Monday, December 3, 2012

தாறுமாறாக விலை வைக்கப்படும் மருந்து மாத்திரைகள்




                                                                                                                       -சாவித்திரிகண்ணன்


மத்திய அரசின் அமைச்சரவைகூட்டம் அமைச்சர் சரத்பவார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மக்களின் உயிர்காக்கும் அத்தியாவசிய 348 மருந்து மாத்திரகளின் விலைகள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது சமூக ஆர்வலர்கள் தரப்பில் நீண்ட வருடங்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது காலதாமதாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் நிச்சயம் வரவேற்க்கப்பட வேண்டியதே! ஆனால் பொத்தாம் பொதுவாக 348 மருந்து மாத்திரைகளின் விலைகளை மட்டும் அரசு கட்டுப்படுத்தி விடும் என்பது மக்கள் சந்திக்கும் பற்பல மருத்துவ பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.

தற்போது மருத்துவ சந்தையில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மருந்து மாத்திரை வகையறாக்கள் விற்பனையாகிக்கொண்டுள்ளன. இவற்றில் 90 சதவிகிதத்திற்கு மேற்பட்டவை தேவையற்றவை.... என உலக சுகாதார நிறுவனமே அறிவித்துள்ளது.
மருத்துவ விஞ்ஞானம் நாளும், நாளும் வளர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டுள்ளது. ஆனால் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையமோ மிகவும் தேக்கநிலையில் உள்ளது.
இது நாள் வரை நமது அரசு 74 மருந்து மாத்திரைகளை மட்டுமே அத்தியாவசியமானவை என்று நிர்ணயித்திருந்தது. ஆனால் அவற்றில் பல மார்க்கெட்டில் காலாவதியாகி வெகுநாட்களானதைக் கூட கவனத்தில் கொள்ள மறுத்து வந்தது. இந்த லட்சணத்தில் தற்போது அரசு அறிவித்துள்ள 348 அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் என்னென்ன? அவை சரியான மதிப்பீடுதானா? என்பது ஒரு பெரும் விவாதமாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த அத்தியாவசிய மருந்து மாத்திரைகளைப் பொறுத்தவரை அதன் உற்பத்தி மதிப்புக்கு மேல் 100 சதவிகிதம் லாபம் வைத்து விற்றுக்கொள்ளலாம் என்பது மட்டுமே அரசின் இலக்கு. மற்ற மருந்து மாத்திரைகளெல்லாம் உற்பத்தி மதிப்புக்கும் மேலாக 500 முதல் 1200 சதவிகிதம் வரை அதிக லாபம் வைத்து விற்கப்படுவதை வழக்கம் போலவே மத்திய அரசு பொருட்படுத்தாது. 

'இது மிகவும் பொறுப்பற்ற அணுகுமுறை' என இந்திய மருத்துவ பிரதிகள் கூட்டமைப்பு விமர்சிக்கிறது. நமது நாட்டில் சர்வதேச மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கியது முதல் மருந்து மாத்திரைகளின் விலை ஏகத்துக்கும் எகிறியுள்ளன. அத்துடன் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட சில மருந்து மாத்திரைகளையும், குறிப்பாக இரண்டு மற்றும் இதற்கு மேற்பட்ட மருந்துகளின் கலவைகளில் உருவான ஏற்கத்தகாத மருந்து மாத்திரைகளையும் தற்போது அதிகமாக புழக்கத்தில் பார்க்கமுடிகிறது என்பதை மத்திய நிறுவன விவகாரத்துறை அமைச்சகமே தெரிவித்திருந்தது.

இந்த சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை சந்தையில் முதன்மைபடுத்த தார்மீக நெறிமுறைகளை தூக்கி எறிந்து, பணத்தை அள்ளி இறைத்து முக்கிய சில மருத்துவர்களையும் வளைத்துப் போட்டுக் கொள்கின்றன,

சென்ற ஆண்டு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு வரப்பட்டபோது, "முக்கியமான மருந்து மாத்திரைகளின் விலையை அரசு விரைந்து கட்டுப்படுத்தவேண்டும். இல்லையேல் இதில் நீதிமன்றமே நேரடி கவனம் செலுத்த வேண்டியதாகிவிடும்" என எச்சரித்தது நீதிமன்றம். இதையடுத்துத் தான் மத்திய அரசு மூன்று பேர் கமிட்டி அமைத்து இவ்விவகாரத்தில் மும்முரம் காட்டியது.

120கோடி மக்களை கொண்ட ஒரு பெரிய நாட்டில் மனிதநேயமற்று கொள்ளை லாபத்தையே குறிப்கோளாகக்கொண்ட சில மருந்து மாத்திரை தயாரிப்பு நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய் லாபத்தை சம்பாதித்து பதிலுக்கு மக்களின் உயிரோடும், பொருளாதாரத்தோடும் விளையாடுவதை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.
குறிப்பாக அத்தியாவசியமான - மக்களின் உயிர்காக்கும் - மருந்து மாத்திரைகளை மத்திய அரசின் பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்களே உற்பத்தி செய்து நியாயமான விலைக்குத் தரவேண்டும்.

அத்துடன் மருந்து மாத்திரைகளின் மீதான அதீத எக்சைஸ் வரிகளை ஒரளவாவது குறைக்கவேண்டும்.
12வது ஐந்தாண்டு திட்டத்தில் உருவாக்கப்பட்ட அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் மக்களுக்கு நியாயவிலையில் கிடைக்கவேண்டும் என்ற கொள்கை திட்டம் அமல்படுத்தப்படவேண்டும்.

தந்தி டிவி,
EDITORIAL VOICE,
23-11-2012




No comments: