தொடர்பான தீர்மானம் அனைத்து கட்சிகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த தீர்மானத்திற்கு இன்று வரை குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தை தவிர்த்து தமிழகத்தின் பிற நீதிமன்றங்களில் தமிழ் வழக்குமொழியாக இருக்கும் சூழலில் மதுரையில் உயர்நீதிமன்றக்கிளை துவக்கப்பட்டபோது வழக்கறிஞர்கள் தமிழில் வாதாட பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப் போராட்டம் தமிழகம் முழுமையிலும் எதிரொலித்து, மாநிலம் முழுமையிலுமுள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஸ்தம்பித்தன. இதைத்தொடர்ந்து அன்றைய தலைமை நீதிபதி இக்பால் "தமிழில் வாதாட தடையில்லை" என வாய்மொழி உத்தரவு வழங்கினார். 

கடந்த 50 ஆண்டுகளாக தமிழில் ஏராளமான சட்டநூல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன! குறிப்பாக தமிழில், 'சட்ட ஆணைய கலைச்சொல் அகராதி' டாக்டர். அனந்த நாராயணன் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு பல தொகுதிகள் வந்துள்ளன.

1970 களில் ம.சண்முகசுந்தரனார் அவர்களாலும், பிறகு நீதிபதி மகாதேவன் அவர்களாலும் நமது இந்திய அரசியல் அமைப்புசட்டம் அருமையான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கண்டது. நமது நீதித்துறைவல்லுநர்கள், முன்னாள் நீதியரசர்கள் பலர் சட்ட நுணுக்கங்களை திட்பமாக வெளிபடுத்தும் வல்லமை தமிழ் மொழிக்குண்டு என பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால், தமிழ் தெரியாத நீதிபதிகள், மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் போக வேண்டிய சூழல்... போன்றவற்றை காரணம் காட்டி சிலர் இதை கடுமையாக எதிர்க்கின்றனர்.

மொழிபெயர்ப்பின் துணைகொண்டு சமாளிக்கபட முடிந்தவைகளே இவை!
ஏனெனில், ஆண்டாண்டு காலம் நீதிமன்றம், வழக்கு, வாய்தா என அலைந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான சமானிய மனிதர்கள் தங்கள் பிரச்சினை நீதிமன்றத்தில் சரியாக வாதாடப்பட்டதா? படுகிறதா? என்று தெரியாமல் அலைகழிக்கப் படுகிறார்கள்.

வழக்கு மொழிஆங்கிலத்தில் இருக்கிறது என்பதால் வழக்கு தொடர்பான விபரங்களை சமானிய மக்களிடமிருந்து மறைப்பது சில வழக்குறிஞர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது. 

தமிழில் வாதாட வாய்ப்பிருந்தால் அவரவர்களும் தாங்களே தங்கள் வழக்குகள் குறித்த சட்டபிரச்சனைகளை படித்து அறிந்து நீதிமன்றங்களில் வாதாடவும். வாய்ப்புள்ளது.

தமிழை கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் வேண்டாம். எதிர்க்கவும் வேண்டாம். 
மக்களுக்காகத் தான் நீதிமன்றங்கள், நீதிபதிகள், வழக்குறைஞர்கள், அரசியல் அமைப்பு சட்டம் அனைத்துமே!

வழக்குகள் விரைந்து முடிக்கப்படவும், வாதிகள், பிரதிவாதிகள் ஏமாறாமல் நீதி நிலைநாட்டப்படவும் அந்தந்த மாநிலத்தின் மக்கள் மொழியிலேயே நீதிபரிபாலனம் நடைபெறவேண்டியது முக்கியம். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
3-1-2013

No comments: