Thursday, October 4, 2012

சி.ஏ.ஜி அறிக்கைகளும், சினம்கொள்ளும் காங்கிரசும்



                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

சமீபத்திய அரசியல் புயல்கள் பலவற்றிக்கு மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கைகளே காரணங்களாயின!
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்கள், காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாட்டு ஊழல்கள், ஏர் இந்தியாவால் ஏற்பட்ட இழப்புகள், நிலக்கரி சுரகங்கள் ஒதுக்கியதில் ஏற்பட்ட முறைகேடுகள்... போன்றவை மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையின் விளைவுகளே!
இந்த அறிக்கைகள் அம்பலப்படுத்திய உண்மைகளால் ஆளும் தரப்பினர் அதிர்ந்துள்ளனர். மத்திய அரசின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. ஆட்சியின் அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளது. மொத்தத்தில் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் மீது அழுத்தமான ஊழல் இமேஜ் படிந்துள்ளது.

அதுவும் நிலக்கரி சுரகங்களை ஒதுக்கியது தொடர்பான ஊழலில் பிரதமர் மீதான நேரடி குற்றசாட்டுகளை எதிர்கட்சிகள் சுமத்தவும், பதவி விலக நிர்பந்திக்கவும் 'CAG' ரிப்போர்ட் காரணமாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து முன் எப்போதும் இல்லாத வகையில் பிரதமர் அமைச்சகத்தின் இணை அமைச்சர் நாராயணசாமி, சட்ட அமைச்சர் சல்மான்குர்ஷித், சுகாதார அமைச்சர் குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஸ்திவாரி போன்றோர் மத்திய தணிக்கை துறையின் மீதே பாய்ந்து குதற தொடங்கிவிட்டனர். மத்திய கணக்கு தணிக்கை துறையை கடுமையாக விமர்சித்தனர். இதில் கொஞ்சம் மிரட்டல் தோரணையும் வெளிப்பட்டது. இவை போதாதென்று பிரதமரே தற்போது மத்திய தணிக்கை துறையை குறை கூறிவருகிறார்.

மத்திய கணக்கு தணிக்கை துறையின் அறிக்கைக்கு மாற்று கருத்தை வைப்பதென்பது வேறு, அது தவறாகாது, ஆனால் அதற்கு உள்நோக்கம் கற்பிப்பதும், அதற்கு அரசியல் சாயம் பூச முற்படுவதும் என்பது வேறு, இது ஆபத்தானது!

இந்திய அரசியல் சாசனப்படி தன்னாட்சி உரிமையுடன் கூடிய சுய அதிகாரம் படைத்த அமைப்பு மத்திய தணிக்கை துறை, இது மத்திய, மாநில அரசுகளின் வரவுசெலவுகணக்குகள், துறைவாரியான கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை தருகிறது. அரசியல் சாசனம் இவ்வுரிமையை தணிக்கை துறைக்கு உறுதி செய்துள்ளது.

அரசியல்வாதிகள் விமர்சிப்பது போல சி.ஏ.ஜி ஏனோ, தானோவென்று மேம்போக்காக அறிக்கைகள் சமர்பிப்பதில்லை.

ஒவ்வொரு அரசுத்துறையின் கணக்கு வழக்குகளையும் சி.ஏ.ஜி இரண்டு கோணங்களில் ஆஃவுக்கு உட்படுத்துகிறது, ஒன்று; அத்துறையின் செயல்பாடு என்பது உருவாக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துள்ளதா? - மற்றொன்று அத்துறையின் செயல்பாடுகளால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார லாபம் அல்லது நஷ்டம் குறித்தது. இந்த ஆய்வுகளில்,

வாங்கப்படும் பொருளின் தரம் மற்றும் விலைகள் குறித்த மதிப்பீடுகள்.
செலவழிக்கப்பட்ட பணத்திற்கு உண்டான பலன்கள்
நிர்ணயிக்கப்பட்ட இலக்கை செயல்பாடுகளால் அடைய முடிந்ததா?
போன்ற அனைத்துமே முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றியே அறிக்கைகள் வெளியாகின்றன.
உண்மையில் சி.ஏ.ஜியின் அறிக்கைகள் அரசுக்கு தன் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளால் விளைந்த விளைவுகளை, பலன்கள் அறியஞ் செய்கின்றன!
இதன்மூலம் அரசு தன் தவறுகளிலிருந்து விடுபட்டு, தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அனைவரது எதிர்ப்பார்ப்புமாகும்!

ஆகவே இன்று ஆளும் தரப்பு சி.ஏ.ஜியை மிரட்டுவது கண்டனத்திற்குரியது. இதற்காக பா.ஜ.க தலைவர்கள் குடியரசு தலைவரை சந்தித்து அரசுக்கு அறிவுரை கூறவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதுவும் ஓர் அரசியலே!
நாம் இதற்குள் போக விரும்பவில்லை. ஆனால் நாளை பா.ஜ.கவந்தாலும், வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியலமைப்பு காசனப்படி அமைக்கப்பட்ட ஒரு வலிமையான அமைப்பின் மீது கைவைப்பதை ஏற்க முடியாது! கூடாது.
அரசியல்வாதிகள் எப்படியெப்படியோ செயல்பட்டுவருகின்றன நிலையிலும் இந்த நாட்டில் இன்னும் ஜனநாயக மாண்புகள் நிலைத்திருப்பதற்கான காரணம் பிரிட்டிஷார் நமக்கு ஏற்படுத்தி தந்துள்ள வலிமையான நிர்வாக அமைப்பும், அதற்கு நமது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழக்கப்பட்டுள்ள உரிமைகளுமே! அதை யாரும், எந்த தலைவரும் கேள்விக்குட்படுத்தவோ, சீர்குலைக்கவோ செய்யும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கது! முறியடிக்கப்படவேண்டியது!
போபர்ஸ் ஊழலை அனைறைய சி.ஐ.ஜி தலைவர் டி.என் சதுர்வேதி அம்பலப்படுத்தினார். ராஜீவ்காந்தி பதவி பறிபோனது ஆனால் சி.ஏ.ஜி மீது கோபப்படவில்லை. காமன்வெல்த் ஊழலை இன்றைய சி.ஏ.ஜி. தலைவர் வினோத்ராய் அம்பலப்படுத்தினார். டெல்லி முதல்வர் ஷிலா திட்சத்தித்தின் இமேஜ் தரைமட்டமானது. அவரும் கோபப்படவில்லை. எனவே ஆட்சியாளர்கள் தங்கள் தவற திருத்திக் கொள்ள வேண்டுமேயல்லாது, திரும்பி பாயலாகாது.

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
12-9-2012

No comments: