Thursday, October 18, 2012

காந்திய காட்டிய வழியில் செல்வோம்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
சமானத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் சமரசமற்ற அஹிம்சைப் போராட்டத்தை நடத்திய மகாத்மாகாந்தியின் 143வது பிறந்த தினம் இன்றைய அரசியல் சமூக சூழல்களுக்கிடையே மிகவும் முக்கியத்துவமானாதாகிறது.
 
காந்தி மறைந்து 64 ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட தற்போது உலகில் அதிக அளவில் நினைவு கூறப்படும் தலைவராக அவர் திகழ்கிறார். காரணம் தனிமனித ஒழுக்கம், பொதுவாழ்க்கை, சமுதாயமுன்னேற்றம், அஹிம்சை... என பலவற்றிற்க்கும் இன்றைய தினம் உலகத்தலைவர்கள் காந்தியின் வாழ்க்கையிலிருந்து வெளிச்சம் பெற்றுவருகின்றனர்.
 
அதனால் தான் வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபையின் கொடி மாகத்மா காந்தியின் மரணத்திற்காக அரைக்கம்பத்தில் பறந்தது. அக்டோபர்-2- காந்தி பிறந்த தினம் ஐ.நாசபையால் உலக அஹிம்சை தினமாக அறிவிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
 
காந்தி, சென்ற நூற்றாண்டில் மட்டுமல்ல, இந்த நூற்றணாடிலுமே கூட உலகில் அதிக தாக்கத்தை உருவாக்கியராக மறைந்தும், மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆப்பிரிக்காவின் கென்னத்கௌண்டா, தென்ஆப்பிரிக்காவின் நெல்சன்மண்டேலா, அமெரிக்காவின் மார்டின்லூதர்கிங், மியான்மரின் ஆங்சாங்.சூயி, திபெதித்திய மக்களின் தலைவர் தலாய்லாமா... போன்ற எண்ணற்ற உலகத் தலைவர்களுக்கு காந்தி ஆதர்ஷபுருஷராக விளங்குகிறார் என்பது மாத்திரமல்ல, காந்தியை முழுமையாக பின்பற்ற முடியாவிட்டாலும், அவ்வப்போது பூமியில் பளிச்சிட்டுச் செல்லும் மின்னல்கீற்றைப் போல - இக்கட்டான பிரச்சனைகளில் இப்போதும் உலகத்தின் அதி சக்தி வாய்ந்த ஆட்சியாளர்களான அமெரிக்க அதிபர் ஓபாமா, ரஷ்ய பிரதமர் புட்டின் வரை காந்தியைத் தான் நாடுகின்றனர்.
 
இந்தச் சூழலில் அவர் பிறந்த தேசமான இந்தியாவிற்கு முன்னெப்போதையும் விட காந்தியின் வழிகாட்டுதல் தற்போது மிகவும் அவசியமாகிறது. இந்தியாவை இன்றைக்கும் உலகம் 'காந்திதேசம்' என்றே அடையாளம் காண்கிறது. ஐநூறுக்கு மேற்பட்ட சமஸ்தானங்கள், 30தேசிய இனங்கள், நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள், கலாச்சாரங்கள், மதவழிபாடுகள் கொண்ட சிதறிக்கிடந்த நிலப்பகுதியை 'இந்தியா' தேச அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுத்திய சக்தியாக காந்தி திகழ்ந்தார். ஆனால் அவர் உருவாக்கி தந்த தேசத்தை இன்னும் எத்தனைகாலம் பாதுகாப்போம் என்பது தற்போது கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
  • மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனைகள்....,
  •  வெளிநாட்டு நிறுவனங்கள் நமது இயற்கை வளங்களை சுரண்ட அனுமதித்ததில் எழுந்துள்ள மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை...,
  • சிறுபான்மையின் மக்கள் பிரச்சினை..., மதத்தீவிரவாத பிரச்சினை..., இந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஊழல் முறைகேடுகள்...,
  • ஏழை - பணக்காரர் இடையிலே உருவாகி விரிந்துசெல்லும் அதீத இடைவெளி..., வறுமை, வேலையின்மை...,
  •  தரமான கல்வி, மருத்துவம் போன்றவை ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிக் கொண்டிருப்பது..,
  • பொது வாழ்க்கையிலிருப்பவர்களின் சரிந்து வரும் மதிப்பீடு..,
போன்ற பற்பல பிரச்சனைகளுக்குமான தீர்வுகளை நாம் காந்தியிடம் தான் தேடிக் கண்டடைய வேண்டியவர்களாயிருக்கிறோம். அவர் சுதந்திரம், மட்டும் வாங்கி கொடுக்க போராடவில்லை...!
 
மதநல்லிணக்கமும், தாழ்த்தபட்டோர் முன்னேற்றம், கதர்கிராமத்தொழில்களின் மறுமலர்ச்சி, பொதுவாழ்க்கை அறம், தாய்மொழிக் கல்வி, பொதுசுகாதாரம் அனைத்தும் மேலாக ஆன்மீக விடுதலை... என்ற அனைத்தின் ஒருங்கிணைந்த அம்சமாகத் திகழ்ந்தார்.
 
அவரது பிறந்த நாளில் மட்டுமே நாம் இவற்றை நநினைவுகூர்வது என்பது நம்மை நாமே ஏமாற்றும் செயலாகிவிடும்.
 
நமது ஒவ்வொரு நடவடிக்கையிலும், எண்ணங்களிலும், பேச்சிலும், செயலிலும் காந்தி வெளிப்படவேண்டும். அப்போது தான் இன்றுள்ள இருள் சூழ்ந்து பிரச்சினைகளிலிந்து நாம் அகவிடுதலை அடையமுடியும்!
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
Oct

No comments: