Wednesday, October 3, 2012

கிரிக்கெட் விளையாட்டுகளும் கிளறிவிடப்படும் பகைஉணர்வுகளும்


                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

பகையை உருவாக்குவது எளிது. ஆனால் நட்பை வளர்ப்பதும், உறுதிப்படுத்துவதும் சுலபமலானதல்ல.

இன்றைய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் யாரெனும் அல்லது ஏதேனும் ஒரு எதிரியை ஆபத்தானதாக சித்தரித்து அதன் மூலம் மட்டுமே தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்கின்றன. சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் எதிர்ப்பு அரசியலால் மட்டுமே இன்றைய கட்சிகள் பிழைப்பை நடத்துகின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிர மாநில சேனா அமைப்புகளும், தாக்கரேக்களும் பகை அரசியல் ஒன்றையே தங்கள் பலமாக கருதுகிறார்கள் போலும்!
தமிழர்கள், பீகாரிகள், இஸ்லாமியர்கள்... என அவ்வப்போது மாறிமாறி அவர்களது பகை அரசியல் பயணப்பட்டு வருகிறது.

தற்போது நமது வெளியுறவு துறை அமைச்சர் இரண்டுநாள் பயணமாக பாகிஸ்தான் சென்று வந்ததைத் தொடர்ந்து, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் வாரியங்களிடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிசம்பர் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பே தாக்கரேக்களே ஆத்திரப்படவைத்துள்ளது. "இது நடக்காது, முடியாது, விடமாட்டோம்" என எச்சரித்துள்ளனர். இது மட்டுமின்றி, "சர் -சேத்ரா என்ற பாரம்பரிய இசை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானிய இசைக் கலைஞர்களையும் இந்தியாவிற்குள் அனுமதிக்க முடியாது" என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமான கிரிக்கெட் போட்டிகள் துபாய், மொகலி போன்ற வெளிஇடங்களில் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் உள்ளது. அதே பால் இருநாட்டிற்குமான கலை, கலாச்சார பரிவர்த்தனைகள், வியாபார, தொழில் உடன்படிக்கைகள் எவ்வளவோ நடந்து கொண்டிருக்கின்றன!

இந்தியப் படங்கள் - குறிப்பாக இந்திப்படங்கள் பெரும்பாலனவை பாகிஸ்தானில் பெரிதும் வரவேற்பு பெறுவதால் அங்கே அமோக வியாபாரமாகின்றன. இதைப்போலவே நமது படங்களின் ஆடியோ, வீடியோ சி.டி, டி.வி.டிக்களும், பற்பல உற்பத்தி பொருள்களுமே பாகிஸ்தான் சந்தையை ஆக்கிரமித்துள்ளன. காரணம் நமது ரசனைகளும், அவர்களது ரசனைகளும் வேறுவேறானதல்ல. மதம் என்ற ஒன்றை தவிர்ததுப் பார்தால் தோற்றத்தால், நிறத்தால், மொழியால், பழக்கவழக்கங்காளல் நம் இருநாட்டு மக்களிடையே பெரிய வேறுபாடுகளில்லை. முன்பு சேர்ந்து வாழ்ந்திருந்தோம்! இப்போது பிரிந்திருக்கிறோம்! இரு நாட்டு எல்லைகளிலும் வாழும் மக்களிடையே இன்றும் நிலவிக்கொண்டிருக்கும் குடும்ப உறவுகளும் நட்புணர்வுகளும் எல்லை கடந்தவை! அன்பால் பிணைக்கப்பட்டவை!

தீவிரவாதப்பிரச்சினைகள் என்பதில் இந்தியாவைக் காட்டிலும் பாகிஸ்தானே அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அந்நாட்டு அரசியல் களத்தில் வித்தூன்றப்பட்ட மதவாத அரசியல் இன்று அந்த நாட்டையே பலி கேட்டுக் கொண்டிருக்கிறது காஷ்மீர் பிரச்சினையைக் கடந்து நாமும் அவர்களும் கைகோர்த்து செயல்பட எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. அனுகூலங்கள் காத்திருக்கின்றன!
அதற்கான அவசியங்களும் உள்ளன!
எனவே இருநாட்டு உறவுகளை வளர்க்கவும், வலுப்படுத்தவும் இருதரப்பிலும் உள்ள ஜனநாயக சக்திகள் குறிப்பாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பல்லாண்டுகளாக பாடுபட்டு வருகின்றனர்.
பக்கத்து நாட்டை பகைநாடாய் தொடர்ந்து வைத்திருப்பதை விடவும் முட்டாள்தனம் வேறில்லை! மூர்க்கத்தனத்திற்கு தீர்வில்லை,
கிரிக்கெட் போட்டிகளை நாம் தேசபக்தியின் அடையாளமாக பார்ப்பது பெரிய அபத்தமாகும்! வியாபார வெற்றிக்காக உருவாக்கப்பட்ட இந்த தேசபக்திவறியானது இன்று விபரீத எல்லைக்கு சென்றுவிட்டது! கிரிக்கெட் விளையாட்டை ஏதோ கார்கில் யுத்தம் போல கற்பிதம் செய்து உணர்ச்சிவசப்படுவதும், படுத்துவதும் தவிர்க்கப்படவேண்டும். பொதுவாக வட இந்தியாவில் தான் இது நடக்கின்றது. சென்னை ரசிகர்கள் ஸ்டேடியத்தில் இந்தியாவை தோற்கடித்த அணி எந்த நாடாக இருந்தாலும் எழுந்து நின்று கைதட்டிய சம்பவம் ஏராளம்! தான் ஒரு உண்மையான 'ஸ்போர்ட்டஸ் ஸ்பிரிட்' டாக இருக்கமுடியும்!

ஆக, விளையாட்டு என்பதையும், கலை என்பதையும் சம்மந்தப்பட்ட வீரர்கள், கலைஞர்கள், ரசிகர்கள் விருப்பதிற்கு விட்டுவிடுவோம். அங்கு அரசியலுக்கோ, மதத்திற்கோ, இனத்திற்கோ, மொழிக்கோ அல்லது இது போன்ற எது ஒன்றுக்குமோ கடுகளவும் இடமில்லை!
பகையைத் தவிர்த்து, பண்பட்ட நாகரீகத்தின் புத்திரர்கள் நாம் என்பதை இந்த உலகதந்திற்கு புரியவைப்போம்!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
14-9-2012

No comments: