Thursday, January 31, 2013

ரயில்கட்டண அதிரடி உயர்வு


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

எப்போது வேண்டுமானாலும், எந்த தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் மனோதிடம் இருந்தால் தான் இன்றைய இந்தியாவில் எந்த குடிமகனும் வாழும் தகுதியைப் பெறமுடியும்.

3மாதத்திற்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலையேற்றம் 
ஆண்டுக்காண்டு சமையல் கேஸ் விலை ஏற்றம்
அரிசி, பருப்பு, காய்கறிகள் தொடங்கி உணவுப் பொருட்களின் விலையேற்றம் மின்கட்டண உயர்வு.

என அவ்வப்போது கசப்பு மருந்துகளை உட்கொண்டு பழக்கப்பட்டு வருகிறது இந்திய சமூகம்.

"பத்தாண்டுகளாக ரயில்வே கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே உயர்த்தி உள்ளோம்" என்கிறார்கள்.
இதில் முழு உண்மை இல்லை. பத்தாண்டுகளாக முதல்வகுப்பு, ஏசிவகுப்பு கட்டணங்களைத் தவிர்த்து!

ஆனபோதிலும் இப்போதைய கட்டண உயர்வு அநியாயம் என சொல்வதற்கில்லை. ஆனால் பட்ஜெட் வருவதற்கு இரண்டு மாதம் இருக்கையில் இந்த பாய்ச்சல் எதற்கு என்ற பயம் தான்! இரண்டு மாதம் கழித்து ஒரேயடியாக உயர்த்தாமல் படிப்படியாக உயர்த்தலாம் என நினைக்கிறார்களோ என்பதே மக்கள் சந்தேகம்.

கடந்த ஒரே வருடத்திற்குள்ளாக நான்கு அமைச்சர்களைக் கண்ட துறையாகி உள்ளது ரயில்வே இலாகா!

சிறந்த நிர்வாக அறிவும், நேர்மையும் ஒருங்கே பெற்றிருந்த திணேஷ்திரிவேத கடந்த மார்ச் மாதம் மம்தா பானார்ஜியின் பிடிவாதத்தால் பதவி இழந்தார். அதற்குப் பிறகு முகுல்ராய், சி.பி.ஜோசி தற்போது பவன்குமார் பன்சால் என அடுத்தடுத்து மூவர்!

இது நிர்வாக ஸ்திரத்தன்மையை கடுமையாக பாதிக்கும்.
ஏற்கெனவே ரயில்வே துறை மக்களின் எதிர்பார்ப்புகளில் பலவற்றை நிறைவேற்ற முடியாத துறையாக உள்ளது. அதில் முக்கியமானது கூடுதல் பாதைகள், புதிய வழித்தடங்கள், அதிக ரயில்கள் என்பதாகும். ஆனால் இதற்கு முதலில் தேவைப்படுவது நில ஆர்ஜிதமே! - இது ஏற்கெனவே விழித்துக் கொள்ளததால் இப்போது குதிரைக் கொம்பாகிவிட்டது. 

இதனால் தான் பிரிட்டிஷார் காலத்தில் நிறுவப்பட்ட அடிப்படைகட்டுமானத்தில் அதிகபட்சம் 20 சதவிகிதமே நம்மால் அதிகரிக்க முடிந்துள்ளது.

ஆனால் ரயில் பயணிகளின் எண்ணிக்கையோ 1200சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
இன்றைய டிக்கெட் கட்டண உயர்வால் அஅரசுக்கு கிடைக்கவிருக்கும் ஆண்டு கூடுதல் வருமானம் வெறும் 6,600கோடி தான்!

ஆனால் ரயில்வே துறை ஏற்கெனவே அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றி முடிக்கத் தேவைப்படுவதோ, 1,70,000கோடி!
இந்த நிதி எப்படி திரட்டப்படவுள்ளது...?
இதற்கான செயல்திட்டம் என்ன?
இல்லையெனில் புதுப்புது அறிவிப்புகள் ஏட்டளவிலேயே நின்றுவிடும்.
இது மட்டுமல்ல தற்போது ரயில்வே துறை காலாவதியாகிப்போன கம்யூனிகேஷன்களையும், நவீனப்படுத்தப்படாத சிக்னல்களையும், இண்டர்லாக்கிங் சிஸ்டம் இல்லாத ரயில்வே கேட்டுகளையும் கொண்டுள்ளதே பல விபத்து களுக்கு காரணமாகிறது.

இந்திய ரயில்வே பல வழிகளில் நவீனப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
பாதுகாப்பான பயணத்தை பயணிகளுக்கு உத்திரவாதப்படுத்த வேண்டி உள்ளது.

சூழலை பாதிக்காத கழிவறை தொடங்கி, சுத்தமான பெட்டிகள், பழுதில்லா இயந்திரங்கள் என பற்பல வகைகளில் நவீனத்துவம் பேண வேண்டியுள்ளது.
இதற்கு 12வது ஐந்தாண்டு திட்டத்தில் சுமார் 5.60லட்சம் கோடிகள் ஒதுக்கினால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.

ஆனால் ரயில்வேதுறை சுதந்திரமாக முடிவெடுக்கமுடியாத ஒரு துறையாக அரசியல் உள்நோக்கங்கள், தேர்தல் ஆதாயங்கள் போன்றவற்றை கருதி செயல்படும் அரசியல்வாதிகளால் அலங்கோலப்படுகிறது. திட்டங்கள், செயல்பாடுகள், அறிவிப்புகள் அனைத்திலும் இந்த அரசியல் பார்வையே வெளிப்படுகிறது.

ரயில்வே துறைக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படவேண்டும்.
அரசியல் தலையீடுகளற்ற நேர்மையான நிர்வாகத்தின் கரங்களில் அது ஒப்படைக்கப்பட்டால் தான் அபரிமிதமான வளர்ச்சியைக் காணும் மக்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

தற்போதைய கட்டண உயர்வு, ரயில்வேக்கு தற்காலிக நிவாரணமே! வரப்போகிற பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய, நடைமுறை எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றக்க கூடிய உறுதியான செயல்திட்டம் தேவை! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
10-1-2013

விழிப்பேற்படுத்துமா - விவசாயத் தற்கொலைகள்..?


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

தமிழக விவசாயக்களம் தடுக்க முடியாத தற்கொலைகளை தற்போது கண்டு வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ஆந்திரம், கர்நாடகா போன்றவையே இது வரை விவசாயிகள் தற்கொலையை அதிகமாக கண்ட மாநிலங்கள்!

மொத்த விவசாயிகள் தற்கொலையில் 3 -ல் இரண்டு இந்த மாநிலங்களில் மட்டுமே நடந்தேறுகிறது.

இப்போது இந்தப்பட்டியலுக்கு தமிழகமும் தயாராகி கொண்டு வருகிறதோ... என்ற அச்சமே மேலோங்குகிறது...
'காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ்
கண்டதாம் வைகை பொருணைநதி - என 
மேவிய ஆறு பல ஓடத் திருமேனி செழித்த தமிழ்நாடு!' 
என பாரதி பாடிய தேசம் இன்று பாழ்பட்டு நிற்கிறது.
விவசாய விளை நிலங்கள் சுருங்கி வருகின்றன....
ஆறு, குளம், கண்மாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புக்கு ஆளான 
வடி நிலபகுதிகளால் வற்றிக் கொண்டிருக்கின்றன.
இவற்றை தூர்வாறுவதற்காக ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி நிதியால் இந்த நீர்நிலைகளில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதே இல்லை.
அரசின் ஏட்டு கணக்குப்படி தமிழகத்தில் 41,262 ஏரிகள் உள்ளன. 

மேட்டூர் அணையின் நீர் கொள்ளவில் மூன்றில் ஒரு பகுதி பல்லாண்டுகளாக அடித்து வரப்பட்ட மணல் குவியல்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு கனஅடி மணல் மூன்று கன அடி நீரை உறிஞ்சவல்லது!
இதனால் மேட்டூர் அணையில் வந்து விழும் தண்ணீரின் பெரும் பகுதியை அங்கு மலைக்குன்றுகளாய் குவிந்திருக்கும் மணல் உறிஞ்சிவிடுகிறது. 
இதனால் நீரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பல லட்சம் ஏக்கர் பரப்பளவுகள் வஞ்சிக்கப்படுகின்றன. இதை சரி செய்ய எந்த நடவடிக்கை ஆலோசிக்கப்பட்டதாக தெரியவில்லை


காவேரியிலிருந்து நமது மேட்டூர் அணைக்கு வந்து சேரும் நீரைப்பயன் படுத்துவதில் நாம் படுமோசமான நீர் மேலாண்மை நிர்வாகத்தை பல ஆண்டுகளாக மாற்றமில்லாமல் கடைபிடித்து வருகிறோம் என்பது மிகவும் கசப்பான ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகவுள்ளது. 

சமீபத்தில் குறுவை விவசாயமும் குலைந்து சாம்பா நடவும் பொய்த்து நிலத்தடி நீரும் அதல பாதளத்துக்கு இறங்கிய நிலையில் போர்போட்டாலும் பயனில்லாமல் போகும் அதிர்ச்சியை விவசாயிகள் தாங்க முடியாமல் தற்கொலைக்களாகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பருவ மழைகளில் பொழியும் ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் பயன்படுத்தும் நீர் மேலாண்மை நிர்வாகத்தின் பங்களிப்பு மிக மிக முக்கியமாகிறது.

நீர்மேலாண்மை நிர்வாகத்தில் நம் பண்டைகால தமிழ் சமூகம் இன்றைய பல்கலைக் கழகங்களே வியக்கும் வித்திலான பட்டறிவை கொண்டிருந்தது.
ஆனால் நமது இன்றைய நுகர்வு கலாச்சார அணுகுமுறைகள், ஆறு, குளம், கண்மாய்களின் நீர்வடிநிலப் பகுதிகளையெல்லாம் பட்டா நிலமாக்கி கான்கிரிட் கட்டிடங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது.

சமீபகாலங்களில் சுமார் 50சதவிகித விவசாயிகள் நிலங்களை விற்பது அல்லது அடகு வைப்பது என்ற நிலையெடுத்துள்ளனர்!

மற்றவர்களுக்கு படி அளந்து கொண்டிருந்த விவசாயிகள் அரசின் இலவச திட்டங்களை எதிர்நோக்கி கையேந்தி நிற்பவர்களாக மாற்றப்பட்டிருப்பது நெஞ்சு பொறுக்காத அநீதியாகும்!

தேசிய அளவில், மாநில அளவில் போடப்படும் மையபடுத்தப்பட்ட திட்டங்கள் பல லட்சம் கோடி நிதிகள் கடைக்கோடி விவசாயிகளை சென்றவடைவதில்லை.
காரணம் - நமது அரசுகள் மக்களை, பெற்றுக்கொள்ளும் பயனாளிகளாக கருதி மட்டுமே திட்டங்களை தீட்டி தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்துகின்றன.
மக்களை பங்கேற்பாளர்களாக பாவித்து அந்தந்த மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்துகள் தலைமையில் திட்டங்கள், செயல்பாடுகள் நடந்தேறும் போதே முழுப்பயனையும் அவர்கள் பெற இயலும்!
காந்தி காட்டிய கிராம சுயராஜ்ஜியம் தான் நாம் கடைத்தேறும் வழியாகும்! 


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
9-1-2013

நிலைதடுமாறும் முதல்வர் பதவிகள்



                                                                                                                     -சாவித்திரிகண்ணன்


சமீபகாலமாக இந்திய மாநிலங்கள் சிலவற்றில் நிலைதடுமாறும் பதவியாக முதல்வர் பதவி நிலைதாழ்ந்து வருகிறது.

இதனால் ஆட்சித்தலைமை ஏற்றது தொடங்கி ஆடும் நாற்காலியில் அமர்ந்தவர்களாக திரிசங்கு நிலையில் திணறுகிறார்கள் முதல்வர்கள்!

தற்போது இதற்குச் சிறந்த உதாரணமாக ஜார்கண்ட் மாநிலம் திகழ்கிறது. 2000ஆண்டு தான் இந்த மாநிலம் உருவானது. இந்த 12 ஆண்டுகளில் எட்டு முதல்வர்களைக் கண்டுவிட்டது ஜார்கண்ட்!

பா.ஜ.க, ஜார்கண்ட் முக்திமோர்சா கூட்டணி அரசு பரிதாப முடிவை எட்டிக் கொண்டிருக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆதரவை விலக்கியதை அடுத்து பா.ஜ.கவின் அர்ஜீன்முண்டா கவர்னரிடம் ராஜீனாமா கடிதம் தந்துவிட்டார்.

ஏற்கெனவே ஜனதாதளக் கூட்டணியில் பா.ஜ.கமுதல்வராக பதவிஏற்ற பாபுலால் மராண்டியும் இவ்வாறு பாதி ஆட்சிகாலத்தில் பதவி இழந்தார்!
ஜார்கண்டின் அரசியலில் எந்தகட்சியையும் மக்கள் முழுமையாக ஏற்க முடியாத நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
இதனால் தான் மதுகோடா என்ற சுயேட்சை வேட்பாளர் கூட அங்கு சில காலம் முதல்வராக அமர முடிந்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தள கூட்டணியில் முதல்வரான தரம்சிங் 610நாட்களே ஆட்சியில் இருக்க முடிந்தது!
அந்த ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க உதவியில் முதல்வரானார் குமாரசாமி. ஒப்பந்தப்படி 20 மாதத்தில் அவர் முதல்வர் பதிவியை பா.ஜ.கவிடம் ஒப்படைக்க மறுத்தார். கூட்டணி முறிந்தது.
அதைத்தொடர்ந்து பதவியேற்ற எடியூரப்பா எட்டு நாட்களே முதல்வராய் இருக்க முடிந்தது!

அடுத்த தேர்தலில் போட்டியிட்டு அறுதிப்பெரும்பான்மை பெற்ற பிறகும் பா.ஜ.கவிற்கு முதல்வர் பதவி என்பது நிலையற்றதாக தத்தளிக்கிறது.

மிக்குறுகிய காலத்தில் எடியூரப்பா, சதானந்தாகௌடா, ஜெகதீஸ்ஷெட்டர் என மூன்று முதல் மந்திரிகள் பதவிஏற்றுள்ளனர் - கர்நாடகத்தில்! 

இதே போல் உத்திரபிரதேசத்தில் முதல் மூன்று முறை முதல்வர் பதவியில் மிக சொற்பகாலமே ஆட்சிபுரிந்தார் மாயாவதி.

முதல்காலகட்ட முதல்வர் பதவி 15 மாதங்கள் என்றானது!
கல்யாண்சிங் முதல்வர் பதவி அடிக்கடி ஆட்டம் கண்டு, ஆட்சி மாற்றங்கள் நடக்கின்றன.

இந்தச்சூழல் நிலவுகின்ற போது பதவி ஏற்ற ஒவ்வொரு முதல்வருக்கு ஆட்சியை சிறந்த முறையில் பரிபாலானம் செய்வதற்கு நேரமின்றி தங்கள் பதவியை தக்க வைப்பதிலேயே அவர்கள் போராட வேண்டியவர்களாகிறார்கள்.

நம்பிக்கை துரோகங்கள், குதிரைபேரம், பதவிமோகம்... என்பவை சூழ்ந்த அரசியிலில் பணபலமே பலவற்றையும் தீர்மானிப்பதால் ஆட்சியில் அமர்ந்த குறுகிய காலத்திலேயே மாநில முதல்வராயிருப்பாவர்கள் அபரிமிதமான ஊழல்களில் திளைக்கிறார்கள்.

இதனால் தான் மிக்குறுகிய கால முதல்வராயிருந்த மதுகோடா சில ஆயிரம் கோடி சொத்துகளை குவித்து வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தார் என கைதானார்.
சுரங்க ஊழலுக்கு துணைபோனதிலும், சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை வளைத்து போட்டதிலும் எடியூரப்பா பதவி இழந்தார்.

இதே போல் குறுகிய காலத்தில் பதவியில் இருந்த H.D. குமாரசாமியின் மீதும் ஏகப்பட்ட ஊழல் புகார்கள் அணிவகுத்தன.
மாயாவதியும் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்த வழக்கில் போராடிக் கொண்டிருக்கிறார்.

கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சிகள் ஒப்பந்தத்தை மீறுவது குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கூட நிறைவேற்றாது போன்றவை அம்மாநில மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்! 
அரசியல் தலைமைகளெல்லாம் அநீதிகளின் தலையாகி கொண்டுள்ளனவோ... என்ற அச்சமே மக்களிடம் மேலோங்குகிறது.
'ஆங்கு அமைவு எய்திய கண்ணும் பயமின்றே
வேந்து அமைவில்லாத நாடு - ' குறள் கூறும் அறமாகும்!

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
8-1-2013

சேவை வரி



                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

சேவை வரியை எதிர்த்து நடிகர் நடிகைகள், சினிமா, டி.வி தொழில்நுட்ப கலைஞர்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

ஏற்கெனவே தாங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு 30 முதல் 40% வரை வருமானவரியாக கட்டி வருபவர்களிடம் இந்த ஆண்டு முதல் மேலும் 12.3% சேவை வரி என்பதாக பிடித்தம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் கூறியதன் விளைவே இந்த உண்ணாவிரதம்.

"வரிக்கு மேல் வரி என வரிகளை அதிகப்படுத்திக் கொண்டே போனால் கறுப்பு பண புழக்கம் தான் அதகிமாகும். இதைத்தவிர்த்து இருக்கும் வரியை கறாராக வசூலித்தாலே போதும்..." என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளது நியாயமானதே!

சேவை வரி என்பது எல்லா நிலையில் உள்ள மக்களுக்கும் தற்போது தாங்க முடியாத சுமையாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஏற்கெனவே சுங்கவரி, கலால்வரி, விற்பனைவரி, உற்பத்திவரி வருமானவரி என பல முனைகளில் வரி வசூலிப்பது போதாது என்று 1994ல் முதன்முதலாக 3 துறைகளுக்கு மட்டுமே சேவை வரி அறிமுகமானது.

தொலைபேசி, பங்குவர்த்தகம், இன்சூரன்ஸ் என்ற மூன்று துறைகளின் மூலமாக அன்று அரசு பெற்ற சேவை வரி 410கோடி தான்!

அறிமுகமானபோது 5சதவிகிதமாகத் தான் அறிமுகமானது.
பிறகு 2009ல் 10%மாகவும், 2012ல் 12.3% மாகவும் உயர்த்தப்பட்டுவிட்டது. அதேபோல முதலில் மூன்றே மூன்று துறைகளுக்கு மட்டுமே என்று அறிமுகமாகி 2000ல் 26 துறைகளாகி, 2002-2003 நிதிஆண்டில் 52துறைகளாகி 2006-2007 நிதிஆண்டில் 99 துறைகளாகி, தற்போது 119 துறைகளுக்கு சேவை வரி விரிவுபடுத்தப்பட்டு விட்டது.

ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் எந்த பொருளை வாங்கினாலும்,

ஒரு ஹோட்டலில் சாப்பிட்டாலும் அல்லது கடையில் ஒரு ஸ்வீட்காரம் வாங்கினால் கூட இன்று சமானிய மக்கள் விற்பனை வரியோடு சேவை வரியையும் தர நிர்பந்திக்கப்பட்டுள்ளார். உண்மையில் இந்த சேவை வரி மக்களிடம் மிகக்கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக சேவை வரி மூலமாக தற்போது நமது அரசாங்கம் ஆண்டுக்கு சுமார் 1,15,000கோடியை ஈட்டுகிறது.
இந்த சேவை வரியிலிருந்து நீதிமன்றம், வங்கி, லாட்டரி, சூதாட்டம், அரசியல்கட்சிகள், தொண்டு, மத அமைப்புகள் பெறும் நன்கொடைகள் போன்றவை விலக்களிக்கப்பட்டுள்ளன. இப்படி விலக்களிக்கப்பட்ட துறைகள் 38. சேவை வரியால் விலங்கிடப்பட்டுள்ள துறைகளோ119.

சேவை வரி என்பது தேவையற்றது. மக்களை கசக்கி பிழிவது, கறுப்புபணத்திற்கு வழிவகுப்பது என்பதெல்லாம் சத்தியமான உண்மாகளாகும்!

இந்த சேவை வரி இல்லாமலே அரசாங்கம் சிறப்பாக இயங்கலாம்.
இப்படியெல்லாம் வசூலித்து சுமார் 5 லட்சம் கோடிகளுக்கு மேல் இலவசதிட்டங்ளில் பணத்தை வகைதொகையின்றி வாரி இறைக்கிறது. மத்திய அரசு.

இந்த லட்சணத்தில் 'உங்கள் பணம் உங்கள் கையில்' என நேரடிமானிய திட்டம் வேறு அமலாக்கம்.

இதற்காக அடுத்த ஆண்டு இன்னும் சேவை வரி உயர்த்தப்படலாம்.

எங்கள் பணத்தை எங்கள் பையிலிருந்து பறித்துக்க கொண்டு 
'உங்கள் பணம் உங்கள் கையில்' என்று திருப்பித் தருவதாகவே தோன்றுகிறது.
மக்களிடமிருந்து நாட்டிற்கான சேவையைப் பெறுவதற்கான திட்டங்களை தீட்டட்டும் அரசு. மக்கள் தங்கள் நேரடி சேவையை நாட்டு முன்னேற்றத்திற்கு நல்குவார்கள்.

ஆனால் சேவை வரி என்பது தங்கள் பணத்தை இழப்பது போன்ற வலியைத் தான் சகலதரப்பு மக்களுக்கும் ஏற்படுத்துகிறது. பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரை இந்த சேவை வரியை தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள்.

சேவை வரி அரசாங்கத்திற்கு பெருமளவு சென்று சேர்வதில்லை. இதில் மிகப்பெரிய வரி ஏய்ப்பு நடந்து கொண்டுள்ளது என வர்த்தகதுறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்!

சேவை வரி ஆண்டுக்காண்டு அதிகரிப்பதை தவிர்த்து அதை அறிமுகப்படுத்திய போது 5% த்தை நிலையாகக்கொள்ளலாம்.

அதே போல் சரியாக வரி வந்து சேரக்கூடிய குறிப்பிட்டதுறைகள் வரை அறிமுகப்படுத்தியதோடு நிறுத்தலாம்!

தேவை- மறுபரிசிலனை
தந்தி டிவி,
EDITORIAL VOICE,
7-1-2013

Thursday, January 3, 2013

நீதிமன்றங்களில் தமிழ்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

உயர்நீதிமன்றங்களில் வழக்குமொழியாக தமிழை பயன்படுத்துவது குறித்த சர்ச்சை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

மொழி அரசியலால் தமிழகத்தின் சமூகச் சூழல் விழி பிதுங்கி நிற்பது புதிய விஷயமல்ல, என்றாலும் இதற்கு தெளிவான தீர்வு கிடைத்தபாடில்லை.

1949ல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் இந்தியில் வழக்காடவும், தீர்ப்பு கூறவுமான அனுமதி பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார் ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா போன்ற வட இந்திய மாநில உயர்நீதிமன்றங்களில் இந்தி வழக்கு மொழியாக உள்ளது. மேற்குவங்கம், கர்நாடாகா போன்ற மாநில உயர்நீதிமன்ங்களில் பிராந்திய மொழிகளில் அவ்வப்போது வழக்குகள் சகஜமாக நடத்தப்பட்டு வருகின்றன. சர்ச்சைகள் இல்லை.

ஆனால் தமிழகத்தில் சுமார் 50 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்குவதற்கான போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் பிராந்திய மொழிகளை வழக்கு மொழியாக பயன்படுத்துவது தொடர்பான தெளிவான வழிகாட்டல்கள் இல்லை. 
இதைத்தான் பிராந்திய மொழி எதிர்ப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கின்றனர்.

ஆனால், இந்திய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 340 உட்பிரிவு (2) உடன் இணைந்த 1963 ஆட்சிமொழி சட்டப்பிரிவு 7ன் படி உயர்நீதிமன்ற வழக்குகளை மாநில மொழிகளில் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டே 2006 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் போது தமிழக சட்டசபையில் உயர்நீதிமன்த்தில் தமிழை வழக்குமொழியாக்குவது தொடர்பான தீர்மானம் அனைத்து கட்சிகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த தீர்மானத்திற்கு இன்று வரை குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தை தவிர்த்து தமிழகத்தின் பிற நீதிமன்றங்களில் தமிழ் வழக்குமொழியாக இருக்கும் சூழலில் மதுரையில் உயர்நீதிமன்றக்கிளை துவக்கப்பட்டபோது வழக்கறிஞர்கள் தமிழில் வாதாட பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். அந்தப் போராட்டம் தமிழகம் முழுமையிலும் எதிரொலித்து, மாநிலம் முழுமையிலுமுள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஸ்தம்பித்தன. இதைத்தொடர்ந்து அன்றைய தலைமை நீதிபதி இக்பால் "தமிழில் வாதாட தடையில்லை" என வாய்மொழி உத்தரவு வழங்கினார். 

கடந்த 50 ஆண்டுகளாக தமிழில் ஏராளமான சட்டநூல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன! குறிப்பாக தமிழில், 'சட்ட ஆணைய கலைச்சொல் அகராதி' டாக்டர். அனந்த நாராயணன் தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டு பல தொகுதிகள் வந்துள்ளன.

1970 களில் ம.சண்முகசுந்தரனார் அவர்களாலும், பிறகு நீதிபதி மகாதேவன் அவர்களாலும் நமது இந்திய அரசியல் அமைப்புசட்டம் அருமையான தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கண்டது. நமது நீதித்துறைவல்லுநர்கள், முன்னாள் நீதியரசர்கள் பலர் சட்ட நுணுக்கங்களை திட்பமாக வெளிபடுத்தும் வல்லமை தமிழ் மொழிக்குண்டு என பலமுறை வலியுறுத்தி உள்ளனர்.

ஆனால், தமிழ் தெரியாத நீதிபதிகள், மேல்முறையீட்டிற்காக உச்சநீதிமன்றம் போக வேண்டிய சூழல்... போன்றவற்றை காரணம் காட்டி சிலர் இதை கடுமையாக எதிர்க்கின்றனர்.

மொழிபெயர்ப்பின் துணைகொண்டு சமாளிக்கபட முடிந்தவைகளே இவை!
ஏனெனில், ஆண்டாண்டு காலம் நீதிமன்றம், வழக்கு, வாய்தா என அலைந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான சமானிய மனிதர்கள் தங்கள் பிரச்சினை நீதிமன்றத்தில் சரியாக வாதாடப்பட்டதா? படுகிறதா? என்று தெரியாமல் அலைகழிக்கப் படுகிறார்கள்.

வழக்கு மொழிஆங்கிலத்தில் இருக்கிறது என்பதால் வழக்கு தொடர்பான விபரங்களை சமானிய மக்களிடமிருந்து மறைப்பது சில வழக்குறிஞர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது. 

தமிழில் வாதாட வாய்ப்பிருந்தால் அவரவர்களும் தாங்களே தங்கள் வழக்குகள் குறித்த சட்டபிரச்சனைகளை படித்து அறிந்து நீதிமன்றங்களில் வாதாடவும். வாய்ப்புள்ளது.

தமிழை கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் வேண்டாம். எதிர்க்கவும் வேண்டாம். 
மக்களுக்காகத் தான் நீதிமன்றங்கள், நீதிபதிகள், வழக்குறைஞர்கள், அரசியல் அமைப்பு சட்டம் அனைத்துமே!

வழக்குகள் விரைந்து முடிக்கப்படவும், வாதிகள், பிரதிவாதிகள் ஏமாறாமல் நீதி நிலைநாட்டப்படவும் அந்தந்த மாநிலத்தின் மக்கள் மொழியிலேயே நீதிபரிபாலனம் நடைபெறவேண்டியது முக்கியம். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
3-1-2013

Wednesday, January 2, 2013

அத்துமீறுவது யானைகளா? மனிதர்களா?


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

யானைகள் தாக்கி மனிதர்கள் இறக்கும் செய்திகள் அடுத்தடுத்து வந்த வண்ணமுள்ளன.

பயிர்களை உண்ணவரும் யானைகளின் உயிர்களை பலி கொள்ளும் செய்திகளும் தொடர்ந்து கொண்டுள்ளன.

ஒரிரு நாட்களுக்கு முன்பு இரயிலில் அடிபட்டு ஆறு யானைகள் இறந்தன. மின்வேலிகளில் அகப்பட்டு பல யானைகள் இறந்துள்ளன. 
மைசூர் நகருக்குள் இரு காட்டு யானைகள் நுழைந்த செய்தியறிந்து அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இந்த வகையில் ஒவ்வொர் ஆண்டும் யானைகளால் பாதிக்கப்படும் குடும்பங்கள் சுமார் ஆறு லட்சம். 
மனிதர்களால் பலி கொள்ளப்படும் யானைகள் பல்லாயிரம்!

யானையை தெய்வமாக வழிபடும் மரபும், கோயில்களில் கொண்டுவைத்து ஆசிர்வாதங்கள் பெரும் நடைமுறைகளும் உள்ள நாட்டில் தாம் வருடந்தோறும் யானைகள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. வனப் பகுதிகள் சமீபகாலமாக பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. அங்கே தேயிலை, வாழை, கரும்பு, காபி தோட்டங்கள் திடீர் திடீரென தோன்றுகின்றன. ரிசார்டுகள், கிளப்ஹவுஸ், கெஸ்ட்ஹவுஸ்... போன்ற கட்டிடங்கள் சகட்டு மேனிக்கு எழுகின்றன. இந்த செல்வந்தர்களுக்கு தேவைப்படும் உழைக்கும் சக்தியைத் தர புதுப்புது கிராமங்களும் வனப்பகுதியில் தோன்றுகின்றன. தனியார் சுற்றுலாக்கள் வனப்பகுதிகளில் தங்கு தடையின்றி நடக்கின்றன. இந்த சுற்றுலா பயணிகள் குடித்துவிட்டு எரிந்த கண்ணாடி பாட்டில்களை மிதித்து ரணகாயப்பட்டு, காலப்போக்கில் காலில் சீழ்பிடித்து இறக்கும் யானைகள் அநேகம்.

யானைகள் மக்கள் வசிப்பிடங்களுக்கு வந்தால் அது பரப்பரப்பான செய்தியாகிறது. 
ஆனால், யானையின் வசிப்பிடங்களுக்குள் மனிதர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பது, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போடுவது, பெரிய, சிறிய கட்டிடங்களை எழுப்புவது போன்றவை செய்திகளாவதும் இல்லை. சட்டப்படி தடுக்கப்படுவதும் இல்லை. 

1882 - ல் சென்னை வனச்சட்டம் இயற்றப்பட்டது. 1927 ல் இந்திய வனச்சட்டம் உருவாக்கப்பட்டது. இவை இரண்டுமே அடிமை இந்தியாவில் பிரிட்டிஷார் தங்கள் ஆக்கிரமிப்புகளை நியாயப்படுத்தி, பழங்குடிகளை அப்புறப்படுத்த கொண்டுவந்தவை. இந்தச்சட்டங்களே இன்றைய ஆளும் அதிகார மையங்களுக்கு உதவிக்கொண்டுள்ளன. எனவே நாட்டு மக்களுக்கு கிடைத்த சுதந்திரம் நம் காட்டு விலங்குகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை! ஆனால் புலிகள் காப்பகங்கள் என்பதாக அறிவிக்கப்பட்டு, வனப்பகுதிகளை பாதுகாக்கும் முயற்சிகள் ஒரளவே வெற்றி பெற்றுள்ளன. 'புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும்' என்ற உச்சநீதிமன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதில்லை.

யானைகளின் இயல்பே அவை எந்த இடத்தையும், நிரந்தர குடியிருப்பாக்கி கொள்ளாதபோக்காகும். அதிக பட்சம் ஒரிடத்தில் 20 அல்லது 25நாட்கள் தங்கும். ஒரு யானையின் ஒரு நாளைய தீனி அளவு என்பது 150 முதல் 270 கிலோ வரையிலான இலை, தளை, பழங்கள் போன்றவையாகும். இதற்காக நாளொன்றுக்கு 10, முதல் 12 மணிநேரங்கள் நடந்து இரைதேடக் கூடியவை. பருவ நிலைகளுக்கு தக்கபடி இடம்பெயரும். எந்தெந்த உணவு, எந்தெந்த பகுதிகளில், எவ்வெப்போது கிடைக்கும் என்பதற்கேற்ப அதன் பயணம் சுமார் 500சதுர கீலோமீட்டர் பரப்பளவில் சுழற்சி முறையில் நடைபெறக் கூடியதாகும்.

இந்நிலையில் அவை சுற்றித்திரியும் பகுதிகளை நாம் ஆக்கிரமிப்பதால் மட்டுமே அவை தங்கள் எல்லைகளைக் கடந்து வருகின்றன.
ஆகவே, தேவை உறுதியான வனப்பாதுகாப்புச் சட்டம்.

நமது வனப்பகுதிகளை 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய நிலைமைக்கு மீட்டெடுக்க முடியுமானால் - இந்த 50 ஆண்டுகளில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் முற்றாக அகற்ற முடியுமானால் - அதற்குப் பிறகு ஏன் யானைகள் நம் பகுதிகளுக்கு வரப்போகிறது? 


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
2-1-2013

கூட்டுறவுசங்கங்கள் - மானியங்கள்



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையை சீராக்க ரூ 72 கோடியை மானியமாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

2011ம் ஆண்டு இதே போல் ரூ 82கோடியே 55லட்சம் மானியமாக தரப்பட்டது.
இந்த அரசு பதவி ஏற்றவுடன் விவசாயிகளுக்காக வட்டியில்லா பயிர் கடனாக ரூ 3,282 கோடி வழங்கப்பட்டது.
இப்படியான கடன்களும், மானியமும் தொடர்ந்து தேவைப்படக்கூடிய அமைப்புகளாக நமது கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன என்பது கவலைக்குரிய ஒரு அம்சமாகும்.

தமிழகத்தில் 10,442 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. வேளாண்மை, நெசவுத்தொழில்கள், பால், வீட்டுமனை, சர்க்கரை ஆலைகள் என பலதரப்பிலும் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இவையாவும் ஒரு காலத்தில் மிக லாபகரமாக இயங்கியவை. சங்கத்தில் இருக்கும் உறுப்பினர்களின் வாழ்க்கை தரத்தை வளப்படுத்தியவை. ஆனால் இவை தற்போது நலிந்து கிடக்கின்றன. ஆண்டுக்காண்டு அரசின் மானியத்தை எதிர்பார்த்துக் காத்துகிடக்கின்றன. பல கூட்டுறவு வங்கிகள் ஊழியர்களின் சம்பளத்தைக் கூட வழங்க முடியாமல் திணறுகின்றன.

இவையணைத்திற்கும் காரணம், கூட்டுறவுகள் எந்த லட்சியங்களுக்காக ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டதோ அதிலிருந்தது வெகுதூரம் விலகிச் சென்றதேயாகும்.

அரசாங்கத்தின் தயவுகளின்றி கூட்டுறவு பலத்தால் சுயசார்புடன், பொதுநலக் கண்ணோட்டத்துடன் செயல்பட்ட காலங்களில் கூட்டுறவு அமைப்புகள் தலைதோங்கின.

பிறகு கடந்த 45 ஆண்டுகளாக கூட்டுறவு அமைப்பில் அரசியல் தலையீடுகள் ஆரம்பித்ததில் இருந்து, அதன் கட்டமைப்பு குலைந்து உன்னத நோக்கங்கள் சிதறிப்போயின.

கூட்டுறவு சங்கதேர்தல் நடத்தப்படும் விதமே தில்லுமுல்லுகள், அராஜகங்கள் கொண்டதாக மாறிப்போனது. இந்நிலையில் கூட்டுறவு அமைப்புகளில் பொறுப்பேற்றவர்கள் அதை பலப்படுத்த உழைக்காமல், பலஹீனப்படுத்தி தங்களை மட்டும் உயர்த்திக் கொண்டனர்.

கூட்டுறவு சங்கதேர்தல்கள் அரசில் மயப்பட்டும், அராஜகமயப்பட்டும் போன காரணத்தால், நமது தமிழக முதல்வர் கடந்த ஆட்சிகாலங்களில் கூட்டுறவு தேர்தல்களையே முற்றாகத் தவிர்த்து, தனி அலுவலர்களின் தலைமையில் கூட்டுறவு அமைப்புகளை நிர்வகிக்கச் செய்தார்.

கூட்டுறவு அமைப்புகள் பலஹீனமடைந்ததற்கு முக்கிய காரணம், தேர்தல் காலங்களில் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நடைமுறையாகும். ஓட்டு அரசியலின் விளைவாக, 'விவசாயக் கடன்கள் தள்ளுபடியாகத் தானே போகிறது. நாம் ஏன் முறையாக கட்டி ஏமாறவேண்டும்' என்று விவசாயிகள் நினைக்கத் தொடங்கினார்கள்.

'திருப்பிச் செலுத்தவேண்டாத கடன்' என்ற அம்சம் பெறுபவர்களையும், தருகிற அதிகாரிகளையும் ஒரு சேர பொறுப்பற்றவர்களாக்கியது என்பதே கடந்த கால கசப்பான அனுபவங்கள் கற்றுதந்த பாடமாகும்!

இந்தச் சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துத் தான் மத்திய அரசாங்கம் கூட்டுறவு அமைப்புகள் அரசிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டு சுயசார்புடன், தன்னாட்சி அதிகாரத்துடன், வெளிப்படையான ஜனநாயகத்துடன் செயல்படுவதை உறுதிபடுத்தும் வகையில் பிப்ரவரி 2012ல் 97வது அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவந்தது.
இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டுறவுசங்கதேர்தல்கள் கண்டிப்பாக நடத்தப்பட்டேயாக வேண்டும் என உச்சநீதிமன்றம் உறுதிபடக் கூறியது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கதேர்தல்கள் நடத்தும் அறிவிப்பு வெளியானவுடன், ஆளும் கட்சியினர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களை புதிதாகச் சேர்க்கத் தொடங்கியது பிரச்சினையானது. இதனையடுத்து கூட்டுறவு தேர்தல்கள் நடத்துவதற்கென்றே தனி ஆணையம் ஒன்றை தமிழக அரசு உருவாக்கியது. இதனால் நவம்பரில் நடந்து முடிந்திருக்க வேண்டிய தேர்தல் தள்ளிப்போனது.

பிப்ரவரி 15க்குள் தமிழகத்தில் கூட்டுறவு தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டாக வேண்டும். அப்படி நடந்தால் தான் நபார்டுவங்கி மற்றும் மத்திய அரசின் நிதி உதவிகள் கூட்டுறவு அமைப்புகளுக்கு கிடைக்கும். இந்த வகையில் ஒரு நேர்மையான, ஜனநாயகமான தேர்தல் நடந்தேறி, புதிய சட்டதிருத்தத்தின் படி கூட்டுறவு அமைப்புகள் பலப்படுமேயானால் அவை அடுத்த ஆண்டு அரசின் மானியத்தை எதிர்பார்க்காத நிலை தோன்றும் அதுவே கூட்டுறவு வெற்றிபெற்றதற்கான அத்தாட்சியாகும்! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
31-12-2012

Tuesday, January 1, 2013

அரசு கேபிள் தடுக்கப்பட்டது சரிதானா?


                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

இந்தியாவில் வேறெந்த மாநில அரசும் கேபிள் நெட்வொர்க்கை கையில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தமிழகத்தில் ஏற்கெனவே கேபிள் தொழிலில் நிலவிய அரசியல் ஆதிக்கப்போட்டியின் தொடர்ச்சியாகத்தான் கேபிள் தொழில் மாநில அரசின் அதிகாரபிடிக்குள் சென்றது.

முதலில் சூப்பர் டூப்பர் டிவி என்பதாக 1995 - ல் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் கேபிள் தொழிலுக்குள் அதிரடியாய் நுழைந்து, அராஜகமாய் அனைத்து ஆப்ரேட்டர்களிடமும் ரூ5,000 வசூலித்து தன் நிறுவனத்தின் கீழ் இணைத்தார். ஆனால் நிர்வாக அறிவும், தொழில்நுட்பவளர்ச்சிபோக்கும் அவருக்கு இல்லாததால் சூப்பர் டூப்பர் காணாமல் போனது.

அதற்குப் பிறகு 2000 - த்தில் எஸ்.சி வி நிறுவனம் தொழில் போட்டியாளர்களை ஒழித்து அரசியல் பலத்தால் ஆழமாக வேரூன்றியது.

தயாநிதிமாறன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராயிருந்த போது ஜெயாகுழுமத்தின் புதிய சேனலுக்கு அனுமதி கிடைக்காத ஆத்திரத்தில் கேபிள் தொழிலை அரசுடமையாக்கும் அவசரசட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார் ஜெயலலிதா.

மத்திய அரசின் அதிகாரவரம்பிற்குள் வரும் கேபிள்தொழிலை ஒரு மாநில அரசு, அரசுடமையாக்க முடியாது என்பதால் அதை அன்றைய கவர்னர் பர்னாலா மத்திய அரசுக்கு அனுப்பவில்லை.

அடுத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க. அக்கட்சியின் குடும்ப அதிகார மையங்களுக்கிடையே நடந்த கொந்தளிப்பு அரசியல் சூழ்நிலை நிர்பந்தத்தால் 2007 செப்டம்பரில் தமிழக அரசு, கேபிள் தொழிலை கைவசம் எடுத்தது.

"கேபிள் தொழிலையே அரசுடமையாக்குகிறேன்" என்ற ஜெயலலிதாவின் நிலைபாட்டிற்கும், 'கேபிள் தொழிலை அரசும் செய்யும்' என்ற கருணாநிதியின் நிலைபாட்டிற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

பிறகு அரசியல் காரணங்களால் அன்றைய அரசு கேபிள்கார்ப்பரேஷனின் கைகள் கட்டப்பட்டன, என்பது ஒரு புறமிருக்க, 2008 -ல் மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய தொலைத்தொடர்புத் துறை ஒழுங்கு முறை ஆணையம் என்ற டிராய் அமைப்பின் தெளிவான உறுதியான நிலைபாடும் அரசு கேபிள் கார்ப்பரேஷன் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணமாகவும் கொள்ளலாம்.


2008ல் டிராய் அமைப்பு என்னென்ன பரிந்துரைகளை மத்திய அரசுக்கு வழங்கியதோ, அதையே இன்றும் அச்சுப்பிறழாமல் உறுதிபடுத்தியுள்ளது.

அதன் சாராம்சம் இது தான்;
மத்திய அமைச்சகங்களோ, மாநில அரசு துறைகளோ, 
மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான நிறுவனங்களோ 
மத்திய மாநில அரசின் சார்பு நிறுவனங்களோ, அல்லது 
மத்திய மாநில அரசுகள் தனியாருடன் இணைந்து கூட்டாகவோ, அல்லது 
மத்திய மாநில அரசு நிதி உதவியில் செயல்பட்டு வரும் எந்த ஒரு நிறுவனமோ 
சேனல் ஒளிபரப்பிலோ, கேபிள் விநியோகத்திலோ ஈடுபட அனுமதிக்கக் கூடாது என்பதே டிராயின் தெளிவான அறிவுறுத்தல். 

இதில் இடம்பெற்றுள்ள வாசகங்களை உற்று நோக்கினால் மத்திய மாநில அரசுகளின் எந்த ஒரு அதிகாரபலமும் அல்லது அதன் அதிகாரச் சாயல் கூட கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துகின்ற இந்த காட்சி ஊடகத்திற்குள் கால்பதித்துவிடலாகாது என்பதில் டிராய் கொண்டுள்ள தெளிவான - மக்கள் நலன் சார்ந்த பார்வை - புலப்படும்.

இதனால் தான் ஏற்கெனவே சேனல் தொடங்குவதற்கு விண்ணப்பித்திருந்த மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை, குஜராத் அரசு, ஆந்திர அரசு மற்றும் பஞ்சாப் அரசு ஆகியவற்றிக்கு சேனல் தொடங்க அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது.
ஆனால் இதையெல்லாம் அந்தந்த மாநில அரசுகளோ அரசியல் தலைமைகளோ, 'அரசியல் சூழ்ச்சி' என்று குற்றம் சாட்டவில்லை.

ஒரே ஒரு சேனல் நடத்துவதற்கே எந்த அரசுக்கும், அமைச்சகத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனைத்து சேனல்களையும் கட்டுப்படுத்தும் அசுரபலம் பொருந்திய கேபிள் விநியோகத்திற்கு எப்படி அனுமதி தரப்படும்? என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அரசுகளோ, அரசியல் கட்சிகளோ சேனல்கள் நடத்தக்கூடாது என்பதை உச்சநீதிமன்றமுமே கூட உறுதிபடுத்தியுள்ளது. ஏனெனில், 'அப்படி சேனல் நடத்துவதால் மக்கள் பாரபட்சமற்ற செய்திகளைப் பெறமுடியாது' என்று உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு டிராயின் பரிந்துரைகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றாலும் தமிழக அரசுக்கு பெரும் தலைக்குனிவே ஏற்படும்.

காரணம் என்னவெனில், அரசுத்துறை காட்சி ஊடகத்தில் கால்பதிக்கும் போதோ, அல்லது கட்டுப்படுத்தும் போதோ என்னென்ன அசம்பாவிதங்கள், அராஜகங்கள் நிகழக் கூடும் என 'டிராய்' கணித்ததோ அவை அனைத்துமே தமிழகத்தில் நிதர்சன உண்மையாக்கப்பட்டிருப்பதை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைக்க பாதிக்கப்பட்ட ஏராளமானாவர்கள் காத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே டிராய்க்கும், காம்படிஷன் கம்யூனிகேஷன் ஆப் இந்தியா அமைப்பிற்கும் அரசுகேபிள் அராஜகம் மற்றும் 'மோனாபலி' தொடர்பான பல புகார்கள் தமிழக கேபிள் ஆப்ரேட்டர் மற்றும் நுகர்வோர் அமைப்பு மூலம் சென்றுள்ளன.

தமிழக அரசின் கேபிள் கார்பரேஷன் தமிழகத்தின் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் செயல்பட்டு வந்த அனைத்து எம்.எஸ்.ஒக்களையும் தொழிலில் இருந்தே முற்றிலுமாக அப்புறபடுத்தி 'Monopoly' யாக இருப்பது என்பதே முதல் பெரும் தவறாகும். அப்படி அப்புறப்படுத்திய இடங்களையெல்லாம் அரசியல்வாதிகள் அபகரித்துள்ளனர் என்பது அதை விட பெரும் தவறாகும்.

அடுத்ததாக, அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அரசு கேபிளில் சன்நியூஸ், கேப்டன்நியூஸ், மெகாநியூஸ் போன்றவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. கலைஞர் நியூஸ், ராஜ்நியூஸ், ... போன்றவை சில இடங்களில் மட்டுமே காட்டப்படுகின்றன. மேலும் தமிழக அரசை விமர்சிக்கும் சேனல்கள் அவ்வப்போது ஐந்து முக்கிய நகரங்களில் அவ்வப்போது இருட்டடிப்பு செய்யப்படுவதும் சம்மந்தப்பட்ட சேனல் உரிமையாளர்கள் அரசு கேபிள் நிர்வாகத் தலைமையை அணுகி மன்னிப்புகேட்பதோடு சில லட்சங்களோ, சில கோடிகளோ கப்பம் கட்டித்தான் சேனலை இயக்க வேண்டிய சூழல் நிலவுவதும் அரோக்கியமான ஊடகச்சூழலுக்கு உகந்ததல்ல.

காட்சி ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான இந்த கழுத்து நெறிபடும் அவலத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனில் அரசாங்க அதிகாரமையங்களிலிருந்து கேபிள் தொழில் வர்த்தகத்தை அந்நியப்படுத்தி சுதந்திரமான, வெளிப்படையான தொழில் போட்டிக்கு வித்திடச் செய்வது தான் நல்லது.

இதே போல் தனியாரின் தனிப்பெரும் ஆதிக்கம் என்பதும் ஆபத்தானது என்றே 'டிராய்' தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளாட்டும், வளர்ந்து வரும் ஜனநாயகநாடுகளாகட்டும் எல்லா நாடுகளிலுமே அரசு மற்றும் அரசு சார் அமைப்புகளோ, அரசியல்கட்சிகளோ சேனல் தொடங்குவதற்கு தடை என்பதாகவே சட்டங்கள் உள்ளன. எந்த ஒரு தனி நிறுவன தனி நிருவன ஆதிக்கத்தையும் கூட வளரும் ஜனநாயக நாடுகள் அனுமதிப்பதில்லை 
மற்றொரு முக்கியமான விஷயம் கேபிள் விநியோகம் என்பது தொலைப்பேசி, இணையத்தளம், தொலைக்காட்சி என்ற முப்பெரும் அதிகாரம் சம்மந்தப்பட்டது இவை மூன்றுமே மத்திய அரசின் அதிகார பட்டியலில் வருகிறது. இதை மாநில அரசு அதிரடியாக தன் அதிகாரத்திற்குள் எடுத்துக்கொள்ளமுடியாது. 

இந்தியா முழுமைக்கும் எது சரியானதாக இருக்கிறதோ, அதுவே தமிழகத்திற்கும் பொருந்தும். 

இன்றைய டிஜிட்டலைசேஷன் அனுமதியை இது வரை 10க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. இதில் கேபிள் ஆப்ரேட்டர்கள் ஒன்றிணைந்து துவங்கியுள்ள நிறுவனங்களும் உள்ளன. சென்னையில் கேபிள் ஆப்ரேட்டர்கள் துவங்கியுள்ள கூட்டு நிறுவன எம்.எஸ்.ஓ முயற்சியைப்போல தமிழகம் முழுமையிலுமே அரங்கேறியவண்ணம் உள்ளன. 
கேபிள் தொழிலில் இது போன்ற கூட்டுறவு முயற்சிகள் ஊக்கவிக்கப்படவேண்டும். உழுபவனுக்கே நிலம் என்பது போல் தொழில் செய்பவனுக்கே அதன் பலன் கிடைக்கவேண்டும். பணபலம், அரசியல் பலமுள்ளவர்கள் திடிரென்று ஒரு தொழிலிலை அபகரித்துவிடமால் சிறிய முதலீட்டாளர்கள் ஒன்றிணையவேண்டும். அதற்கு 'டிராய்' போன்ற அமபைப்புகள் தகுந்த சட்டபாதுகாப்பையும், தொழில் நெறிமுறைகளையும் உருவாக்கவேண்டும்.

இனி எந்த ஒரு தனி நிறுவனத்தின் வழி வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டாலும் டிராய் சட்டப்படி 100 இலவச சேனல்களை ரூபாய் 100க்கு தந்தாகவேண்டும். அதற்கு பிறகு கட்டணச் சேனல்கள் தேவை என்றால் தான் கூடுதலாக பணம் செலுத்தவேண்டியிருக்கும். 

எனவே உருவாகப்போகும் தமிழக அரசு கேபிளின் வெற்றிடத்தை இனி எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஆக்கிரமிக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு வாய்ப்பை தந்துவிடாமல் கேபிள் ஆப்ரேட்டர்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். 

ஆரோக்கியமான, ஜனநாயகமான, சுதந்திரமான தொழில்போட்டிகள் வர்த்தக முயற்சிகள் வரவேற்க்கத்தக்கது. அரசாங்கத்திற்கு எதற்கு வியாபாரம்? அதைச் செய்யத்தான் ஆயிரக்கணக்கில் வியாபாரிகள் இருக்கிறார்களே.. அவர்கள் தடையின்றி வர்த்தகம் செய்ய வழிவகுத்து, முறையாகச் செய்கிறார்களோ என கண்காணித்து, மக்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாக்க வேண்டியதே அரசு பொறுப்பு.

1-1-2013

விவசாயிகளை கருவறுக்கும் பிரதமர்


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

"இந்திய விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறவேண்டும் விவசாயத்தை குறைவான மக்கள் சார்ந்திருக்கும் போது தான் விவசாய வருமானம் அதிகரிக்கும் ". 

இப்படி பேசியிருப்பவர் அமெரிக்க அதிபரல்ல, உலக வங்கித் தலைவருமல்ல - நமது இந்திய பிரதமர் மன்மோகன் சிங்!

தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் 12வது ஐந்தாண்டு திட்டம் குறித்து பேசிய நமது பிரதமர், நமது நாட்டு விவசாயிகளுக்கு இப்படி ஒரு ஆலோசனை வழங்கியிருப்பது அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சியல் ஆழ்த்தி இருக்கிறது.

எவ்வளவு தான் நவீன வளர்ச்சியடைந்தாலும் அடிப்படையில் இந்தியா இன்றும் ஒரு வேளாண்மை நாடு தான்!

உணவு உற்பத்தி தான் நமது பலம். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறியதும், அந்த கிராமப்பொருளாதாரமும், உணவு உற்பத்தியுமே இந்தியாவை வாழ்விக்கிறது என்றதும் இன்றைக்கும் பொருந்துகிறது. என்றென்றைக்கும் பொருந்தக் கூடியதாகும்.
இன்றைக்கும் இந்தியாவில் விவசாயமே அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு தருகிறது. அவர்கள் விவசாயத்தை நிறுத்திவிட்டால் அனைவருக்குமான உணவுக்கு என்ன செய்வது?
கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரைலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது எதனால்?

அப்போதெல்லாம் விவசாய வருமானம் குறித்து கவலைப்படாத பிரதமர் இன்று அந்நிய நிறுவனங்கள் இந்திய விவசாயத்தில் கால்பதிக்கத் தொடங்கிய நிலையில் விவசாயவருமானம் குறித்து அக்கறைப் படுவதும், விவசாயிகளை தொழிலிருந்தே விலகச் சொல்வதும் ஏன்? என்பதை பாமர மக்களும் உரண முடியும் 

உழைப்பும், சேமித்து வைத்த விதைகளும் இயற்கையாக கிடைக்கும் உரங்களும் பெருக்கெடுத்துவரும் தண்ணீரும் மட்டுமே விவசாய முதலீடாக இருந்த காலத்தில் விவசாயிகள் தற்கொலை நிகழவில்லை. விவசாயத்தில் ரசாயண உரங்களை அறிமுகப்படுத்தி, வீரியவிதைகளை வற்புறுத்தி திணித்து, பூச்சிமருந்து உயிர்கொல்லிகளை பழக்கபடுத்தி விவசாயத்தை பெரும் முதலீடு தேவைப்படும் தொழிலாக மாற்றியது நமது அரசாங்கமே.

அதன் விளைவுகளே விவசாயத் தற்கொலைகள்.
விவசாய உற்பத்தியை தேவைக்கும் அதிகமாகச் செய்வது உணவு தானியக் கிடங்குகளில் பல கோடி டன் உணவு பொருட்களை வீணடித்து விவசாயிகளல்ல. இப்போதும் நமது உணவு கிடங்குகளில் 7கோடி டன் இருப்பு இருக்கிறது. இதில் 50 சதவிகிதமாவது வீணாக்கப்படும் என்பதே நிதர்சனம்!

கடந்த ஆண்டில் 1கோடி டன் அரிசியும் தலா 25 லட்சம் டன் கோதுமையும் சர்க்கரையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியானது. இதன்மூலம் இந்தியாவில் பெரும் அந்நிய செலவணியும் கிடைத்தது. கந்துவட்டி கொடுமை, மழையின்ன என இவ்வளவு துன்பங்களுக்கு இடையிலும் இத்தகைய சாதனைகளை நிகழ்த்தி கொணிடருக்கும் இந்திய விவசாயிகளை 'உங்கள் தொழிலை கைவிடுங்கள்' என பிரதமர் கூறுவது அந்நிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இல்லாமல் வேறெதற்கு?

விவசாயத்திற்கு வேண்டிய நீராதாரங்ளை போற்றிப் பாதுகாத்து, இயற்கை பேரழிவுகளிலிருந்து விவசாயத்தை காப்பாற்றி, கடன் தந்துவட்டி கொடுமைகளிலிருந்து விவசாயிகளை மீட்டெடுத்து விவசாயப்பொருட்களை உயிர்போல் பத்திரப்படுத்தி, உரிய வகையில் அதை விநியோகிக்க வேண்டியது தான் அரசின் கடமை!
விவசாயத்தை அந்நிய நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விவசாயிகளை தொழிலில் இருந்தே அப்புறப்படுத்துவதல்ல. உலகில் அச்சாணி போன்றவர்கள் என்றார் வள்ளுவர்.

உலகம் எத்தனை தொழில்கள் செய்தாலும் உலகத்தார் வாழ்வதற்கு அடிப்படை காரணமாக விளங்கும் உழவுத்தொழிலே தலை சிறந்தது என்றார் வள்ளுவர்.
விவசாயத்தை பாதுகாப்போம். இதில் அந்நிய நிறுவனங்களின் ஊடுருவலை வேரறுப்போம். 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
28-12-2012

தேசிய வளர்ச்சி கவுன்சில் சர்ச்சை



                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

ஆழமான விவாதங்கள், அர்த்தமுள்ள கருத்துபரிமாறல்களோடு நடைபெற்று இருக்க வேண்டிய 57வது தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் இன்று அதிருப்தி அலைகள் வெளிக்கிளம்ப நடந்திருக்கிறது.

உருவாக இருக்கின்ற 12வது ஐந்தாண்டு திட்டத்தின் வடிவம் முழுமைபடுத்தப்பட வேண்டிய நிலையில் 28மாநிலங்கள் மற்றும் 7 ஒன்றியப் பிரதேசங்களின் முதல்வர்கள் அழைக்கப்பட்டது கருத்து பரிமாற்றங்களின் போக்கிலான வளர்ச்சிக்கு வித்திட்டிருக்குமேயானால் அது தான் கூட்டப்பட்ட நோக்கத்திற்கு வலு சேர்த்திருக்கும்.

ஆனால் NDCகூட்டம் ஏதோ சடங்கிற்கானது போல் நடத்தப்பட்டால் அது ஏற்புடையதன்று.

விவாதிக்க வேண்டிய பெரிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, அவை எதிர்கால இந்தியாவின் தலையெழுத்தையே தீர்மானிக்க கூடியதாய் இருக்கும் போது முதல்வர்கள், திட்டக்குழு துணைத்தலைவர், மத்திய அமைச்சர்கள், தலைமைதாங்கிய பிரதமர் ஆகியோர் பேச நேர அவகாசமில்லாமல் கூடிக் கலைவதென்றால் என்ன பொருள்?

இந்த கூட்டத்தை நான்கு நாட்களுக்கானதாக திட்டமிடலாம். அல்லது வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நான்கு பகுதியினரையும் தனித்தனிபிரிவாக அழைத்து ஒரு நாளும் சேர்ந்தாற்போல் அடுத்த நாளுமாக இரு நாட்களாவது நீடித்திருக்கலாம். வருடத்திற்கு ஒரே ஒரு முறை தான் நடத்தப்படுவதால் இந்த வாய்ப்பை அனைவரும் சரியாக பயன்படுத்த காலவகாசம் என்பது மிக முக்கியமாகும். முக்கியமாக மத்திய - மாநில உறவுகள் வலுப்பட இந்தக்கூட்டம் உதவவேண்டுமேயல்லாது விரிசல் பெற வித்திடலாகாது.

இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசு மலர்ந்தது தொடங்கி 1990வரையிலும் மாநிலங்கள் மத்தியிலிருந்து வரிவருவாய் 32.5% பெற்றன. பிறகு அது 29.5% மாகக் குறைந்தது. தற்போதோ மாநிலங்கள் பெறும் மத்திய வரிவருவாய் என்பது 19விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது.

கூட்டாட்சி ஜனநாயகத்தில் அதிகாரப் பரவல் என்பதே அடிப்படை பலமாகும்! ஆனால் அதிகார குவியலை நோக்கியே மேன்மேலும் மத்திய அரசு சென்று கொண்டிருப்பது தேசிய ஒற்றுமைக்கே பங்கமாகிவிடும்.
குடியரசு மலர்ந்த பிறகு மக்களாட்சியைப் பற்றிய புரிதலும், பொதுநலன் குறித்த கூட்டு முயற்சியும் வளர்த்தெடுக்கப்படாமல் மேன்மேலும் பின்தங்கியதன் விளைவாகவே மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டதையும், மாநில அரசுகளிடமிருந்து அதிகாரங்கள் குறைக்கப் பட்டதையும் பார்க்கவேண்டும்.


தற்போது மத்திய அரசிடம் 98 வித அதிகாரங்களும் ,
மாநில அரசுகளிடம் 62வித அதிகாரங்களும்

மத்திய - மாநில அரசுகளிடையே கையாளும் விதமாக 52 அதிகாரங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மத்திய - மாநில அரசுகளிடையே ஒரு சமத்துவமற்ற உறவுகளுக்கு இவை வித்திட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்நிலையில் மாநில ஒருங்கிணைப்பு கவுன்சில், தேசிய வளர்ச்சி கவுன்சில் போன்றவை ஒரு சடங்காகி போயுள்ளன.

மத்திய அரசு ஒரு பேரரசு போலவும், மாநில அரசுகளோ பேரரசின் தயவில் வாழும் சிற்றரசுகள் போன்றவுமான நடைமுறை ஜனநாயக யுகத்திற்கு ஏற்றதல்ல!
தான் அவமானப்படுத்தப்பட்டதாக' தமிழக முதலவர் ஜெயலலிதா கூறியுள்ளதும் "மத்திய அரசின் கருத்தை கேட்டுச் செல்வதற்காக மட்டுமே முதல்வர்கள் அழைக்கப்படுவதை ஏற்க முடியாது" என நரேந்திரமோடி கூறியிருப்பதையும் அலட்சியப்படுத்த முடியாது.

நடந்த நிகழ்வுகளை ஆழ்ந்து பரிசிலித்து, நடக்கவேண்டிய நல்லவற்றை மனதில் நிறுத்தி, மத்திய ஆட்சியாளர்கள் மாற்று சிந்தனை பெறவேண்டும். அது அதிருப்திகளைக் களைந்து, அரவணைப்பை உறுதிபடுத்துவதாக இருக்கவேண்டும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
27-12-2012


சீரழிக்கப்படும் நீர் ஆதாரங்கள்




                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

இந்தியாவின் பலமே வேளாண்மை தான்!
120கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவளிக்கும் நம் அன்னைபூமியும், அதற்கு ஆதராமாகச் செயல்படும் நதி மற்றும் ஆற்றுநீர் படுகைகளுமே வேளாண்மைக்கு துணையாகும்.

இத்தனை ஆண்டுகளாக - பூமி தோன்றி நாகரீகம் மலரத்தொடங்கிய நாளிலிருந்து - நதிகளே மனிதகுலத்தை வாழ்வித்து, வளர்த்தெடுத்தது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக தடையின்றி உயிர்களை, பயிர்களை செழிக்க வைத்த நதிகளை தற்போதைய தலைமுறையில் அழிக்க செய்யும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் தமது சமீபத்திய கள ஆய்வில் தெரிவித்துள்ள தகவல்கள் நம்மை பதறவைக்கின்றன.

இந்தியாவின் புண்ணிய நதிகளிளெல்லாம் தற்போது குடிக்கவோ, குளிக்கவோ கூட தகுதியற்ற தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. கங்கை நதி பற்பல கழிவுநீர் கால்வாய்களின் சங்கமமாகிவருகிறது. யமுனை நதி தொழிற்சாலைக் கழிவுகளால் நாற்றமெடுக்கிறது. வருணா, கண்டாக் போன்ற நதிகளின் நிலைமைகளையோ வர்ணிக்க வார்த்தைகளில்லை. வருத்தமே மேலோங்குகிறது. 

இத்தகைய நிகழ்வுகள் வருங்காலத்தில் நீர், நில சுற்றுப்புறச் சூழல்களில் பல அசாதாரணமான அசம்பாவிதங்களுக்கு வழிவகுக்கும் என்கிறார் அனில் ஜோஷி.

இத்தகைய சூழல்கள் தமிழ்நாட்டிலும் நிலவுகின்றன. 

தமிழ்நாட்டில் பவானி ஆற்றுப்படுகைகள் ஈரோட்டிலும், திருப்பூரிலும் சாயப்பட்டறைகளால் பாழ்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் விவசாயம் பெரும் வீழ்ச்சி கண்டுவருகின்றன. குடிதண்ணீரிலெல்லாம் நச்சு மிதக்கின்றன.

திண்டுக்கல் பகுதியின் தோல் தொழிற்சாலைகளால் அப்பகுதி நிலத்தடி நீர் தீண்டத் தகாதவைகளாக மாறிவருகின்றன. வைகை நதியின் தண்ணீர் வரத்துகளெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டதால் வறண்டு வருகின்றன.

தாமிரபரணி ஆற்றுத்தண்ணீரை பன்னாட்டு குளிப்பான நிறுவனங்கள் உறிஞ்சி கொண்டிருக்கின்றன.
கோவைவாசிகள் தூய தண்ணீர் என்று சிலாகித்து பேசிடும் சிறுவாணித் தண்ணீர் இன்று மாசடைந்து வருகிறது.

அடுத்தடுத்த தலைமுறைக்கு இந்த ஆற்றுத் தண்ணீரை விட்டுவைக்கப் போகிறோமா? என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே ஒரு போர்கால நடவடிக்கையாக நமது நதி, நீர், ஆற்றுநீர் படுகைகளை நாம் காப்பாற்றவேண்டும். இதற்காக ஒரு அதிகாரபூர்வ அமைப்பு உருவாக்கப்படவேண்டும். உள்ளாட்சிகளின் உதவியோடு இது செயல்படவேண்டும்.
ஆற்றுபடுகைகளில் மணல் கொள்ளைகள் தொடர்வதால் தண்ணீரை இனி சேமிக்க முடியாது. மணல்கள் தாம் தண்ணீரை பாதுகாக்கும் வங்கிகள்.

நமது அணை கட்டுகளில் தேங்கியுள்ள மணலை அப்புறப்படுத்தினால் அவை தமிழகத்தின் சில வருடக் கட்டுமான பணிகளுக்கு கைகொடுக்கும். அத்துடன் நீர் கொள்ளவும் அதிகமாகும்.

பழந்தமிழர்களால் பாதுகாக்கப்பட்ட கண்மாய்கள், ஏரிகளை மீண்டும் புனரமைக்க வேண்டும்.

இதற்காக மாவட்ட, தாலுக்கா, பஞ்சாயத்து அளவில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை, விவசாயிகளைக் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

இந்திய ஆறு மற்றும் நதிநீரின் 80% வேளாண்மைக்கும், குடிதண்ணீரிருக்குமே பயன்படுகிறது.
நீரின்றி அமையாது உலகு. இதை நினைவில் கொள்ளவேண்டிய தருணம் இதுவே! 

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
26-12-2012

பாலியல் கொடுமைக்கு எதிரான தார்மீக ஆவேசம்



                                                                                                                -சாவித்திரிகண்ணன்

இவர்கள் ஊதியம் கேட்டுப்போராடவில்லை....
கட்சிவிசுவாசத்திற்காக களம் காணவில்லை....
சுயநலம் சார்ந்த கோரிக்கைகளுக்காக அணிதிரளவில்லை....
ஆனால் தாங்கள் முன்பின் பார்த்தறியாத ஒரு இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூர பாதிப்பு இவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. போலீசாரின் தடியடியையும், தண்ணீர் பாய்ச்சலையும் தடைதாண்ட வைத்துள்ளது. 
இந்தியச் சமூகம் இதயம் மரத்துப்போகவில்லை.
அது உயிர்ப்போடு, சகமனிதரின் மீதான கரிசனையோடு தான் இருக்கிறது. என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும்.
இந்த இளைஞர்களை ஒன்று படுத்தியதில் நவீனதகவல் - தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தான் பெரும்பங்கிருக்கிறது. சமூக வளைத்த தளங்களின் மூலமான கருத்து பரிமாறல்களே இந்த படித்த இளைஞர்கூட்டம் அணிதரளவும், போராடவுமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அண்ணாஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் முன்முதலாக இது வெளிபட்டது. பிறகு இதை அரவிந்த் கேஜ்ரிவலும் பயன்படுத்தினார். இந்த தார்மீக ஆவேசம் தலைவணங்கப்படவேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இலக்கில்லாத பயணம் பயனற்றது. எந்தப் பிரதிபலும் பாராமல் இந்த இளைஞர்கூட்டம் போராடுவதை எப்படி தங்கள் அரசியலுக்கு பயன்படுத்துவது என்பதில் எதிர்கட்சிகள் ஆதாயம் அடையக்கூடும்.

இந்த தார்மீக ஆவேசத்திற்கு செவிமடுப்பது போல் பாவணைகாட்டி, பற்பல அறிக்கைகள் வெளியிட்டு, மக்கள் உணர்வுகளை பிரதிபலிப்பதில் ஆளும் கட்சி தொடங்கி அனைத்து அரசியல்கட்சிகளுமே போட்டி போடுகின்றன.

தொலைநோக்குப் பார்வையும், அனைவரையும் தொடர்ந்து ஒன்றுபடுத்தி இயக்கும் தலைமையும் இல்லாத பட்சத்தில் இந்தப்போராட்டங்கள் காலப்போக்கில் நீர்த்துப் போய்விடும்.

அண்ணாஹசாரேவிற்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இன்று படிப்படியாக குறைந்ததே இதற்கு உதாரணமாகும். ஆனால் ஒரு மாற்று அரசியலும், மனிதநேயமிக்க சமூகபார்வையும் தேவைப்படும் நாட்டில் இந்த போராட்டங்கள் இவற்றை நிறைவேற்றுமா? 
படித்தவர்களிடம் மட்டும் எழுந்துள்ள இந்த தார்மீக ஆவேசம் பாரமரர்கள் வரை சென்று சேருமா? அப்படி சென்று சேர்க்கும் தலைமை அங்கிருந்து தோன்றுமா? என்பது கேள்விக்குறியே!

ஏனெனில் ஏற்கெனவே அரசியல் கட்சிகள் 'போலியான அறச்சீற்றத்தை' தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக காட்டியதில் அறுவெறுத்து நம்பிக்கை இழந்துள்ளனர் பெரும்பாலான மக்கள்.

தாங்கள் பொருளாதார ரீதியாக சுரண்டப்பட்டுக் கொண்டிருப்பதை எதிர்க்கமுடியாமல், உணவு, உறைவிடம், உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக நாளும் அல்லாடிக் கொண்டிருக்கும் மக்களை அவர்களுக்காகவும் குரல் கொடுத்து அரவணைக்கும் போது தான் ஒன்று திரட்ட முடியும்.

அண்ணாஹசாரே, அரவிந்த்கேஜ்ரிவால் போன்றவர்களால் இன்னும் சாமனியமனிதர்களை அணிதிரட்ட முடியவில்லை. அப்படி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தன்னை அர்பணிக்கக் கூடிய ஒரு அரசியல் தலைமையே இந்திய சமூகத்தின் தேவையாகவும், எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
24-12-2012

வரவேற்கத் தகுந்ததா - வங்கிதுறை சட்ட சீர்திருத்தம்?


                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

வங்கித்துறை சட்ட சீர்திருத்தம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து இந்தியாவின் மிகப்பெரிய நான்கு வங்கி ஊழியர் அமைப்புகள் வேலைநிறுத்தம் செய்துள்ளன. இதனால் சுமார் 5லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிக்கு வராததால் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. பொதுமக்களும், நிறுவனங்களும் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிட்டது. ஆனால் வங்கி ஊழியர்களோ இந்த வேலைநிறுத்த போராட்டம் எங்களுக்கானதல்ல, மக்கள் நலனுக்கானது. நாட்டு நலனுக்கானது. என்கிறார்கள்.

வங்கித்துறையில் தனியார் ஆதிக்கத்தை அதிகப்படுத்துவது, வெளிநாட்டு வங்கிகள் மேன்மேலும் வலுவாக காலூன்ற வழிவகுப்பது, வங்கிக் கிளைகளை குறைப்பது, வங்கிப் பணிகளை Outsourcing செய்வது, முன்பேர வர்த்தகத்தில் வங்கிகளை ஈடுபடுத்துவது, அப்படி ஈடுபடும்போது இதை கண்காணிக்கும் ஆணையத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விதிவிலக்களித்து கட்டற்ற சுதந்திரத்தை வழங்குவது... போன்றவை இந்த வங்கித்துறை சட்ட சீர்திருத்த மசோதாவில் இருந்தது. ஆனால் இடதுசாரி இயக்கங்கள், வங்கி ஊழியர் அமைப்புகளின் கடும் எதிர்பால் வங்கிகளை முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.
நமது அரசாங்கம் செயல்படுத்திவரும் தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களின் ஓர் அம்சம் தான் இந்த வங்கி துறை சட்ட சீர்திருத்த மசோதா!

இது சீர்திருத்ததிற்கானதா? அல்லது சீர்கேட்டிற்கானதா? என்பது இன்று பெரும் விவாதமாகியுள்ளது. 
இந்தியாவின் மிகப்பெரிய பலமே சுமார் 53,000கிளைகளோடு செயல்படும் பொதுத்துறை வங்கிகளே! ஏழுலட்சம் ஊழியர்கள், 60லட்சம் கோடி இருப்பு.... போன்றவை சாதாரணமானதல்ல. இதனால் தான் மொத்த வங்கிசேவையில் 75% பொதுத்துறை வங்கிகளின் பொறுப்பில் உள்ளன. 31 தனியார் வங்கிகள் 18.2% சேவையையும் 38, வெளிநாட்டு வங்கிகள் 6.5% சேவையையும் கொண்டுள்ளன.

2007ல் உலகளாவிய ஒரு பொருளாதார தேக்கம் ஏற்பட்ட சூழலில் இந்தியாவின் 27 பொதுத்துறை வங்கிகள், நகர்புறங்கள்,மாவட்டங்கள், மாநிலங்கள் என விரிந்து பரந்துள்ள கூட்டுறவு வங்கிகள் 197, பிராந்திய வங்கிகள் மற்றும் 6 பெரிய பொதுத்துறை நிதி நிறுவனங்கள் போன்றவையே இந்திய பொருளாதாரம் தாக்குபிடிக்க காரணமாயிற்று. இந்த மசோதாவில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் முயற்சி என்ற வகையில் வங்கியில் பெரும் கடன் பெற்றிருப்பவரே வங்கியின் இயக்குநராகவும் வர வாய்ப்பு செய்யப்பட்டுள்ளதானது பரந்துபட்ட அளவில் ஒரு அச்சத்தை தோற்றுவித்துள்ளது. 

இந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் பல்வேறு நிதிமோசடிகளால் இழந்திருக்கும் தொகை 3,799கோடி! இது தவிர இந்திய வங்கிகளின் வசூலாகாதக் கடன் தொகை மட்டுமே 1.23லட்சம்கோடி! இந்த நிலையில் கடன் பெறுபவர் கையிலேயே அதிகாரமும் சேருமானால் நிலைமை என்னவாகும்? என்ற அச்சம் நியாயமானது. பரிசிலனைக்குரியது.

வாராக்கடன் என்பது தனியார் வங்கிகளிலும் இல்லாமல் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த தனியார் வங்கிகளின் வாராக்கடன் 14,778 கோடி தான்! தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் ஊழியர்களுக்கு 150% செலவு செய்கின்றன. அகவிலைப்படி, பெட்ரோல் அலவன்ஸ், வீட்டுவாடகைப்படி என ஏகப்பட்ட சலுகைகளை பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பெற்றாலும் வாடிக்கையாளர்கள் சேவை என்ற விசயத்தில் பொதுவாக பின்தங்கியுள்ளனர் என்பதே மக்களின் பரவலான கருத்தாக உள்ளது. எனவே வங்கி ஊழியர்கள் தங்களை சுயபரிசிலனைக்கு உட்படுத்தி வாடிக்கையாளர்கள் சேவையில் மேம்பாடு காட்டினாலே கூட தனியார் வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் காலூன்றுவதை கணிசமாக குறைக்கலாம்.

வங்கி கிளைகளை குறைப்பதை தவிர்த்து கண்டிப்பாக அதிகப்படுத்தவேண்டும். அதே சமயம் வங்கிப்பணிகள் சிலவற்றை Outsourcing முறையில் செய்து வரவேற்கத்தக்கதே!

வெளிநாட்டு வங்கிகள் விஷயத்தில் அரசாங்கம் கறாரான விதிகளை வகுத்து சற்று எச்சரிக்கையோடு அவர்களை அனுமதிக்கவேண்டும்.
முன்பேரவர்த்தகத்தில் வங்கிகள் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லதே! ஏனெனில் ஆபத்தான விவகாரத்தில் மக்கள் பணத்தை அள்ளி இறைப்பது தேவையற்றது.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
20-12-2012