Saturday, October 13, 2012

நஷ்டத்திலிருந்து மீளுமா மின்வாரியம்?

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்
 
 
தமிழக மின்வாரியத்தின் வருவாய் இழப்பை ஈடுகட்ட மீட்சி நிதியாக 1294 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது மட்டுமின்றி மின் வாரியத்தின் கடன்களில் 50சதவிகிதத்தை ஏற்று ரூ 9,529 கோடி வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கும் கூடுதலாக மத்திய அரசின் மின்துறை நிறுவனங்களிடமிருந்து தமிழக மின்வாரியத்திற்கு ரூ 5000 கடன் பெற்றுத்தரவும் தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
 
இவையாவும் வரவேற்க தகுந்த அறிவிப்புகள்!
நிதிபற்றக்குறையால் மூச்சுதிணறிக்கொண்டிருந்த மின்வாரியம் ஒரளவு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இந்த நிதி நிச்சயம் உதவும்!
ஆம் ஓரளவே!
நமது தமிழக மின்வாரியத்தின் தற்போதைய நஷ்டம் 55,000கோடி!
இந்த அரசு பதவி ஏற்றபோது இருந்த நஷ்டம் 38,000கோடி!
சுமார் 15மாதங்களில் மின்வாரியம் ரூ 17,000 கோடி கூடுதல் நஷ்டம் அடைந்துள்ளது.
 
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட சுமார் 100சதவிகித மின்கட்டண உய்வு அறிமுகப்படுத்தப் பட்டது.
ஆனாலும் நஷ்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இந்த நஷ்டத்திற்கு பற்பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான காரணம். தனியார் மின்நிறுவனங்களிடமிருந்து அரசு அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வதாகும்.
 
தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கான விலையை காட்டிலும் சுமார் 100முதல் 150 சதவிகிதம் அதிக பணம் கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு மின்சாரத்தை கொள்முதல் செய்கிறது. அப்படி கொள்முதல் செய்த மின்சாரத்தின் ஒரு பகுதியை இலவசமாகவும், மற்றொரு பகுதியை குறைவான விலைக்கும் நுகர்வோருக்கு தந்து கொண்டிருக்கிறது.
 
எப்போது தனியார்களிடமிருந்து மின்சாரத்தை அரசு கொள்முதல் செய்யத் தொடங்கியதோ அப்போது முதல் அரசுக்கு நஷ்டகணக்கு ஆரம்பித்து, அது படிப்டியாக வளர்ந்து தற்போது 55,000கோடி என்ற இலக்கை எட்டிவிட்டது!
 
கூடன்குளம் அணுமின் உற்பத்தி நிலையங்களுக்கு இதுவரை செலவழிக்கப்பட்ட தொகையே குட 14,000கோடி தான்!
ஆனால் தனியார் மின்உற்பத்தி நிறுவனங்களால் அரசு இழந்துள்ள பணம் அதை விட பல மடங்கு!!
இதற்கு காரணம் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் மக்களின் வளர்ந்து வரும் தேவைக்கேற்ப மின் உற்பத்தி திட்டங்கள் துவக்கப்படாதது தான்! அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் 85 லட்சம் புதிய இணைப்புகள் தரப்பட்டுள்ளன.
 
புதிய நுகர்வோர்கள் பெரிய நிறுவனங்கள், சிறிய நடுத்தர நிறுவனங்கள், குடும்பங்கள் என பலதலரப்பட்ட தளத்திலும் பெருகியுள்ளனர். மக்களிடையே மின் பயன்பாட்டு சாதனங்கள் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன. ஆனால் இந்த பத்தாண்டுகளில் தமிழக அரசால் 100மெகாவாட் மட்டுமே அதிகமாக உற்பத்தி செய்யமுடிந்துள்ளது.
 
தற்போது தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பதினோயிரத்து சொச்சம் மெகாவாட். ஆனால் உற்பத்தி செய்யப்படுவதோ எட்டாயிரத்து சொச்சம் மெகாவாட்! இதனால் தான் பல மாவட்டங்களில் 10மணிநேர மின்வெட்டு! நமது தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் தங்கள் உற்பத்தி திறனில் தற்போது 70சதவிகிதத்தை மட்டுமே எட்டியுள்ளன. மின்சாதன பற்றாக்குறை ஆட்கள் பற்றாக்குறை, அலட்சியபோக்குகள் போன்றவையே நாம் 100% மின் உற்பத்தி திறனை அடைய முடியாமல் போனதாகும்!
 
இது களையப்படவேண்டியதோடு மின் விநியோகத்தில் மின் இழப்பும், மின் திருட்டும் அறவே தவிர்க்கப்படவேண்டும். மின்வாரியத்தில் நிலவும் ஊழல்கள் அடியோடு களையப்படவேண்டும். இன்று உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் காற்று, தண்ணீர், சூரிய ஒளியின் மூலமான மின்உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதற்கான செலவும் ஒப்பீட்டளவில் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். முறையான திட்டமிடலும், செயல்திறனுமே அவசியமாகிறது.
 
நாளுக்கு நாள் மின்வாரியத்தின் நஷ்டகணக்கு ஏறியவண்ணமுள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைப்பது தான் முக்கியம். அதற்கு அரசுதுறை சார்விலான மின் உற்பத்தி திட்டங்கள் முழுவேகம் பெற்று நடைமுறைக்கு வரவேண்டும். வருங்கால தேவைகளை கவனத்தில் கொண்டு மின் உற்பத்தி திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டியது தமிழக அரசின் தவிர்க்க இயலாத வரலாற்றுக் கடமையாகும்!
  NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
19-9-2012

No comments: