Thursday, December 6, 2012

அரசு கேபிள் நிறுவனத்தின் அத்துமீறல்கள்



                                                                                                                    -சாவித்திரிகண்ணன்

தகவல் தொழில்நுட்பம் என்பது இந்த 21ஆம் நூற்றாண்டில் மிக உன்னதமான இலக்குகளை எட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது.

அதிக பட்ச ஜனநாயகத்தை, ஒளிவு மறைவற்ற வெளிப்படையான நிர்வாகத்தை கட்டமைப்பதற்கு இது காலம் தந்தப் பரிசாகும்.

அப்படிப்பட்ட மக்கள் செய்தி தொடர்பு ஊடகங்களின் உச்சகட்ட வளர்ச்சியாக பாரக்கப்படும் காட்சி ஊடகங்கள் தமிழநாட்டைப் பொறுத்த அளவில் தொடர்ந்து அரசியல் அராஜக சக்திகளின் கட்டுப்பாட்டில் ஊழல்வது தான் வேறெங்கும் காணவியலாத விசித்திரமாகும்!

'செய்தி மக்கள் துறை' என்பதையே 'சேவை - ஆளுங்கட்சித்துறை'யாகப் புரிந்து கொண்டு இயங்கக்கூடிய அரசியல், ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கிறது என்ற போதிலும், அது அரசு ஊடகத்தின் மீதான கட்டுப்பாட்டை - சர்வாதிகாரத்தை - சாத்தியப்படுத்தவில்லை.
ஆனால் இங்கே சேட்டிலைட் சேனலின் முதல் பிரவேசம் என்பதே அரசியல் கட்சி ஒன்றின் கருவறையிலிருந்து பிறந்தது என்பதும், அது தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அரசியல் பலத்தையே ஆகிருதியாக்கி கொண்டது என்பதும் தமிழகத்தின் பிரத்தியேக ஊடக வரலாற்று பின்னணியாகும்.

ஆக, முதல் கோணலே முக்கோணலானது. இது தொடர்பாக நான் ஏற்கெனவே 'சன்குழுமச் சதிகளும் - தி.மு.கவின் திசைமாற்றமும்' என்ற சிறிய நூல் ஒன்றை எழுதி, அந்த காலகட்டத்தில் நிலவிய அவலச் சூழல்களை அழுத்தமாக பதிவு செய்துவிட்ட காரணத்தால் தற்போது தவிர்க்கிறேன்.

சேட்டிலைட் துறையில் கோலோச்சியதோடு கேபிள் நெட்வொர்க்க என்ற மல்டி சிஸ்டம் ஆப்பரேஷன்லிலும் சன்குழுமச் சர்வாதிகாரம் நிலவியபோது அது சமன்செய்யப்பட வேண்டும்... அனைவருக்கும் தொழில் செய்வதற்கான அடிப்படை உரிமைகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் தகவமைக்கப்படவேண்டும்... என்று குரல் கொடுத்தனர் சமூக ஆர்வலர்கள். ஆனால் இன்று துரதிர்ஷ்டவசமாக எஸ்.சி.வி என்ற எமன் வீழ்த்தப்பட்டு அந்த இடத்தில் அதைவிட பன்மடங்கு அராஜக அரக்கனாக அரசுகேபிள் உதயமாகியுள்ளதோ என எண்ணக்கூடிய நிலை உருவாகி வருகிறது.

தி.முக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் அரசு கேபிள் நெட்வொர்க் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு நேர்மையும், நிர்வாகத்திறனுமுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கர் பொறுப்பேற்றார். தஞ்சை, கோவை, நெல்லை, வேலூர் என நான்கு இடங்களில் கண்ட்ரோல் ரூமுடன் அது கட்டமைக்கப்பட்டது. ஆனால் அதைதலையெடுக்க விடாமல் பல்முனைத் தாக்குதல் தொடுத்து படுக்க வைத்தது எஸ்.சி.வி. அதற்கு பக்கதுணையாக இருந்தது தி.மு.க அராசங்கம்!.

இதைத் தொடர்ந்து, அடுத்து வந்த அ.தி.மு.க ஆட்சி, அரசு கேபிளுக்கு புத்துணர்வு கொடுக்கும் என்பது அனைத்து மக்களின் ஆதங்கமாக இருந்தது. செப்டம்பர் திங்கள் 2011ல் தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு கேபிள் நெட்வொர்கை ஆரம்பித்து வைத்தார்.
ஆனால் இதற்கு முறையான திட்டமிடல் இல்லை, தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. இதன் செயல்பாடுகள், நோக்கங்கள் வரையறுக்கப்படவில்லை. தமிழகம் முழுக்க உள்ள சுமார் ஒன்றை முக்கால் கோடி இல்லங்களுக்கு சேனல்களை கொண்டு சேர்க்கும் ஒரு மாபெரும் இயக்கத்திற்கான அலுவலகங்கள், விஞ்ஞான தொழில்நுட்ப கருவிகள்.... போன்ற எதையுமே நிறுவ முனையவில்லை.

உடுமலை ராதாகிருஷ்ணன் என்ற கட்சிகாரரை தலைவராக அறிவித்தனர். ஜெயராமன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை இயக்குநராக அறிவித்தனர். அரசின் முறையான நிர்வாகத்தின் கீழ் அரசுகேபிள் நெட்வொர்க்கை கொண்டு செலுத்த முயன்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை செயல்பட முடியாமல் முடக்கினார் உடுமலை ராதாகிருஷ்ணன். அரசு கேபிள் நிர்வாகத்தை அ.திமு.கவின் கிளை அலுவலகமாக்கினார்.

தனியார்களால் நடத்தப்பட்டு வந்த கண்ட்ரோல் ரூம்கள் கைப்படுத்தப்பட்டன அவர்களின் லட்சக்கணக்கான முதலீடு கேள்வி முறையில்லாமல் கட்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குப் போனது. நீண்டகாலமாக தொழிலில் இருந்தவர்கள் துரத்தப்பட்டனர். கேள்வி கேட்டவர்கள் மீது போலீஸ் கேஸ் பாய்ந்தது. அரசு கேபிள் வந்தபின்பு தொழில் பாதுகாப்பு கிடைக்கும் என்று எண்ணிய எம்.எஸ்.ஒக்கள், கேபிள் ஆப்ரேட்டர்கள் எண்ணத்தில் மண்விழ்ந்தது இருந்த தொழிலையும் இழந்து பலர் நடுத்தெருவுக்கு வந்தனர்.

இப்படியாக எந்த முதலீடுமின்றி தமிழகம் முழுமையும் அரசு மற்றும் ஆளும்கட்சி பலத்தால் அராஜக முறையில் 31 மாவட்டங்களில் எம்.எஸ்.ஒக்களின் கண்ட்ரோல் ரூம்கள் கபளீகரம் ஆயின. தனியார் சொத்துகள் ஆளும்கட்சியின் வசமாயின.

இதன்மூலம் சென்னை தவிர்த்த தமிழகம் முழுமையும் அரசு கேபிள் நெட் வொர்க் என்பது தனிப்பெரும் சக்தியாக, மற்ற எம்.எஸ்.ஒக்களை ஒழித்துக்கட்டி ஏகபோக ஒரே நிறுவனமாயிற்று. இப்படி தகவல் தொழில்நுட்ப ஒளிப்பரப்பை கட்டுப்படுத்தும் ஏகபோக அதிகராம் என்பது உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் கிடையாது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடந்திராத ஒன்றாகும். இதன்மூலம் தமிழக மக்கள் தங்கள் இல்லங்களில் உள்ள தொலைகாட்சி பெட்டிகளில் எந்தெந்த சேனல்களை பார்ப்பது, எதை பார்க்கக் கூடாது என்பதை அரசே நிர்ணயிக்கும் அதிகாரத்தை தானாக கையில் எடுத்துக்க கொண்டுள்ளது. இந்த அதிகாரத்தின் மூலம் சேனல் நடத்தும் உரிமையாளர்களுக்கும் குறிப்பாக அதில் பணியாற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு - நிகழ்ச்சிகளை உருவாக்கும் அறிவுசார்ந்த சிந்தனையாளர்களுக்கு இருந்த அரசை விமர்சிக்கும் உரிமை அபகரிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, காட்சி ஊடகங்கள் அரசை விமர்சித்தால் அரசு கேபிள் சர்வீஸ் மூலமாக மக்களை சென்றடையாது, தடுக்கப்பட்டுவிடும் அல்லது மக்கள் பார்க்கவியலாத ஓர் இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும். இதை எதிரக்கும் துணிச்சல் வேண்டுமானால் சேனல் உரிமையாளரும் அரசியல் செல்வாக்கு மிக்க தமிழகத்தின் தலைவராக இருந்தால் மட்டுமே சாத்தியம்! ஆக, இங்கே மீண்டும் காட்சி ஊடகங்கள் என்பது முழுக்க, முழுக்க ஆளும்கட்சி, எதிர்கட்சிகளின் அதிகார பரிவர்த்தனை மற்றும் லாவணி கச்சேரியாகி விடுகிறதேயன்றி, நடுநிலை பார்வை என்பதும் அரசியல் சார்பற்ற துணிச்சலான அணுகுமுறை என்பதும் தவிர்க்கப்படவேண்டிய நிர்பந்தமாகிவிடுகிறது. அப்படியே விமர்சிக்க வேண்டிய மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவற்றைக் கூட அடக்கி விமர்சிக்கவும், 'ஏதோ தொட்டாச்சு' என்ற அளவில் கடந்து செல்லவும் வேண்டிய சூழலே காட்சி ஊடகங்களில் காணக்கிடைக்கின்றன.

இது கருத்தியல் ரீதியான அடக்குமுறை என்றால் வியாபார ரீதியிலான அராஜகம் மற்றொரு வகைப்பட்டதாகும்.

அரசு கேபிள் விஷன் என்பது முழுக்க, முழுக்க மக்கள் பணத்தால் இயங்குவதாகும். மாதாமாதம் மக்களிடமிருந்து கேபிள் ஆபரேட்டர்கள் வசூலித்து தரும் பணத்தில் செயல்படுவதாகும். இதை வசூலிக்கும் வகையிலும், வசூலித்த பணத்தை கட்டணச் சேனல்களுக்கு வழங்கும் வகையிலும் அளப்பரிய ஊழல்கள் அரங்கேறும் இடமாக அரசு கேபிள் விஷன் திகழ்கிறது.

தமிழகத்தில் ரேஷன்கார்டுகளின் படி 1கோடி 97லட்சத்து 36ஆயிரத்து 525 குடும்பங்களில் தொலைக்காட்சிகள் உள்ளன.
இலவச டி.விக்களை அள்ளி வழங்கிய மாநிலம் என்ற வகையில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் தொலைகாட்சிகள் உள்ளன. இலவச டி.விக்களை அள்ளி வழங்கிய மாநிலம் என்ற வகையில் பொதுவாக எல்லாவீடுகளிலும் தொலைகாட்சிகள் உள்ளன. ஆனால் இப்படியுள்ள சூழலில் சென்னை தவிர்த்து சுமார் ஒன்றரைகோடி இல்லங்களின் கேபிள் கட்டணமாக தலா ரூ20 வீதம் அரசுக்கு மாதாமாதம் 30கோடி வசூலாக வேண்டும். ஆனால் அரசு கேபிளோ வாடிக்கையாளர் கணக்கை 58லட்சமாக குறைத்துக் காட்டுகிறது. அப்படியெனில் அரசுக்கு வரவேண்டிய உண்மையான வருமானத்தின் மற்றொரு பகுதி என்னவாகிறது? அவை எந்தெந்த சட்டபூர்வமற்ற அணுகுமுறைகளில் 'ஸ்வாகா' ஆகிறது என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்றால் மக்களின் சாதாரணமான எதிர்பார்ப்புகள் என்னென்னவாயிருக்க முடியும்.
நியாயமான கட்டணம், விரும்பிப் பார்க்க கூடிய சேனல்கள், தெளிவான ஒளிபரப்பு, நேர்மையான நிர்வாகம், தொழில் செய்வோருக்கான முறையான அங்கீகாரம், வெளிப்படையான நிர்வாகச் செயல்பாடுகள் போன்றவற்றோடு மக்கள் பணம் அரசு கஜனாவிற்கு வரவேண்டும் என்பவையே!

இந்த வகையில் அரசு கேபிளுக்கு முன்பு ரூ 100 முதல், 150,200வரை கட்டணம் செலுத்தி வந்த மக்கள் ரூ 70 அல்லது ரூ80 தான் கேபிள் கட்டணம் கட்டுகிறார்கள். எனவே நியாயமான கட்டணம் உத்திரவாதம் செய்யப்பட்டதாகவே நாம் கொள்ளலாம்.

ஆனால் விரும்பி பார்க்க கூடிய சேனல்கள் தருவிக்கப்படுகின்றனவா? என்பதில் தான் ஏறத்தாழ அனைத்து மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் இந்த சேனல்களை தெளிவாக ஒளிபரப்பக்கூடிய சிறந்த நவீன தரத்திலான கருவிகளைக் கொண்ட கண்ட்ரோல் ரூம்களை அரசு நிறுவாததாகும். ஏற்கெனவே தனியாரிமிருந்து அராஜகமாக பறித்த இடத்தில் கூடுதலாக ஒரு சில பொருட்களை தருவித்துக் கொண்டனர் அவ்வளவே! 'அனலாக்' என சொல்லப்படும் அரத பழசான பழைய முறையிலேயே அரசு கேபிள் கழகம் செயல்படுவதால் தான் கூடுதல் சேனல்களைக் கொடுக்க முடியாததோடு, தெளிவான ஒளிபரப்பையும் செய்ய இயலவில்லை. எழுபது சொச்சம் சேனல்களிலிருந்து அதிகபட்சம் 106 சேனல்கள் வரை அந்தந்த இடத்திற்கு தகுந்தவாறு சேனல்கள் ஒளிபரப்படும் எண்ணிக்கை வேறுபடுகிறது. இராமநாதபுரத்தில் 78 சேனல்கள் என்றால் நாகை, நாமக்கல், திருவள்ளுவர் போன்றவற்றில் 80 சொச்சம் சேனல்களும், சேலம், கரூர், தஞ்சை போன்ற இடங்களில் 90 சொச்சம் சேனல்களும், திருச்சி, மதுரை, கோவை போன்றவற்றில் முன்னதைக்காட்டிலும் சுமார் 10 சேனல்கள் அதிகமாகவும் காட்டப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய ஊர்களிலும், அந்தந்த பகுதி ஆளும்கட்சி முக்கியஸ்தர்களே கண்ட்ரோல் ரூமை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அரசாங்கம் சார்பில் பெயருக்கு ஒரு தாசில்தார் அங்கே இருந்தாலும், ஆளும்கட்சி பிரமுகர்களின் அதிகாரமே அரசு கேபிளில் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் இவர்களின் விருப்பு வெறுப்பு சாரந்ததாகவும், அந்தந்த பகுதியில் ஒளிபரப்படும் சேனல்களின் இடவரிசையும், இல்லாமல் போகும் வரிசையும் அமைகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் இந்த கட்டற்ற சுதந்திரத்தை இவர்களுக்கு யார் தந்தது?

பலகோடி ரூபாய் முதலீடு செய்து பகல் இரவு பாராமல் அலைந்து திரிந்து செய்திகளை சேகரித்து, முளையை கசக்கி பல முத்தான நிகழ்ச்சிகளை உருவாக்கி தருகின்ற சென்னையை தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் சேட்டிலைட் டி.வி நிறுவனங்கள் எந்தெந்த ஊர்களில் தாங்கள் மக்களிடமிருந்து மறைக்கப்படுகிறோம் அல்லது தெளிவாகத் தெரியாத வகைில் பின்னுக்குத் தள்ளப்படுகிறோம்.... என அறிய வரும் போது மனதில் ஏற்படும் ஆற்றாமைகள், குமுறல்கள் சொல்லக் கொதிக்கும் சோககங்களாகும். அரசு கேபிளில் ஆரம்ப காலங்களில் சன்குழுமத்தையே காட்டாமல் புறக்கணித்து இருட்டடிப்பு செய்தனர். இதற்கு மக்களிடையே பலமான எதிர்ப்புகள் உருவானதைத் தொடர்ந்து முறையான ஒப்பந்தமின்றி திருட்டுத்தனமாக வழிமுறைகளில் ஆங்காங்கேயுள்ள கேபிள் ஆபரேட்டர்கள் சன்குழுமச் சேனல்களை காண்பித்தனர்.

சன்குழுமத்தின் மீது நமக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் அரசு கேபிள் என்று வந்துவிட்டபிறகு அனைவரையும் ஒரே சமநோக்கில் தான் அரசு அணுகியிருக்கவேண்டும். அது தான் ஒரு நாகரீக அரசின் அணுகுமுறையாக இருக்கமுடியும்.

கட்டணச் சேனல்களும், கையூட்டுகளும்

சேட்டிலைட் சேனல்களில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றச் சேனல்கள் கட்டணச் சேனல்களகவும், சுமாரான வரவேற்பை பெற்றச்சேனல்கள் கட்டணமில்லாத இலவசசேனல்களாகவும் காட்டப்படுகின்றன.
கட்டணச் சேனல்களுக்கு மக்களிடமிருந்து வசூலித்த பணத்திலிருந்து அரசு கேபிள் கழகம் பணம் தருகின்றது. இந்த வகையில் சுமார் 12 சேனல்கள் மட்டுமே தமிழில் கட்டணச்சேனல்களாக அரசிடமிருந்து பணம் பெறுகின்றன. ஆனால் பல வட இந்திய மொழிச்சேனல்களுக்கும், ஆங்கிலச்சேனல்குளுக்கும் அவை அரசு சேனல்களில் காட்டப்பட்டாலும், காட்டப்படாவிட்டாலும் காட்டப்பட்டதாக கணக்கெழுதப்படுகின்றன. மக்கள் விரும்பி பாரக்கிறார்களா? இல்லையா? என்பதெல்லாம் தேவையில்லை எனக்கருதி அவற்றிற்கு அபரீதபணத்தை அள்ளி இறைத்து ஒரு அரசு கேபிள் கழகம் செயல்படுவது தான் வியப்பளிக்கிறது.

தமிழ்நாட்டில் மக்களுக்காக தமிழக மக்களின் பணத்தில் இயங்கும் தமிழக அரசின் கேபிள் கழகத்தில் தமிழ்சேனல்கள் சில காட்டப்படாமல் இருட்டடிக்கப்படுவதோடு தமிழ் சேட்டிலைட் சேனல்களை விட வட இந்திய மொழி மற்றும் ஆங்கில சேனல்களுக்கு அதிகநிதி கொட்டிக்கொடுக்கப்படுவதாகும்.

கட்டணச் சேனல்கள் என்ற வகையில் தமிழக அரசு மாதாமாதம் சுமார் 14கோடியே 50லட்சம் ரூபாய் சேட்டிலைட் சேனல்களுக்கு வழங்குகிறது. இதில் ஒட்டுமொத்த தமிழ் சேனல்களுக்குமாக தமிழக அரசு வழங்கும் தொகை வெறும் நாலரை கோடி தான்! ஆனால் மற்றமொழிச் சேனல்களுக்கு வழங்கப்படுவதோ ரூ 10கோடி! தமிழகத்தில் மற்றமொழி மற்றும் ஆங்கிலச் சேனல்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவற்றின் நிகழ்ச்சிகளுக்கு தமிழக டி.வி பார்ககும் மக்களிடையே உள்ள வரவேற்பு என்ன? என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு அலசி ஆராய்ந்தால் நியாயப்படி தமிழ்சேனல்களுக்கு மொத்த கட்டணச்சேனல் செலவினத்தில் மூன்றில் இருமடங்கும், வேற்றுமொழிச் சேனல்களுக்கு மூன்றில் பங்கும் தான் தந்திருக்க வேண்டும்.

நாம் அரசு கட்டணச்சேனல்களின் வரிசையில் உள்ள ஆங்கிலச் சேனல்களின் பெயர்களைப் பார்த்தால் அவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான பெயர்களை 90சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பாவம்,அந்த மக்கள் அரசு கேபிளுக்கு வழங்கும் பணத்தின் பெரும்பகுதி தாங்கள் இது வரை கேள்விப்பட்டிராத சேனல்களுக்குததான் இதுநாள் வரை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையே அவர்களுக்குத் தெரியாது.

எந்தெந்த சேனல்களுக்கு அரசு கேபிள் கழகம் எவ்வளவு பணத்தை தந்து கொண்டிருக்கிறது என்ற விரிவான தகவல்களைத் தருகிறேன்.

மீடியா புரோ நிறுவனம் (விஜய் டிவி, ஜீ தமிழ் 2 தமிழ்2 தமிழ் சேனல்களை தவிர ) - ரூ.4.25
Star Plus, Star Gold, Star Movies, Star World, NGC, Fox Traveller, Channel V,ABP News, Zee Tv,Zee Cinema, Cartoon Network,Zee Marathi,Zee News,CNN,Zee Cafe,Zee Studio,Zee Trendz,Zee Punjabi,Zee Bangla,Fox Crime, Nat Geo Wild, Life Ok, MGM, HBO,Pogo,Zee Business, WB, FX,Baby Tv, Nat Geo Adventure, Nat Geo Music, Zee Salaam, Zee News UP,ETC Punjabi, ETC, Zing,Zee Jagran, ABP Ananda, Star Jalsha, Zee Talkies, Zee 24 Tass, NDTV India, NDTV 24x7, NDTV Profit, NDTV Good Times, Star Parvah, ABP Majha, Zee Khana Khazana, Zee Smile, Star Utsav,Zee Kannada, Suvarna, Zee Telugu,Zee 24 Ghanthalu, Zee Classic, Zee Action, Zee Premier, 9x, Asianet, Asianet Plus, Movies OK, Fox Action Movies, Zee Bangla Cinema, ZeeQ, Nat Geo HD, Star Plus HD,Star Gold HD, Star Movies HD,Star World HD, Zee Tv HD, Zee Cinema HD,Zee Studio HD, Life OK HD 
 
சன்குழுமம் - 3கோடி (நவம்பர் 30ஆம் தேதி ஒப்பந்தம் முடிந்ததாகவும், மறு ஒப்பந்தம் விரைவில் செய்யப்படுவதாகவும் தெரிகிறது...)
MSM டிஸ்கவரி - ரூ 2.5கோடி
Animel Planet, AXN, Discovery, Max, Sony, AajTak,Animax,TLC,Headlines Today,Pix, SAB, Tez,Aath,Discovery Science, Discovery Turbo, Sony Mix, Discovery Tamil, Discovery Kids, Six
ஈ.எஸ்.பி.என் ( ESPN, STAR Sports, STAR Cricket) - ரூ 2.25கோடி
டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ( Ten Sports, Ten Action, Ten Cricket) - ரூ 90லட்சம்
ஜெயா டிவி குழுமம் - ரூ 80 லட்சம்
ராஜ் டிவி குழும் - ரூ50 லட்சம்
டைம்ஸ் குழுமம் - ரூ 20லட்சம்
இவை மக்களிடமிருந்து மறைக்கப்படும் வரையில் தான் கொள்ளையடிப்பவர்களுக்கு கொண்டாட்டம். இனி மக்களே தீர்ப்பளிக்கட்டும்.

கட்டணச் சேனல்கள் வரிசையில் ஜெயா தொலைகாட்சியின் நான்கு சேனல்களும் அரசு கேபிள் வருவதற்கு முன்பு இடம்பெறவில்லை என்பதை கவனப்படுத்த விரும்புகிறேன இது நமக்கு குறையில்லை அதே சமயம் ஜெயாடிவி குழுமத்திற்கு கட்டணச்சேனல் அந்தஸ்த்து வழங்கப்படும் போது அந்த அந்தஸத்துக்காக தவிக்கும் மற்ற சேனல்களை மதித்து ஒரு வார்த்தை பேசக்கூட அரசு கேபிள் கழகம் தயாராக இல்லை. மெகா டி.வி கட்டணச்சேனலாக அறிவித்தபிறகு எவ்வளவோ மெனக்கெட்டும் அரசு கேபிள் கழகத்தில் அலைகழிப்பும், அவமானமுமே அவர்கள் பெற்ற பரிசானது.

எனவே கட்டணச் சேனல்கள் என்ற கணக்கில் கபளீகரம் செய்யப்பட்டு வரும் பணத்தை குறித்த கேள்விகள் மக்கள் மன்றத்தில் எழுப்பப்பட்டாக வேண்டும். இதில் நியாயமான வரை முறைகளும், வழிமுறைகளும் வெளிப்படையாகப் பின்பற்றப்படவேண்டும். தமிழ் சேனல்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படும் தமிழ் சேட்டிலைட் சேனல்களின் எண்ணிக்கை 36 - கலைஞர் டிவி, இசையறுவி, கலைஞர் செய்திகள், முரசுடி.வி, சித்திரம், சிரிப்பொலி, எஸ்எஸ்.மியூசிக், பாலிமார், வசந்த்டி.வி, மக்கள் டி.வி, மூன் டி.வி, தமிழன் டி.வி, விண் டி.வி, புதியதலைமுறை, தந்தி டி.வி, சத்தியம் டி.வி, சூப்பர் டி.வி, ஆராடி.வி, லொட்டஸ் டி.வி, எஸ்.ஜே டி.வி, GTV SPV,பெப்பர்ஸ் டி.வி, ஸ்ரீசங்கரா டி.வி, இமயம் டி.வி, கேப்டன் டி.வி, கேப்டன் நியூஸ், 7S மியூசிக், கிருஷ்ணா டி.வி, தென்றல் டி.வி, ஏஞ்சல் டி.வி, நியூஸ்ப்ளஸ், ஆசிர்வாதம் டி.வி, Shopping Zone, Max Vision. இவைகள் தான்...!!

இவையணைத்துமே தமிழ் மக்களுக்கு காட்டப்படவேண்டும். ஆனால் இவற்றில் எவையெவை மறைக்கப்படுகின்றன என்பது மக்களுக்கே தெரியாது. இது போக தமிழில் வெகுசீக்கிரமாக ஐந்தாறு சேனல்கள் வரவுள்ளன. இன்னும் இரண்டாண்டுகளில் சுமார் 15 சேனல்கள் வரக்கூடும். இவையெல்லாம் மக்கள் பார்வைக்கு தெரியவேண்டும்.
இவை அனைத்தும் பாரபட்சமின்றி முக்கிய இடத்தில் தெளிவாகத் தெரியும் படி ஒளிபரப்பு செய்யப்பட்டாக வேண்டும். ஆனால் இவற்றில் சுமார் பாதி சேனல்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இப்படிச் செய்யும் அதிகாரத்தை இவர்கள் எங்கிருந்து பெற்றார்கள்...? மக்களின் கண்களில் இருந்து காட்சி ஊடகங்களை கண்கட்டுவித்தைகாரணைப்போல மறைப்பதற்கு எதற்கு மக்கள் பணத்தில் செயல்படும் அரசு கேபிள் கழகம்...? மக்கள் விரும்பி பார்க்காத வேற்றுமொழி சேனல்களை அரசுகேபிளுக்குள் தமிழ்சேட்டிலைட் சேனல்களைக் காட்டிலும் அதிகமாக திணிப்பது ஏன்?

அரசு கேபிள் கழகத்தின் முறைகேடுகள் தொடர்பான ஒரு சில 'சாம்பில்'களைத் தான் நான் இங்கு எழுதியுள்ளேன். மற்றவை குறித்த முழுமையான பதிவுகளை விரைவில் மக்கள் மன்றத்திற்கு நூல் வடிவில் கொண்டுவர உள்ளேன் அதில் உள்ளுர் சேனல்களை அனுமதிப்பதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறைகள், அரசியல் தலையீடுகள், அபரீதமான பணப்பரிவரத்தனைகள், ஒழுங்குபடுத்தப்படாத சினிமா ஒளிப்பரப்புகள்... என பலவற்றையும் விவாதப்பொருளாக்கி விடை தேடவேண்டியுள்ளது.

மொத்தத்தில் அரசு கேபிள் கழகம் முதலில் ஏகபோக உரிமம் என்ற நிலையில் இருந்து வெளியேறி, பல்முனை தொழில் போட்டியை எதிர்கொள்ளவேண்டும். காட்சிதகவல் தொடர்பு ஊடகத்தில் ஜனநாயக அணுகுமுறை வேண்டும். ஆட்சி அதிகார அரசியல் பலத்தில் கட்டுண்டு கிடக்கும் காட்சி ஊடகத்தின் கருத்துச்சுதந்திரம் மீட்டெடுக்கப்படவேண்டும். அது வரை நிச்சயம் மத்திய அரசு தமிழக அரசு கேபிளுக்கு டிஜிட்டலைஷேசன் வழங்க அங்கீகாரம் தராது என்று நம்புவோமாக!

ஏனெனில், ஒரு ஜனநாயக நாட்டில் மற்றவர்களின் தொழில்செய்யும் உரிமையை பறித்தெடுக்கும் ஏகபோக உரிமையை நிலைநாட்டியுள்ள ஒரு நிறுவனத்தை நிச்சயம் 'டிராய்' அனுமதிக்காது. இது தொடர்பாக தமிழகத்திலிருந்து டிராய் அமைப்பிற்கும். 'காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா' அமைப்பிற்கும் ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. அதன் விசாரணை வட்டத்திலிருந்து வெளியேற வேண்டுமானால் தமிழக அரசு கேபிள் கழகம் தன்னை தூய்மைபடுத்திக்கொள்ள வேண்டும். தன் செயல்பாடுகளை ஒழுங்கமைத்துக்கொள்ளவேண்டும். தமிழக மற்றும் இந்திய ஊடகங்கள் தமிழக அரசின் கேபிள் நெட்வொர்க் கார்ப்பரேஷன் தொடர்பான தங்களின் மௌனத்தை கலைக்க வேண்டும். மக்கள் மன்றத்தில் விழிப்பேற்படுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும். 

1 comment:

Tamil Latest Movie News said...

நல்ல ஒரு அலசல்.
நுட்பமான தகவல்கள் தந்துள்ளீர்கள்.
மிக்க நன்றி.