Tuesday, October 30, 2012

யார் அறங்காவலர்களாவது?


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

கோயில் அறங்காவலர்களாக கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் இருப்பதா? கடவுள் நம்பிக்கையற்ற 'எத்திஸ்டுகள்' இருப்பதா?

என்ற விவாதம் சுமார் அரை நூற்றாண்டுகளாக இந்தியாவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கேரள அரசு இந்து சமயத்திலும், சமயசடங்குகளிலும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே கோயில்களை நிர்வகிக்கும் தேவசம் போர்டுகளில் பொறுப்புக்கு வரவேண்டும் என்று அவசர சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசின் இந்த முடிவை கம்யூனிஸ்டு கட்சி அங்கே கடுமையாக எதிர்த்துள்ளது.

"கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் பொறுப்புக்கு வந்தால் கடவுளுக்கு பயந்து கோவில் சொத்தை கையாடல் செய்யமாட்டார்கள். கோயிலில் சடங்குகள் நடக்கவும், சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவும் ஒத்துழைப்பார்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடம் நாம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்...?" இதுவே பெரும்பாலான மக்களின் அபிப்ராயம்!

இது முற்றிலும் புறக்கணிக்கப்பட முடியாத அபிப்பிராயம் தான்! ஆனால் இதில் ஒரளவு உண்மையே உள்ளது. அதனால் உண்மையின் முழ பரிமாணத்தை புரிந்துகொள்ள கடந்தகால, நிகழ்கால யதார்த்தங்களை கவனத்தில் கொண்டு சீர்தூக்கி பார்ககவேண்டும்.

நம் முன்னோர்களில் பலர் கோயிலுக்காக தம் சொத்துக்களை அப்படியே எழுதிவைத்தனர். சைவ, வைணவ மடங்களுக்கு சொத்துகளை கொடுத்தனர். அந்த காலத்தில் அரசர்களும், அந்தணர்களும், பெரும் நிலப்பரப்புகளும் கோயிலை நிர்வகித்தனர்.

இவர்கள் அனைவருமே ஆத்திகர்கள் தான்! ஆனால் கோயில் சொத்துகளை நிர்வகிப்பதிலும், சமயச் சடங்குகளை நடத்துவதிலும் இவர்களிடையே ஏற்பட்ட மோதல்களும், குற்றச்சாட்டுகளும் அந்த காலத்திலேயே ஆலயங்கள் எப்படியெப்படியெல்லாம் மனிதர்களின் சுயநலத்திற்கும், ஆதிக்க மனோபாவத்திற்கும் பயன்பட்டு சீரழிந்தன என்றபதற்கு உதாரணங்களாகும்!

பிரிட்டிஸ் அரசும், நீதிமன்றங்களும், சுதந்திரத்திற்கு பிறகான நேருவின் அரசும் இந்துசமய அறநிலையத்துறையை அரசாங்கத்தின் கீழ்கொண்டு வந்த பிறகு தான் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களும், சொத்துகளும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டன. காப்பாற்றப்பட்டன, ஆனால் இவை முழுமை பெறவில்லை என்பது மாத்திரமல்ல, இவை மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றன என்பதும் யதார்த்தம் தான்!

அதனால் தான் நமது தமிழக அரசு கோயில்களுக்கு குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியலை தற்போது அந்தந்த கோயில்களின் வாசல்களிலேயே வைத்துள்ளது. இந்தப் பட்டியல் உள்ள 99 சதவிகிதத்தினர் இறை நம்பிக்கையுள்ளவர்கள் தான்!

'சிவன் சொத்து குலநாசம்' என்று நம் சமூகத்தில் பல்லாண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்தாலுமே கூட, தமிழகம் முழுமையிலும் நமது அறநிலைத்துறை மேற்கொண்ட ஒர் ஆய்வில் பெரும்பாலான கோயில் நிலங்களை அவற்றின் அர்ச்சகர்களே தங்கள் பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்ட அவலங்களை அம்பலப்பட்டுள்ளது.


சிதம்பரம் நடராஜர் கோயில் மிகச்சமீபத்தில் தான் நமது தமிழக அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்பு அக்கோயிலின் உண்டியல் பணம் ஆண்டுக்கு ரூ 37,000 என்பதாகத் தான் கணக்கு காட்டப்பட்டது. ஆனால் கோயில் அறநிலைத்துறைக்கு வந்ததிலிருந்து மாதம் ஒன்றிற்கே ஒரு லட்சத்திற்கும் மேல் உண்டியல்பணம் கிடைப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே கோயில் பொறுப்புகளை நிர்வகிக்க அறநெறியில் பற்றுள்ள நேர்மையானவர்களும், தெளிவான - கறாரான சட்டதிட்டங்களுமே தேவைப்படுகின்றது என்பதே நடைமுறை அனுபவங்கள் நமக்கு உணர்த்தும் பாடம். அதே சமயம் இறை நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேசுபவர்கள் அறங்காவலர்களாக வருவது ஏற்புடையதல்ல பிரச்சினை கடவுள் நம்பிக்கை சம்மந்தமான தல்ல. கண்ணியம் சம்மந்தமானது.


NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
25-10-2012

No comments: