Saturday, October 27, 2012

பாகிஸ்தானின் தீவிரவாத அச்சுறுத்தல்

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

'தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் அரசு துணைபுரிகிறது' என இந்திய உளவுத்துறை தகவல் தந்துள்ளதாக நமது உள்துறை அமைச்சர் சுஷில்குமார்ஷிண்டே கூறியுள்ளார். 'திருவிழா நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையை காட்ட முயற்சிப்பார்கள். ஆகவே நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" என மக்களையும் உஷார் படுத்தியுள்ளார் நமது உள்துறை அமைச்சர்.

'பாகிஸ்தானோடு நல்லுறவுகளைப் பலப்படுத்தவேண்டும்' என்று இந்தியா தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அதற்கு ஒத்துழைப்பதில்லை. இந்தியாவிற்குள் ஊடுவருவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அனைவருமே ஒரு வகையில் ஐ.எஸ்.ஐயில் பயிற்சி பெற்றவர்களாவோ அல்லது வேறுவகையில் ஐ.எஸ்.ஐயின் ஆசி பெற்றவர்களாகவோ தான் இருக்கின்றனர்.

2008 நவம்பரில் நடந்த தாக்குதல் தீவிரவாதிகள் மீது இன்று வரை பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்துவருகிறது.
தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கிறது என்று இந்தியா மட்டுமல்ல அமெரிக்காவும் கூடக் கூறிவருகிறது. அதற்கான ஆதாரங்களையும் அறிவித்துள்ளது.

இதன் பிறகு புனேயில் நடந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐயின் பங்கு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.

சமீபத்தில் தமிழநாட்டின் திருச்சியில் கைதான தமீம் அன்சாரியிடமிருந்து இந்திய கடற்படை, ராணுவம்,துறைமுகம் தொடர்பான சிடிக்கள் கைப்பற்றப்பட்டதும், அவர் ஐ.எஸ்.ஐ யுடன் தொடர்பில் இருந்தும் தெரியவந்துள்ளது.
இப்படியாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ நமக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறதென்றால் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் மீதான வெறுப்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.

காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் லம்பார்டர் கிராமத்தில் அதிரடியாக ஒரு தாக்குதலை சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நிகழ்த்தியுள்ளனர். இதில் அப்பாவி இந்திய சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் பலியாகியுள்ளனர். நமது நாட்டு எல்லையில் இந்திய ராணுவம் அமைக்கவுள்ள சோதனைச் சாவடிகள் எதிர்ப்பு தெரிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் அரசாலேயே கட்டுபடுத்தமுடியாத அமைப்புகளாக அதன் உளவுத்துறையும், ராணுவமும் செயல்படுகின்றனவா? என்பதற்கு பாகிஸ்தான் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளது.

பர்வேஷ் முஷாரப் பாகிஸ்தானின் அதிபராக இருந்த காலகட்டத்தில் ராணுவத்தையும், உளவுத்துறையையும் தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அந்த காலகட்டத்தில் தான் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான நட்புறவு ஒரளவு பலப்பட்டது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் இருந்த சர்க்கிரிக் பகுதி தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பஸ், ரயில் போக்குவரத்து ஆரம்பித்தது. இது வர்த்தகம், சுற்றுலா, நதிநீர் ஆதாரப்பயன்பாடு ஆகியவற்றில் மேன்மேலும் வளர்த்தெடுக்கப்படும் என நாம் நம்பிக்கொண்டிருந்த நிலையில் தான் பாகிஸ்தான் தீவிரவாத ஊடுவல்களை ஊக்கப்படுத்தி வருவதன் மூலம் பரஸ்பர உறவை ஊனப்படுத்திவிட்டது.

"பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ உதவக்கூடாது என இந்தியா பல முறை எச்சரித்துள்ளது. இதை அலட்சியப்படுத்திய பாகிஸ்தான் அரசும் கூட இப்போது தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. பாகிஸ்தான் அரசின் வசம் உள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளால் அபகரிக்கப்படும் அபாயம் இருப்பதை அந்த அரசு மட்டுமல்ல அகில உலகமுமே இன்று அச்சத்தோடு அவதானிக்கிறது.

இந்தியாவின் உத்திரபிரதேச மாநில அளவுக்கான மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ள - இந்தியாவின் ஒரு அங்கமாகத் திகழ்ந்த - பாகிஸ்தான் இன்று தான் மூட்டிய பகைமைத் தீயில் தானே வெந்து நொந்து கொண்டுள்ளது. இந்திய அரசு மற்றும் மக்களின் நல்லுறவும், அண்டைநாடுகளுடனானா அதன் உண்மையான உறவுகளும் மட்டுமே அந்நாட்டை தீவிரவாதித்தில் இருந்து மீட்டெடுக்க உதவும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
22-10-2012

No comments: