Tuesday, October 30, 2012

இலங்கையில் இழுத்தடிக்கப்பட்டுவரும் தமிழர்களின் வாழ்வுரிமைகள்

                                                                                                                     -சாவித்திரிகண்ணன்

கொடூரமான யுத்தம்....
கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் தமிழர்கள்...
குற்றுயிராய் சீர்குலைந்து நிற்கும் சமூகம்.....
ஒரு அடிப்படையான வாழ்வாதாரத்தை கட்டமைப்பதற்கான தவிப்பு...
என்ற இக்கட்டான சூழலில் இலங்கையில் தமிழர்கள் தவித்துக் கொண்டிருக்க இலங்கை அமைச்சர், சம்பிக்கரணவக்க பேசியுள்ள பேச்சு சர்வதேசத்திலுமுள்ள சமாதான ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

"இலங்கைத் தமிழர்களுக்கு குறைந்தபட்ச தன்னாட்சி அதிகாரம் கொண்ட 13வது சட்ட திருத்த மசோதா தேவையற்றது. அது நாட்டை பிளவுபடுத்தும்" என இலங்கை அமைச்சர் 'ஜாதிகஹெல உறுமய' மாநாட்டில் பேசியுள்ளார். இது கடந்த கால துயரங்கலிருந்து எந்த பாடத்தையும் கற்கமறுக்கும் போக்கு என்பதில் சந்தேகமில்லை.

1956ல் இலங்கையில், 'சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி' என்று சட்டம் கொண்டுவரப்பட்டபோது, ஒரு பிரபல இடதுசாரி சிங்களத்தலைவர் அரசுக்கு ஒரு எச்சரிக்கை செய்தார்!

"இந்த இலங்கை தீவு இரண்டுமொழிகள் கொண்ட ஒரே நாடாக திகழ விருப்பமா? அல்லது ஒரே மொழி, இருநாடுகள் என்ற நிலையை எய்த உத்தேசமா? என்பதை அரசாங்கம் யோசித்து முடிவு செய்யப்பட்டும் அந்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டதன் அவலத்தை தான் அரைநூற்றாண்டு இலங்கை அனுபவித்தது.

சர்வதேச சமூகம் இலங்கை அரசின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்துவருகிறது.

ஏற்கெனவே ஐ.நா.சபையில் பல நாடுகளின் கண்டனத்தை பெற்றுள்ளது இலங்கை. தற்போது அம்னெஸ்டிக் இண்டர்நேஷனலும் அரசை எச்சரித்துள்ளது.
நவம்பர் 1ல் ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது. அதில் இலக்கை நிலவரம் தொடர்பாக விவாதிக்க பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், டென்மார்க்.... உள்ளிட்ட நாடுகள் விபரங்கள் சேகரித்து தயாராகி வருகின்றன.

வடமாகாணத்தில் இன்னும் ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதும், இயல்புவாழ்க்கை அங்கு தமிழர்கள் அனுமதிக்கப்படாததும், குறிப்பாக வட மாகாணத்தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும் தமிழர்களுக்கு உரிமைகளை மறுக்கும் இலங்கை அரசின் போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வெலிக்கடை புதிய மக்சின் சிறைச்சாலையில் இன்னும் வாடிக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இங்கே 'விசிட்' செய்த வாசுதே நாணயக்கரா என்ற இலங்கை அமைச்சர், "இவர்கள் மீதான விசாரணைகள் உடடியாக நடத்தப்பட்டு புனர்வாழ்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.." என அந்த கைதிகளை அவலநிலைகண்டு மனம் நொந்து பேசியுள்ளார்.

சட்டத்திற்கு புறம்பான கொலைகள், ஆட்கடத்தல்கள, மனித உரிமை மீறல்கள் என்பவை இன்னும் இலங்கையில் முடிவுக்கு வந்த பாடில்லை...!! அவசரகாலத்தில் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.
இத்துடன் மூதூர் என்ற இடத்தில் பிரான்ஸ்நாட்டினர் நடத்தி வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் 17பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவையாவும் இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு விரைந்து முடிவு காண்பதை தவிர்த்து இழுத்தடிக்க விரும்பும் போக்கையே உணர்த்துகின்றன.

இதனால் இலங்கை அரசு மேன்மேலும் சர்வதேச ரீதியில் கண்டணத்திற்கு ஆளாவதும், அவமானப்படுவதும் தவிர்க்கமுடியாதாகிவிடும். சமாதானம் என்ற கருத்தில் இலங்கை அரசுக்கு சஞ்சலம் இருக்கும் பட்சத்தில் சர்வாதிகாரத்தோடு அதை சாத்தியப்படுத்துவேண்டிய நிர்பந்தம் சர்வதேச நாடுகளின் கடமையாகிவிடும்.

போரில் சகலத்தையும் இழந்து நிற்கும் இலங்கையில் உள்ள தமிழர்களை அரவணைத்து வாழ்வளிப்பதும், சர்வதேச ரீதியாக புலம்பெயர்ந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து இலங்கைத் தமிழர்களையும் குறிப்பாக தமிழக அகதிமுகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்விப்பதும் இலங்கை அரசின் வரலாற்றுக் கடமையாகும்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
23-10-2012

No comments: