Friday, October 26, 2012

உழல் குற்றசாட்டுகளும், எதிர்வினையும்!

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

சமீபகாலமாக அடுத்தடுத்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சில ஊழல் புகார்களும் அதற்கு சம்மந்தப்பட்டவர்கள் தரப்பிலிருந்து வெளிப்படும் எதிர்வினைகளும் மக்களை மிரட்சியடைய வைத்துள்ளன.

மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித் ஊனமுற்றவர்களுக்காக நடத்தும் அறக்கட்டளை,மோசடியில் ஈடுபட்டதாக ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம் புகார் தெரிவித்தது.
ஊனமுற்றோர்களின் பெயரில் பெறப்பட்ட ருபாய் 71லட்சம் பொய்க்கணக்கு எழுதி சுருட்டப்பட்டுள்ளது.

இந்த நிதிகளை பெறுவதற்கும், ஊனமுற்றர்வகள் பயன்பெற்றதாக காட்டுவதற்கும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டதாக போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் சொல்ல முனைந்த சல்மான்குர்ஷித் மேலும் தவறான தகவல்கள் தந்து அம்பலப்பட்டார்.

போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளது. பதற்றமடைந்து சட்ட அமைச்சர் "இதுவரை பேனாவில் மையை நிரப்பினேன். இனி ரத்தத்தாலும் பதில் கொடுப்பேன். என் தொகுதியில் போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவால் எப்படி திரும்பி போவார் பாரக்கிறேன்" என்று பேசியுள்ளார்.

இந்தியாவின் சர்வவல்லமை பொருந்திய சட்ட அமைச்சர் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் எனில் அதை சட்டபூர்வமாக எதிர்கொண்டு தூள் தூளாக்கியிருக்கலாமே அதன் மூலம் அவர் தூய்மையானவர் என உலகறியச் செய்திருக்கலாமே!

சட்டத்தின் மீது சட்ட அமைச்சருகே நம்பிக்கையில்லையா? அல்லது தன் மீதே நம்பிக்கையில்லாததன் வெளிப்பாடு தான் இந்தப் பேச்சா? மக்களின் குழப்பம் தீர்க்கப்படவேண்டும்.

இதேபோல் இந்தியாவின் அதி சக்தி வாய்ந்த குடும்பத்தின் மருமகன் மீதும் புகார்! அவர் மூன்றே ஆண்டுகளில் எப்படி ரூ 300கோடிகளுக்கு அதிபதியானார்? என்பது ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்ததின் கேள்வி இந்த கேள்விக்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் காட்டமாக எதிர்வினை ஆற்றினர். ஆனால் உரியவர்களிடமிருந்து உண்மையான விளக்கம் வரவில்லை. இந்த குற்றசாட்டை ஆராய்ந்த உயர் அதிகாரி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதையே மக்கள் பதிலாக கொள்ளவேண்டும் போலத்தெரிகிறது...!

ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.கவும் விதிவிலக்கல்ல என்பது போல அதன் தலைவர் நிதின்கட்காரி மீதும் புகார். மகாராஷ்டிரா மாநிலத்தில் அணை கட்டுவதற்காக விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலம் மாநில அரசால் கையகப்படுத்தப்படுகிறது.

அணைகட்ட 72,000கோடி செலவழிக்கப்ப்ட்டுள்ளது. இதில் விவசாயிகள் இன்று வரை பலன் பெறவில்லை. மாறாக அவர்களிடமிருந்து அபரிமிதமாக பறிக்கப்பட்ட நிலத்தில் 100ஏக்கர் நிதின் கட்காரிக்கு தரப்பட்டுள்ளது. அதில் அவர் கட்டியுள்ள தொழிற்சாலைகளுக்கு அணை தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சோகம் என்னவென்றால் இந்தியாவிலேயே விவசாயிகளின் தற்கொலைகள் அதிகமாக நடக்கும் விதர்பா மாவட்டத்தில் தான் இந்த வில்லங்கங்கள் நடந்தேறியுள்ளன. ஏழை விவசாயிகளின் நிலத்தையும் பறித்து, அதற்கு ஈடாக அவர்களுக்கு தந்திருக்கவேண்டிய தண்ணீரையும் மறுத்து மாநில அரசு செய்துள்ள முறைகேடுகளில் பா.ஜ.க தலைவர் பிரதான பலன் அடைந்துள்ளார்.
இது எவ்வளவு பெரிய கொடுமை?

அரசியல் கட்சிகள் ஒன்றையொன்று குற்றம் சுமத்திக் கொண்டாலும் ஊழலில் பரஸ்பரம் பலடைந்து கொள்கின்றனரா? ஆளும்கட்சி எதிர்கட்சி அரசியல்வாதிகள்? என்று மக்கள் சந்தேகம் கொள்கின்றனர்.!

இந்தப்பிரச்சினையில் சம்மந்தப்பட்ட சரத்பவார் குடும்பத்தின் ஊழல்களை அரவிந்த கெஜ்ரிவால் ஏன் அம்பலப்படுத்தவில்லை? என்று ஒரு ஒய்வு பெற்ற I.P.S அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் செய்பவர்கள் தப்ப முடியாது, அம்பலப்பட்டேயாகவேண்டும் என்பது இப்போது நிருபணமாகிவந்தாலும், ஊழலில் சம்மந்தப்பட்டவர்கள் எவ்விதம் எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதையும் மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
18-10-2012

No comments: