Saturday, October 13, 2012

புதிய கல்வி கொள்கை

                                                                                                                      -சாவித்திரிகண்ணன்
 
12வது ஐந்தாண்டு கல்விதிட்டம் வெளிவந்துள்ளது.
இதில் புதிய பள்ளிக் கூடங்கள் எவையும் திறக்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சுதந்திரமடைந்த பிறகு வெளிவந்த ஒவ்வொரு ஐந்தாண்டு கல்விதிட்டத்திலும் புதிய பள்ளிக்கூடங்கள் பற்றிய அறிவிப்புகள் தவறாமல் இருந்தன. ஆனால் இந்த முறை விடுபட்டுப் போனதற்கு என்ன காரணம்?
 
புதிய பள்ளிக் கூடங்கள் தேவைப்படாத அளவுக்கு அனைவருக்கும் கல்விதிட்டம் சாத்தியமாகிவிட்டதா? என்றால் இல்லை. ஆனால் அரசாங்கத்திடமிருந்து இனி புதிய பள்ளிகள் உருவாக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. ஏற்கெனவேயுள்ள பல அரசு பள்ளிகள் ஆண்டுதோறும் மூடப்பட்டு வருகின்றன.
 
அடிப்படை வசதிகளிண்மை, ஆசிரியர்கள் போதாமை, தரமற்ற கல்வி.... போன்ற காரணங்கள் மக்கள் சில அரசு பள்ளிகளை புறக்கணித்ததன் பிண்ணணியாகும்!
 
இன்னும் பள்ளிக்கல்வி கிடைக்காத நிலையில் தான் பல கோடிக் குழந்தைகள் உள்ளனர். இந்த நவீன தகவல் தொழில்நுட்பயுகத்திலும் எழுதப்படிக்காத எண்ணற்ற கொழந்தைகள் இருப்பது இந்த தேசத்தின் அவமானம்.
 
பள்ளிக்கூடம் சென்றாலும் கூட எழுதப்படிக்கும் நிலையை எட்ட முடியாத எண்ணற்ற குழந்தைகள் உள்ளனர். இது தான் அரசுக்கல்விகூடத்தின் அவலத்திற்கு சான்று. இதை உணர்ந்து தான் இந்த 12வது கல்விதிட்டத்தில் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்துவதும், கல்வித் தரத்தை உறுதி செய்வதும் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
 
இது மிகச்சரியான அணுகுமுறை!வரவேற்போம்!
 
நிரப்படாத லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படட்டும். அடிப்படை வசதிகளற்ற ஆயிரக்கணக்கான அரசுபள்ளிகள் புனரைமைக்கப்படட்டும்.
 
ஆசிரியர்களின் ஈடுபாடும், அர்பணிப்பும் உறுதி செய்யப்படட்டும். ஆனால் இதற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி கொஞ்சமும் போதுமானதல்ல. இவை மட்டுமின்றி மையப்படுத்தப்பட்ட கல்விமுறை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளிக்கு பள்ளிகல்வியில் அதிக முக்கியத்துவத்தை வழங்கவேண்டும்.
அனைத்து குழந்தைகளையுமே பெரிய படிப்பாளிகளாக்கமுடியாது. தேவையுமில்லை தற்போது 42% குழந்தைகள் பள்ளிகல்வியிலிருந்து இடைநின்றுவிடுகின்றனர். 90% குழந்தைகள் உயர்கல்வியை பெறுவதில்லை.
 
எனில், இவர்களுக்குகான கல்வி பள்ளிக்கூடங்களிலோ, உயர்கல்விக்கூடங்களிலோ இல்லை என்பதே காரணமாகும்.
 
மனப்பாட கல்வி மட்டுமே கல்வியல்ல...
சின்னச் சின்ன தொழில்கல்வி, இசை, கலைத்திறன், படைப்பாற்றல், கற்பனைவளம், நடனம், ஒவியம், விளையாட்டுகள்... என எந்தெந்த தளத்தில் குழந்தைகளின் ஆர்வம் வெளிப்படுகிறதெனக் கண்டறிந்து அவற்றை கற்கும் வாய்ப்பை வழங்கினால் கிட்டத்தட்ட நூறு சதவிகித குழந்தைகளும் பள்ளிக்கூடத்தின் பால் ஈர்க்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
பள்ளி கல்விக்கான நிதி ஒதுக்கீடும், திட்டமிடலும் ஆண்டுக்காண்டு நடைபெறும் சடங்காகிவிடக்கூடாது. வருங்கால தலைமுறையை வளர்த்தெடுக்கும் வேள்வியாக இவை நடந்தேறவேண்டும்.
 
500கேந்திரிய வித்யாலயா புதிதாக கொண்டுவரப்படும் என்பதும் ஏழை, எளியயவர்களுக்கான 378 புதிய நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படும் என்பதும் பெரிதும் வரவேற்கக்கூடியதாகும்!
 
நமது தமிழக அரசு இணையும் வறட்டுபிடிவாதம் கொள்ளாமல் நவோதயா பள்ளிகளை அதிக அளவில் தமிழகத்திற்கு கொண்டுவர மத்திய அரசிற்கு அழுத்தம் தரவேண்டும். தாய்மொழியில் கற்பித்தலையும், தொழிற்கல்வியையும் உள்ளடக்கிய நவோதயா ஒரு உன்னத கல்விமுறை என்பது ஏற்கெனவே நிருபணமாக்கப்பட்டுள்ளது.
 
நமது தமிழகத்தை பொறுத்தவரை பள்ளிகல்வியில் மத்திய அரசு 75% பங்கும், மாநில அரசு 25% பங்கும் செலவிடுகின்றன. இரு அரசுகளுமே பள்ளிக்கல்விக்கான நிதியை அதிகப்படுத்தவேண்டும்.
 
NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
25-9-2012

No comments: