Friday, October 26, 2012

பல்லுயிர் பாதுகாப்பு

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்
'பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு' எனும் 'Biodiversity Conservation' தொடர்பான விவாதங்கள், விழிப்புணர்வு கருத்தரங்குகள் தற்போது உலகம் முழுமையிலும் பரவலாக நடைபெற்றுவருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கும் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் இதன் முக்கியத்துவம் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. நமது பிரதமர் இதற்காக இந்தியாவில் 264 கோடி ருபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த உலகில் புழு, பூச்சியினங்கள், பறவையினங்கள், நீர்வாழ் இனங்கள், நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள், புல், பூண்டு தொடங்கி சிறிய, பெரிய, தாவரங்கள், மரங்கள்... போன்றவை அனைத்துமே இந்த உலகை உயிர்ப்புடன் பாதுகாப்பதில் அதனதன் பங்களிப்பைச் செய்து வருகின்றன. இவை இல்லையேல் இந்த உலகம் வெகுசில நாட்களில் அழிந்துவிடும். நாம் நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கே பெரும் முக்கியத்துவம் தருகிறோம். இயற்கையின் அம்சங்களாகவுள்ள இந்த பல்லுயிர்களை பாதுகாக்க தவறுவதோடு இவற்றின் அழிவுக்கும் காரணமாக இருக்கிறோம். 'இது காலப்போக்கில் மீட்கமுடியாத உலக பேரழிவுக்கே வழிவகுத்துவிடும்' என உலகம் முழுமையிலுள்ள இயற்கை விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் அறிஞர்கள் கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.
இதை எளிமையாகச் சொல்வதென்றால், நாம் மண்புழுவை அழித்துவிட்டோமென்றால் விவசாயமே வீழ்ந்துவிடும், தேனீ உள்ளிட்ட பூச்சியினங்களை அழித்துவிட்டால் மகரந்த சேர்ககைக்கே வழியின்றி பூஞ்செடிகள் பூமியில் காணமலாகிவிடும்! அதே போல் மரம், செடி, கொடிகள் போன்றவை காற்றைத் தூய்மைப் படுத்தி மனித சுவாசத்தின் மற்றொரு நுரையீரலாக செயல்பட்டு வருகின்றன. இந்த பேசவியலா உயிரினங்கள் ஒவ்வொன்றுமே ஏதோ ஒரு வகையில் இந்த உலகின் உயிர்சூழலுக்கு மகத்தான பங்களிப்பை தந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பேசத்தெரிந்த மனித குணமோ தன் பகுத்தறிவால் இயற்கைக்கு அளப்பரிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • பல்லுயிர் இனப்பெருக்கத்திற்கு பலமான அரசாகத் திகழ்ந்து கொண்டிருக்கிருக்கும் காடுகளை அழித்துவருகிறோம். விளைநிலங்களை கான்கிரிட் காடுகளாக்கி வருகிறோம்.
 
  • ரசாயண உரங்களால் மண்புழு அழிக்கிறோம். பூச்சிக்கொல்லி மருந்துகளால் பூச்சியினத்தை வேரறுக்கிறோம்.
 
  • அந்தந்த மண்ணிற்கேயான செடிகளும், மரங்களும் இயற்கையின் அருட்கொடைகள்! இதை மாற்றும் விதமாக வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படும் விதைகள், செடிகள் மரங்கள் இயற்கை சமன்பாட்டை அழித்துவிடும். இதை நாம் அதிகமாகவே செய்து தற்போது அல்லல்படுவதற்கு, யூகலிப்டஸ்மரங்கள், வேலிகாத்தான் செடிகளே சாட்சியாகும். இவை மற்ற தாவரங்கள் எதையும் வளர அனுமதிக்காது.
  • மரபணு பரிசோதனை ஆராய்ச்சியின் உச்சமாக - இயற்கைவிரோதமான மரபணுக்களை மாற்றி வைத்து கலப்பினங்களாக நாம் உருவாக்கிவரும் தாவரங்கள், விலங்கினங்கள் வருங்காலத்தில் விகாரமான விளைவுகளைத் தரும். பாரம்பரிய விதைகளை பாதுகாக்கவேண்டும்.
  • பெருகிவரும் அதீத மக்கள் தொகை இயற்கை வளங்களுக்கு, பல்லுயிர்களின் நலன்களுக்கு மாபெரும் ஆபத்தாகிக் கொண்டிருக்கிறது.
  •  
  • கடலுக்குள்ளிருக்கும் பவளப்பாறைகள் கடல் போக்குவரத்திற்காக அழிப்பது, புவி வெப்பமயாமதல், ஓசோன் மண்டலத்தை மாசடையச் செய்தல், நீர்நிலை பூமியெங்கும் பிளாஷ்டிக்குப்பைகளை குவித்தல், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்களுக்குள் சுற்றுலாவை அனுமதித்தல்... போன்றவை அனைத்துமே பல்லுயிர் பெருக்கத்திற்கு எதிரான செயல்களாகும்!
பல்லுயிர் பெருக்கம் தடைபடுமாயின் அதை விட உயிர்சூழலுக்கு வேறு பேராபத்து இருக்க முடியாது. நம் சௌகரியத்திற்காக தாவரங்கள் பூச்சியனங்கள், உயிரினங்களை தொடர்ந்து அழித்துக் கொண்டிருப்பது மெல்ல, மெல்ல மனித இனம் தன் தலைக்கு தானே கொள்ளி வைத்துக் கொள்வதற்குச்சமமாகும்.
இந்த பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை அன்றே நம் முன்னோர்கள் உணர்ந்தால் தான், "பார்க்கும் உயிர்களனைத்துமே அந்த பரம்பொரு ளின் அம்சம் தான்" என்றனர்!
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
17-10-2012

No comments: