Thursday, October 25, 2012

அபரிமிதமான உணவுதானியங்கள் பசிக்கா? பகட்டிற்கா?

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்


பிரிட்டிஷார் காலத்தில் பல பஞ்சங்களை பார்த்து இந்த பாரததேசம்!
அந்த பஞ்சத்தில் அடிபட்டு, பசியால் துடிதுடித்து, பல லட்சம் பேர் இறந்தனர். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப கட்டங்களில் உணவுபற்றாக்குறை இருந்தன.
ஆனால் பசுமைபுரட்சி பஞ்சத்தை விரட்டியது.

அபரிமிதமான உணவு உற்பத்தியால் பாரதம் செழித்தது.
இப்படி அபரிமிதமாக உற்பத்தியாகி குவிக்கப்படும் உணவுதானியங்கள் பசியைத்தீர்ப்பதற்கா? என்பது இன்று கவலைக்குரிய விவாதப் பொருளாகிவிட்டது.

சமீபத்தில் பொருளாதார பத்திரிக்கை ஆசிரியர்கள் மாநாட்டில் பேசிய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார், கடந்த இரண்டாண்டுகளில் உணவு தானிய உற்பத்தி அபரிமிதமாக இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் மட்டும் நமது உணவு தானிய உற்பத்தி 25கோடியே 74லட்சம் டன்கள் இதனால் நாம் வெளிநாட்டிற்கு ஒரு கோடி டன் அரிசியையும், 25லட்சம் டன் கோதுமையையும், 25லட்சம் டன் சர்க்கரையையும் மற்றும் பல தானியங்களையும் தற்போது ஏற்றுமதி செய்கிறோம். இதையும் மீறி நமது உணவு தானியக் கிடங்குகளில் 7கோடி டன் தானிய கையிருப்பு உள்ளது. நமது பொதுவிநியோகத் திட்டத்திற்கு தேவைப்படுவதைவிடவும் உபரியாக 2.12கோடி டன் கூடுதலாக கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இது தான் நமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏற்கெனவே இருக்கும் தானியங்களையே நாம் முறையாக பாதுகாக்க, பராமரிக்கத் தவறி பல லட்சக்கணக்கான டன் தானியங்கள் புழுத்துப்போய் வீணாகின்றன...! அப்படியிருக்க, இப்போது உபரியான தானியங்களனைத்தும் உதவாமல் அல்லவா விரயமாகும்....? என்பதே ஆர்வலர்களின் வேதனை!

நமது நாட்டின் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளில் சுமார் 4கோடி 20லட்சம் டன்களை மட்டுமே சேமிக்க இடமிருக்கிறது. மற்றபடி சேர்பவை அனைத்தும் திறந்த வெளி கிடக்குகளில் தார்பாய் போர்பத்தி வைக்கப்படுகின்றன.

இவை வெயில், மழை, பணியில் பாழாவதும், எலிகளுக்கு இரையாவதும் வாடிக்கையாயுள்ளன. அதோடு இவை அரசு அதிகாரிகள் சிலராலும், சமூக விரோதிகள் சிலராலும் கடத்தப்படுகின்றன. இது ஒரு புறமிருக்க, பாதுகாப்பாக கிடங்குகளில் அடுக்கிவைக்கப்படும் தானியங்களுமே கூட முறையான பராமரிப்பு, திட்டமிட்ட விநியோக முறையின்றி பூச்சிகளுக்கு இறையாகியும், பூஞ்சை பிடித்தும் அழிகின்றன.

இதனால் தான் பிரபல வேளாண்விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், "நமது உணவு தானியங்கள் வீணாவது குறித்து பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்த வைண்டும்" என்றார்.

நமது ஊரகத்துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ், "உணவுதானியங்களை எப்படி பாதுகாப்பது என்ற விவஸ்த்தையே இல்லாமல் பஞ்சாபில் பல கழிவறை கூடங்களே தானிய கிடங்காகி உள்ளன. இந்தியாவில் சிக்கிம் மாநிலம் தவிர, அனைத்து மாநிலங்களிலும் இன்று வரை திறந்தவெளி உணவுக்கிடங்குகள் பரிதாபமாய் காட்சியளிக்கின்றன" என்று பேசியுள்ளார்.

இந்தக்கொடுமைகள் பொறுக்கமாட்டாமல் தான் பி.யு.சி.எல் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்து. உச்சநீதிமன்றமோ, "பாழாய்போகும் உணவுதானியங்களை பசியால் வாடும் ஏழைகளுக்கு விநியோகியுங்கள்" என கட்டளையிட்டது.

முதலில் இதை மறுத்த மத்திய அரசு பிறகு 25லட்சம் டன் தானியங்களை ஏழைகளுக்கு விநியோகித்தது. ஆனால் தற்போது முன்பைவிடவும் மோசமான அளவில் உணவு தானியங்களை வீணாவதை அடுத்து உணவு அமைச்சகம் இவற்றை விநியோகிக்க பரிந்துரைத்த போது நிதி அமைச்சகம் தடுத்துவிட்டது.

தங்கள் உயிரைக்கொடுத்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்கள் நாம் விரையமாக்குகிறோம். ஆம்! இந்த உணவு தானிய உற்பத்திக்கு காரணமாக இரண்டரைலட்சம் விவசாயிகள் கடந்த 15 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நமது நீராதாரத்தில் சுமார் 60சதவிகிதத்தை நாம் விவசாயத்திற்குத்தான் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் கிடைத்தற்கரிய நீரையும், மண்வளத்தையும், விவசாயிகளின் உழைப்பையும் வீணாக்குகிறோம்!

"சும்மா இருந்திருந்தாலே பல சுமைகளும், வேதனைகளும் தவிர்க்கப்பட்டிருக்குமே" என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
உணவை தெய்வமாக கருதும் பாரம்பரியத்தின் காரணமாகவே நாம் அன்னத்தை, 'அன்னலஷ்மி என்கிறோம். அன்னதானங்களை ஆண்டவனுக்கு செய்யும் சேவையாக கருதுகிறோம். ஒரு பருக்கை அன்னத்தை கூட வீணடிக்க மறுத்தவர் தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர். காந்திதேசம் இந்த உணவு தானிய விரயத்திற்கு உடன்படலாமா?

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
10-10-2012

No comments: