Friday, December 28, 2012

கிரானைட் முறைகேடு வழக்குகள் செல்லும் திசை என்ன?


                                                                                                                   -சாவித்திரிகண்ணன்

ஏழு மாதங்களுக்கு முன்பு எல்லோரையும் அதிர வைத்தது அந்தக் கடிதம். அது மதுரை மாவட்ட ஆட்சியராயிருந்தபோது உ.சகாயம் அவர்கள் முதலமைச்சருக்கு எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த கடிதம்!

ஐந்தாறு மாதங்கள் யாராலும் அறியப்படாதிருந்த அந்தக் கடிதம். தகவல் அறியும் உரிமைசட்டத்தால் தமிழக மக்களின் கவனத்தைப் பெற்றது.

கேட்டவர்களைக் கிறிகிறுக்க வைத்த அந்த கிரானைட் குவாரி முறைகேடுகளால் மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற மலைக்குன்றுகள் தரைமட்டமானதும், அதிலிருந்த வரலாற்றுச் சின்னங்கள், பிராமிகல்வெட்டுகள், புடைப்பு சிற்பங்கள், சமணர் படுக்கைகள் இருந்த இடம் தெரியாமல் போனதும் உலகையே உலுக்கி எடுத்தது.

இது மட்டுமின்றி இந்த கிரானைட் கொள்ளையர்களால் 60க்கும் மேற்பட்ட கண்மாய்கள், 50க்கும் மேற்பட்ட ஊருண்ணிகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், மக்கள் பயன்படுத்தும் பாதைகள்... என பலவும் சூறையாடப்பட்டிருந்தன.

இந்த தகவல்கள் ஊடகங்களில் பெரிய அளவு வெளியானதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சூல்மிஸ்ரா தலைமையில் 18 குழுக்கழை அமைத்து கள ஆய்வையும், விசாரணையையும் மேற்கொண்டது தமிழக அரசு. கிரானைட் முறைகேடுகள் மதுரையையும் கடந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் 500க்கு மேற்பட்ட குவாரிகளில் நடந்திருப்பது தெரியவந்தது.

மதுரைமாவட்டத்தின் 175குவாரிகளில் 94ல் முறைகேடு நடந்திருப்பதாக அன்சூல் மிஸ்ரா அறிக்கை தந்தார். ஆனால் இது வரை சுமார் 10 நிறுவனங்களின் கிரானைட் ஏற்றுமதி உரிமம் மட்டுமே ரத்தாகியுள்ளது.

கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்ட அதிபர்கள் அரசு அதிகாரிகள்,... என்பதாக 55பேர் கைதானார்கள். பற்பல வழக்குகள் பதிவாயின.

நமது முதல்வர் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தந்த தகவல்படி 9,783 கோடி ரூபாய் பொறுமான சொத்துகள் மீட்டெடுக்கப் பட்டுள்ளன. முடிந்த வரை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதில்... நடந்தவரை மகிழ்ச்சியே!

ஆயினும், இந்த ஏழுமாதங்கள் வரையில் ஏறுமுகமாய் காட்சியளித்த அணுகுமுறைகள் தற்போது தாழ்நிலைக்கு தள்ளப்படுவதான ஒரு அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

சுமார் 15 வழக்குகளில் மிகப்பெரும் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்ட நிலையில் பி.ஆர். பழனிச்சாமி ஜாமினில் விடுதலையாகியுள்ளார்.

இதே போல் ஓடி ஒளிந்து கொண்ட ஓலிம்பஸ் கிரானைட் நிறுவன அதிபர் துரை தயாநிதிக்கும், மற்ற 14பேருக்கும் எளிதில் ஜாமீன் கிடைத்துள்ளது.

குற்றச்சாட்டுக்கு ஆளான குவாரிகள் இன்னும் முடக்கப்படவில்லை...! 
ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றப்படவில்லை...!
பறிக்கப்பட்ட இயற்கைவளங்கள் மீட்ருவாக்கம் செய்யப்படவில்லை...! 
பெரும்பாலான அரசு அதிகாரிகள் கைதாகவில்லை....!
பற்பல வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை...! 
நடந்திருப்பது மாபெரும் அநீதி, மன்னிக்க முடியாத குற்றங்கள்...! எனவே, இவை இனி தொடரக்கூடாது. 
முற்ற முழுக்க அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டாக வேண்டும் என்றால், சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் சமரசமின்றி நடவடிக்கைகள் பாய வேண்டும்.

களைகளை கருவறுக்க வேண்டும் என்றால், அதை அரைகுறையோடு நிறுத்தி விடலாகாது!
அவை மீண்டும் பூதாகரமாக, முன்னிலும் அதிகமாக வளர்ந்துவிடும்.
இயற்கை அரண்களை பாதுகாக்க,
இழந்த மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க,
இன்னும் உறுதியான, தளராத நடவடிக்கைகள் தேவை.
பல ஆயிரம் கோடி அளவில் இதில் அந்நியஞ் செலவாணி அத்துமிறல்கள் நடந்திருப்பதைத் தொடர்ந்து மத்திய அமலாக்கப்பிரிவின் விசாரணையும் விரைந்து எடுக்கப்படவேண்டும்.


தந்தி டிவி,
EDITORIAL VOICE,
17-12-2012

No comments: