Thursday, October 25, 2012

ஓய்வூதியம் பென்ஷனின் அந்நிய முதலீடு



                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

உலகத்திலேயே அதிக அரசு ஊழியர்களையும், அதிக ஓய்வூதியதாரர்களையும் கொண்டது நம் நாடு தான்!

ஒரு கோடிக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள், 75லட்சம் ஒய்வுபெற்ற அரசு ஊழியர்கள் என்ற யானைபட்டாளத்திற்கு மாதாமாதம் ஊதியம், ஓய்வூதியம் இது வரை இந்தியாவில் வழங்கப்பட்டு வந்ததே ஒரு சாதனை தான்!

முறையான நிர்வாக மேலாண்மை பற்றாக்குறையாலும், அதிகரித்து வரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது அதீத எதிர்பார்புகளாலும் சமீப காலங்களில் நமது மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன என்பது உண்மை தான்! ஓய்வூதியதாரர்கள் உயிரோடு இருக்கும் வரை மாத்திரமல்ல அவரது மனைவிக்கு, மனைவி இறந்திருந்தால் திருமணமாகாத அல்லது விவாகாரத்தான மக்களுக்கு மற்றும் 25 வயதாகும் வரை மகனுக்கும் ஓய்வூதியம் தற்போது தரப்பட்டு வருகிறது.

சமீபகாலத்தில் பீகார்,ஜார்கண்ட் அரசுகள் ஓய்வூதியமே அளிக்க முடியாமல் திணறி சில காலம் நிறுத்தி வைத்தன.

இதையடுத்து தான் புதிய ஓய்வூதிய திட்டம் 2004 முதல் அமலாகியது.
இதை இடதுசாரி ஆளுகின்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. இதன்மூலம் அரசின் சுமை கணிசமாக குறைந்தது என்பது உண்மை தான்! ஆனால் இந்தக் கடமையைத் தொடர நமது மத்திய, மாநில அரசுகள் விரும்பவில்லை. தற்போது மத்திய, மாநில அரசு ஊழியர்களின் சேமநலநிதி மட்டுமே ஏழுலட்சம் கோடிக்கும் மேல் அரசிடம் உள்ளது.
இந்த மாபெரும் நிதி ஆதாரத்தை ஏன் நமது அரசுகள் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களிடம் தர இசைந்துள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்! தற்போது இது போன்ற நிதிகள் தான் பல மக்கள் நல மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு உதவுகின்றன.

வெளிநாடுகள் பலவற்றில் தனியார் நிறுவனங்கள் தான் இந்த பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதில் கிடைக்கும் அபாரமான பெருந்தொகையை அவை பங்குச் சந்தையில் முதலீடு செய்கின்றன.
பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப பென்ஷன் தொகையும் இருக்கும் என்பது இதிலுள்ள அபாயகாரமான அம்சம்.

அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளில் சில தனியார் நிறுவனங்கள் பென்ஷன் தொகைகளை தரமுடியாமல் முதலீட்டாளர்களை நடுத்தெருவில் நிறுத்திய சம்பவங்கள் உள்ளன. இவை இந்தியாவிலும் அரங்கேறிவிடக்கூடாது என்பதே எதிர்ப்பாளர்களின் ஆதங்கம்.

நமது நாடு ஜனநாயக சோசலிஷத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்ட நாடு. இதில் ஓட்டு அரசியல் வேறு சேர்ந்து கொண்டதால் அரசு ஊழியர்களின் காட்டில் அடிக்கடி அடை மழை பொழிவது வாடிக்கையாகிவிட்டடது. இதனால் இப்போது அரசு ஊழியர்களின் அதீத எதிர்ப்பார்ப்புகளை - தானே வளர்த்தெடுத்த எதிர்ப்பார்ப்புகளை - நிறைவேற்றத் திணறுகின்றன நமது மத்திய, மாநில அரசுகள்.

இதனால் தான் 2003-ல் பா.ஜ.க அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதியபென்ஷன் திட்டத்தையும், இதில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி என்ற நிலைபாட்டினையும் காங்கிரஸ் 2004 முதல் அமல் படுத்தத் துடிக்கிறது. காங்கிரஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவின் தலைவரே யஷ்வந்த் சின்கா என்ற பா.ஜ.க தலைவர் தான்! எனவே இதில் காங்கிரஸ். பா.ஜ.க ஒருமித்துள்ளன.
2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி பென்ஷனுக்காக பிடிடத்தம் செய்யப்படுவதால் இனி பென்ஷன் திட்டம் அரசுக்கு சுமையில்லை என்பது மாத்தரமல்ல, லாபகரமானதும் தான்!

ஆனாலும் இந்த பொறுப்பை சுமக்க நமது அரசுகள் தயாரில்லை என்பது தான் பிரச்சினை. தண்ணீர் விநியோகம், குப்பை அள்ளுவது உள்ளிட்ட சாதாரண நிர்வாகத்தை கூட சமாளிக்க இயலாமல் அந்நிய நிறுவனங்களை நம்புகின்றன மனநிலையில் நாம் இருக்கிறோம்.
தற்போது பென்ஷன் திட்டத்தில் 49 சதவிகித அந்நிய நேரடி முதலீடை அமல்படுத்துவதில் பல பாதகங்கள் இருக்கின்றன! ஆனால் அப்படி பாதிப்பு ஏற்படாத வண்ணம் அசலுக்கும் குறைந்தபட்சம் எட்டு சதவிகித வட்டிக்கும் தானே பொறுப்பேற்கிறது அரசாங்கம். ஆனால் அந்நிய நிறுவனங்கள் மக்களை மாத்திரமல்ல, அரசாங்கங்களை கூட அல்லாட வைத்துவிடும் என்பதற்கு கடந்த காலத்தில் 'என்ரான்' நிறுவனமே அத்தாட்சி..!

இனி வருங்காலம் வசந்தகாலமா? வருத்தப்படப்போகும் காலாமா? என்பதை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
05-10-2012

No comments: