Thursday, October 25, 2012

கூடுதல் சினிமா கட்டணங்கள்


                                                                                                                      -சாவித்திரிகண்ணன்

சென்னையில் சில சினிமா தியேட்டர்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மீறி கூடுதலாக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அரசு துறைகளிடமும், தியேட்டர்காரர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தின் மற்ற பல பகுதிகளிலும் நடந்து கொண்டிருப்பதால் 'தியேட்டர்களில் கூடுதல் கட்டணங்கள்' என்பது, 'கோடிக்கணக்கான சினிமா ரசிகர்களின் குமுறல்' என்று தான் சொல்லவேண்டும்...!

அடிக்கடி இது தொடர்பான குமுறல்கள் வெடிப்பதும், அரசு சில கட்டணவரைமுறைகளை வகுப்பதும் நாம் அறிந்ததே!

சினிமா தியேட்டர் கட்டணங்களை பொறுத்த அளவில் தமிழக அரசு பெருநகரங்கள், நடுத்தரநகரங்கள், கிராமப்பகுதிகள் என மூன்று பிரிவுகளாக பகுத்து, கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அதோடு பெருநகரங்களில் அதிநவீன சொகுசு தியேட்டர்களுக்கென்று பிரத்தியேக கட்டணத்தையும் நிர்ணயித்துள்ளது.

ஆனால் அரசின் கட்டணவரைமுறைகளை தியேட்டர்காரர்கள் பொருட்படுத்தவதில்லை. மக்கள் அதிகமாக, விரும்பி எதிர்பார்க்கும் படங்கள் வெளியாகும் போது முதல் சில நாட்களுக்கு வரம்பு மீறி கட்டணவசூல் செய்கின்றனர். இதன்மூலம் சென்னையில் உள்ள 120தியேட்டர்களில் - இப்படியாக வரம்பு மீறி வசூல் செய்யும் சில தியேட்டர்கள் நாளொன்றுக்கு ஈட்டும் சட்டவிரோத வருமானம் மட்டுமே பல கோடியைத்தொடும்! தமிழகம் முழுக்க தினசரி சுமார் ஆயிரம் கோடி இப்படி சட்டவிரோத வழிமுறைகளில் தியேட்டர்களில் வசூலிக்கப்படுகிறது என மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்காலங்களில் சினிமா தியேட்டர்களில் முன்கூட்டியே சில டிக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு, டிக்கெட் கிடைக்காமல் திரும்புவர்களிடம் கூடுதல் விலைக்கு விற்பவர்களை 'பிளாக்கில் டிக்கெட் விற்றவர்'களாக கருதி, போலீசார் கைது செய்து அடித்தவாறு இழுத்துச் செல்வார்கள். ஆனால் அந்த ஈனச்செயலை சில தியேட்டர்காரர்களே இன்று செய்கிறார்கள். கறைபடிந்த சில காவல்துறை அதிகாரிகளும் இதற்கு துணைபோகிறார்கள்.

இந்த சட்டவிரோத கூடுதல் டிக்கெட் மற்றும் கூடுதல் கட்டண விற்பனைக்கும் வசூலுக்கும் தியேட்டர்காரர்களை மட்டும் பொறுப்பாக்க முடியாது. நியாயமற்ற விலைக்கு படங்களின் விலையை ஏற்றி வைத்து விற்கும், விநியோகிக்கும் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் கூட பொறுப்புதான் சினாமாவை 'மரியாதைக்குரிய தொழில்' என்ற நிலையிலிருந்து சூதாட்டச் சந்தையாக்கி, தியேட்டர்குக்கு மக்கள் சுலபத்தில் வர முடியாத நிலைமையை உருவாக்கினால் பிறகு ஏன் திருட்டு டி.வி.டிக்கள் பெருகாது...?

சினிமா திரையரங்குகளில் சந்தோஷமாக குடும்பத்துடன் வந்து படம் பார்க்க விரும்புவதே பெரும்பாலான மக்களின் இயல்பு. பெரிய அரங்கில் பலநூறு பேரோடு பார்க்கும் சந்தோஷம் அலாதியானது. ஆனால் ஏழை எளிய நடுத்தரவர்கத்திற்கு இது இன்று எட்டாக் கனவாகிக் கொண்டிருக்கிறது. அதானல் தான் அவர்கள் திருட்டு DVDக்களை வாங்கி வீட்டில் பார்க்கும் நிலைக்கு நிர்பந்திக்கப்படுகிறார்களோ... என்று கூட எண்ணவேண்டியுள்ளது.

தமிழல் பெயர் வைத்தால் 'வரிவிலக்கு' என்ற சலுகையை இன்று அனைத்து தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தியேட்டர்களும் நன்கு அனுபவிக்கிறார்கள். இதன் பலன் மக்களுக்கு கிடைப்பதில்லை. நமது அரசுக்கு கேளிக்கைவரியாக கிடைத்த வந்த பலநூறுகோடி இழப்பானது தான் கண்ட பலன். ஆனால் இந்த சலுகையெல்லாம் போதாது என்று சினிமாகாரர்கள் சிலர் கருதி சட்டவிரோத வழிமுறைகளை கையாளுவார்கள் என்றால், அவர்களே சட்டவிரோத DVDக்கள் விற்பனைக்கும் பொறுப்பாகிறார்கள்.

ஏற்கெனவே தமிழகத்தில் ஏராளமான தியேட்டர்கள் திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் மாலாகவும் மாறியுள்ளன. ஆனால் திரையரங்குகள் உரிய விதிமுறைகளின் படி, தொழில் தர்மத்தோடு நடக்கும் பட்சத்தில், அதற்கு மக்கள் தொடர்ந்து ஆதரவை நல்கி வருகின்றனர். அப்படிப்பட்ட சினிமா தியேட்டர்கள் குறித்த இனிமையான நினைவுகள் ஞாபக புதையல்கள் ஒவ்வொரு சினிமா ரசிகர்களின் நெஞ்சிலும் நிழலாடிக் கொண்டுதான் உள்ளன. எனவே திரையரங்குகள் என்பவை சந்தோஷப்படும் அடையாளச் சின்னங்களாக நிலைகொள்ளட்டும். சபிக்கப்படும் சட்டவிரோத செயல்பாடுகளை தவிர்க்கவாம்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
04-10-2012

No comments: