Thursday, November 1, 2012

இணையதளக்குற்றங்கள்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

"இணையதளத்தை தவறாகப் பயன்படுத்தினால் உடனே கைது. மூன்றாண்டுகள் ஜெயில்" என அறிவித்துள்ளார் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இணையதளசீண்டல் தொடர்பான பிரபல பின்ணணி பாடகி சின்மயியின் புகாரும் சம்மந்தப்பட்டவர்களின் கைதும் ஒரு மிகப்பெரும் விவாதப் பொருளாகி உள்ள தருணத்தில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக அடிமைச் சமூகமாக வாழ்ந்த மனிதகுல நாகரீகத்தில் தன் நிகரற்ற ஊடக வளர்ச்சியின் உச்சமே இணையம்! விஞ்ஞானம் மனிதகுலத்திற்கு வழங்கியுள்ள ஈடு இணையற்ற சுதந்திரம்.

பிரபல ஊடகங்கள் வாயிலாக வெளிப்படும் கருத்து சுதந்திரத்தை விடவும், இணையதளங்களில் வெளிப்படும் கருத்து சுதந்திரம் வித்தியாசமானது. இணையதளங்களில் அரசியல் சமூக அவலங்கள் குறித்த ஒவ்வொரு தனிமனிதனின் ஆதங்கமும், ஆற்றாமையும் பொதுவெளியில் அரங்கேற சிறந்த வாய்ப்பாகிறது.

மாபெரும் மக்கள் பங்கேற்பும், மகத்தான கருத்து பரிமாற்றங்களும் இணையதளத்தால் இன்று சாத்தியமாகி உள்ளது.

எந்தப்பெரிய அரசாங்கமானாலும் சரி, எவ்வளவு பிரபல தனிநபரானாலும் சரி, இனி எதையும் மக்களிடமிருந்து மறைக்க முடியாது, மக்கள் விமர்சனத்திற்கு தப்ப முடியாது என்பதை இன்று இணையவெளி நிருபித்துள்ளது.

ஆனால் கட்டற்ற சுதந்திரம் சாத்தியமாகும் இடத்தில் தான் சுயகட்டுப்பாடு அதிகம் தேவைப்படுகிறது.

குற்றவாளிகளைக் கூட கண்ணியக் குறைவாக நடத்தக்கூடாது என்பது தான் நாகரிகமான ஒரு சமுதாயத்திற்கான இலக்கணமாகும்.

ஒருவருக்கு சரி என்று தோன்றும் கருத்து வேறு ஒருவருக்கு படு அபத்தமாகவும் தவறாகவும் தோன்றும்.
வேறுபட்டு விவாதிப்பது விவேகத்தின் அடையாளம்! மாறுபட்ட கருத்து ஆயினும் அவதூறு செய்வது அறிவீனம்!

இணைய தள சில்மிஷத்தால் மதுரையில் ஒரு பெண்ணும், செஞ்சியில் ஒரு பெண்ணும் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையின் தகவல்! இதில் காவல்துறையின் கவனத்திற்கு வராமல் போன தற்கொலைகள் எவ்வளவோ...? மனம் ஒடிந்து மனதிற்குள் மரித்துப் போனவர்கள் எவ்வளவோ...?

பரந்து விரிந்த வெளி என்பதால் தங்கள் இஷ்டத்திற்கு வாளைச் சுழற்றும் வீராதிவீரர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்.
இனி பாதிக்கப்படுபவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்க முடியும். தகவல் தொழில்நுட்ப சட்டம், வன்கொடுமைச் சட்டம் சம்மந்தப்பட்டவர்கள் மீது பாயும் என்பது ஒரு ஆறுதலே!

நமது மாநில காவல்துறையில் இதற்கான சைபர் கிரைம் பிரிவிற்கு இரண்டே உதவி கமிஷனர்கள்! 25தே போலீசார்கள் என்பது மிகக் குறைவாகும்! இதை அதிகப்படுத்தி பலப்படுத்தவேண்டும்!

அதே சமயம் சகிப்புத் தன்மையற்றவர்கள் கச்சை கட்டி சர்ச்சையில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

உலைபொங்கினால் மூடமுடியாது! ஊர்வாயையும் அடைக்க முடியாது. வெள்ளம் பெருக்கெடுத்தால் அணை தாங்காது. இதை பிரபலங்கள் உணர வேண்டும். சட்டங்கள், தண்டனைகள் குற்றங்களை ஒரளவே குறைக்க உதவும்.
அதே சமயம் சட்டங்கள், தண்டனைகளைக் காட்டி நியாயமான கருத்து சுதந்திரத்தை பறித்து விடவும் கூடாது.

விக்கி லீக்ஸின் வீரநாயகன் அசாஞ்சே வெளிப்படுத்திய உண்மைகள் உலகையே உலுக்கி எடுத்தன. ஆனால் அவர் இன்று உலகப் பேரரசுகளால் வேட்டையாடும் நகராகியுள்ளதை பார்க்க வேண்டும்! தவிர்க்க முடியாதவற்றை அலட்சியப்படுத்துவதே அறிவுடமை! அளவுக்கு மீறி ஆடுபவர்களை அடக்குவது அரசின் கடமை!
ஆள்பவர்களே ஆனாலும் தவறுசெய்தால் தட்டிகேட்பது ஒவ்வொரு குடிமகனும் பெற்றுள்ள உரிமை!
 

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
24-10-2012

No comments: