Thursday, October 25, 2012

பொது ஒழுங்கு, சுகாதாரம் போதாத பாரதம்

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அரசுக்கு முடுக்கிவிட்டுள்ளது. இதில் பேசிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ்

"கோயில்களை விட கழிப்பறைகள் முக்கியமானவை. நமது நாட்டில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லாததது வருத்தம் அளிக்கிறது. கோயில்களை விட கழிப்பறைகள் தான் மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது...." என்றார். எந்த பேச்சுக்கு இந்துமத அமைப்புகள் சில கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கழிப்பறைகளின் அவசியத்தை அழுத்தமாக வலியுறுத்தவே அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் இவ்விதம் பேசியிருக்கிறார். இந்தப் பேச்சில் கோயில்களை குறித்த துவேஷ உணர்வோ, அவை கூடாது என்றோ அவர் கூறவில்லை. ஆனால் இந்த சர்ச்சைகளைக் கடந்து மிக அக்கறையோடு அணுகவேண்டிய பிரச்சினை இது.

இந்தியாவில் கழிப்பிட வசதியில்லா பிரச்சினை குறித்து உலக சுகாதார நிறுவனமும் யூனிசெப்பும் அடிக்கடி கூறியுள்ளன; "இந்தியாவில் சுமார் 60 சதவிகித மக்கள் கழிப்பிட வசதியின்றி வாழ்கின்றனர். இதில் 95 சதவிகிதத்தினர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். வெகுசிலர் பொதுகழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் சுகாதாரகேடுகள் தொற்று நோய்கள், அதற்கான சிகிச்சைகள், மனித சக்தி இழப்பு, உற்பத்தி குறைவு என்ற வகையில் ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் கோடியை இந்தியா இழக்கிறது." என்று யூனிசெப் கூறியுள்ளது.

உண்மையில், கழிப்பறை வசதியின்மையில் உலகிலேயே நாம் தான் முதலிடத்தில் உள்ளோம். மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஆப்ரிக்க நாடுகள் கூட இவ்விசயத்தில் நம்மை விட ஒரு படி முன்னேறி தான் உள்ளனர்.
ஆன்மீகத்தில், இலக்கியத்தில், தொன்மையான கலாச்சாரத்தில் இன்னும் பிறவற்றில் நாம் உலகத்திற்கே முன்மாதியாக விளங்கினாலும் கூட, சுத்தம், சுகாதாரம், பொது ஒழுங்கு ஆகியவற்றில் காலங்காலமாக கடைநிலையில் தான் உள்ளோம்.

நமது தேசதந்தை மகாத்மாகாந்தி இந்தியாவில் விடுதலை போராட்டத்திற்கு தன்னை ஆயுத்தபடுத்திக்கொள்வதற்கு முன் கழிவறை சுத்தம், கழிப்பிடப் பயன்பாடு குறித்தே அதிக அக்கறை எடுத்து களப்பணி ஆற்றினார். அவரது 50ஆண்டுகளுக்கு மேற்பட்ட பொதுவாழ்வில் அவர் கிட்டதட்ட நாள் தவறாமல் பேசியும், எழுதியும், இடைவிடாமல் களத்தில் இறங்கியும் செயல்பட்டு வந்த ஒரே விஷயம் இது தான்!-

ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை உபாதைகளிலிருந்து நிம்மதியாக விடுபடும் அடிப்படை வசதிகள் உறுதிபடுத்தப்படவேண்டும். இது நடந்தேற வசதியில்லாத மனிதனிடத்தில் - ஒரு சமூகத்தில் - மற்ற எந்த அறிவியல் வளர்ச்சி உயர்ந்தோங்கினாலும் கூட பயனில்லை .

சமீபத்தில் நமது உச்சநீதிமன்றம், 'நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கழிவறை வசதிகள் கட்டாயம் 6 மாதத்திற்குள் நிறைவேற்றவேண்டும்' என கட்டளையிட்டது பள்ளிகூடத்தில் கழிவறை வசதிஇல்லாததால் பள்ளிப்படிப்பை இடையிலான நிறுத்திய பெண்குழந்தைகள் ஏராளம்!

கழிவறை சுகாதாரசீர்கேட்டால், திறந்த வெளி கழிப்பிட அவலத்தால் தொற்றுநோய் உருவாகி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவற்றால் உயிரிழக்கும் குழந்தைகள் கணக்கில் அடங்காது...!

பொதுச்சந்தை, கடைவீதிகள், பேருந்து நிலையங்கள்... போன்ற மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பொது கழிப்பிடவசதிகள் மிகமிக குறைவு, அரிது! அப்படியே இருந்தாலும் அவை முறையாக பராமரிக்கப் படுவது அரிதினும் அரிது. இதனால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது.

சுற்றுலாவை ஊக்குவிக்க ஜப்பான் அரசு ஆங்காங்கே பிரம்மாண்டமான செலவில் பொதுக்கழிப்பிடங்களைக் கட்டுகிறது. அது போல் நமது தமிழக முதல்வர் சமீபத்தில் தமிழகத்தின் பிரபல கோயில்களுக்கு வரும் பக்தர்களின் தேவைகான கழிவறைகளை கட்ட சுமார் 5கோடி நிதி ஒதுக்கியுள்ளார். நமது இந்துமத அமைப்புகள் தாங்களுமே கூட இது போன்ற பொதுக்கழிப்பறைகளை, குளியலறைகளை ஒவ்வொரு பெரிய கோவில் அருகிலும் கட்டி பக்தர்களுக்கு உதவினால் அது பகவானுக்கே செய்யும் புண்ணியமாகும்!

நடைபாதைகளில், புதிய குடியிருப்பு பகுதிகளில், நெருக்கமாக மக்கள் வசிக்கும் பகுதித் தெருக்கோடியில்... என எங்கெங்கும் கோவில்களை கட்டுவதில் நாம் காட்டும் ஈடுபாட்டை பொதுக் கழிவறைகளை கட்டுவதிலும், அதை பராமரிப்பதிலும் காட்டுவோமாயின் - அவை இந்த நாட்டில் இந்த வசதிகளற்றவர்களுக்கும், சாலையில் பயணிப்போருக்கும் பேருதவியாக அமையும்! நமது இந்து சாஸ்த்திரங்களிலேயே கழிவறை கட்டுவது ஒரு தர்மாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே பொதுசுகாதாரம், பொது இடங்களில் கழிப்படவசதிகள் குறித்த விரிவான விவாதங்களும், ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் காலத்தின் கட்டாயமாகிறது. இதில் வெட்கமில்லாமல் - அடிப்படை மனித உரிமை என்ற புரிதலோடு அர்ப்பணிப்போடு - அனைவரும் ஈடுபடவேண்டும்!



NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
08-10-2012

No comments: