Saturday, October 27, 2012

மழைவரமா? சாபமா?

                                                                                                                       -சாவித்திரிகண்ணன்

வட கிழக்கு பருவமழை வலுக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் வடகிழக்கு பருவமழை தான் அதிக தண்ணீரைத் தருகிறது. இந்த நேரத்தில் பொழியும் மழை தான்ஏரி, குளம், ஆறு அனைத்துக்கும் பெருமளவு தண்ணீர் தருகிறது. வறண்ட பகுதிகளெல்லாம் கூட வளமடைகின்றன.

எனவே இந்த மழை நமக்கெல்லாம் 'வரம்' என்பதில் சந்தேகமில்லை. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இயற்கையின் அருட்கொடையை நாம் வரம் போல் வந்த சாபமாக்கி கொண்டு வருகிறோம்.
நான்குநாள் மழைக்கே நாடு திணறிப்போய்விடுகிறதே!

தெருக்கள், சாலைகள்... எல்லாம் முழங்கால் அளவு தொடங்கி இடுப்பளவு தண்ணீரில் முழ்கி விடுகின்றனவே...!

குண்டும் குழியுமான சாலைகளில் வாகனங்கள் நிலை நடுமாறி குப்புறக் கவிழ்கின்றன! மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தாலும், மரமே பெயர்ந்து விழுந்தாலும் அப்புறப்படுத்துவதற்கு காலதாமதாமாகிறது!

மின்சார வயர்கள் ஆங்காங்கே அறுந்துவிழுவதும்,பூமியில் மின்கசிவு உண்டாவதும் எத்தனையெத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமாகின்றன. ஆரம்பகட்ட மழைக்கே இது வரை 14பேர் பலியாகியுள்ளனர். தொழிற்சாலைகளுக்குள்ளும், வியாபார நிறுவனங்களுக்குள்ளும், வீடுகளுக்குள்ளும் மழை தண்ணீர் புக்ந்துள்ளன.

திருமணமண்டபங்களும், பள்ளிக் கூடங்களும் மக்களின் புகலிடங்களாகின்றன...!

வான்வெளி மண்டலத்தில் விண்கலங்களையும், ஏவுகணைகளையும் அனுப்பி வல்லமை காட்டத்தெரிந்த நமக்கு சாதாரண மழையைத் தாக்கு பிடிக்க முடியவில்லை!

பொதுநலத்திலும், நிர்வாகத்திலும் நிலவும் அக்கரையின்மையும், அலட்சிப் போக்குகளுமே மழைகாலத் துயரங்களுக்கு காரணங்களாகும் கழிவுநீர் சாக்கடைகளிலும், மழைநீர் வடிகால் கால்வாய்களிலும் அடைப்புகள் அகற்றப்பட்டு, பராமரிக்கப்படிருந்தால் சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பில்லை. இற்று விழத்தயாராயிருக்கும் மரங்களைக் கண்டறிந்து, மழைகாலத்திற்கு சற்று முன்பாகவே வெட்டி எடுத்திருக்கலாமே.

ஆறுகள், ஏரிகள், குளங்கள் முறையாகத் தூர்வாறப்பட்டு தயார் நிலையில் இருந்தால், மக்களின் வாழிடங்களுக்குள் மழைத்தண்ணீர் ஏன் வருகிறது?
நீர்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியிருந்தால், மழை தண்ணீர் அந்த கட்டிடங்களுக்குள்  ஆக்கிரமிப்பதை தடுக்க முடியாது!

ஆரம்கட்ட, நான்கைந்து நாள் மழையிலேயே தமிழகத்தின் அணைகளில் முக்கால் பகுதி நீர் நிரம்பிவிட்டது. இனி அடுத்தடுத்து மழை பொழிவு மூன்று மாதங்களுக்குத் தொடரும் போது பயிர்களெல்லாம் வெள்ளத்தில் மூழ்கி பாழாகுமே...!

அதுவும் ஆற்றுமணல் படுகைகளிலெல்லாம் மணல் களவாடப்பட்டிருப்பதால் சிறிய மழைக்கே ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. ஏனெனில் ஒரு கன அடி ஆற்றுமணலானது மூன்று அடிகள் தண்ணீரைத் தன்னகத்தே தேக்கவல்லது... என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்!
எனவே மணல்கொள்ளை தடுக்கப்படாதவரை, வெள்ளநீர் பாதிப்புகளை, வேதனைகளை இழப்புகளை தடுக்கமுடியாது.

தமிழ்நாட்டின் மணல் தேவைகளுக்கு ஆற்றுப்படுகைகளை அழிப்பதற்கு மாற்றாக அணைகளில், ஏரி, குளங்களில் அடைந்து கிடக்கும் மணலை அள்ளினாலே பல ஆண்டுகளின் மணல் தேவைகள் பூர்த்தியாகும் என மூத்த பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உதாரணத்திற்கு மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மூன்றில் ஒரு பகுதி பல ஆண்டுகளாக அடித்துவரப்பட்டுள்ள ஆற்றுமணலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதை அள்ளினாலே பல லட்சகணக்கான லாரி லோடுகளுக்கு தேறும். இதைப்போல மற்ற பல அணைகளில் படிந்துள்ள மணலையும், தமிழகத்தின் 41,262 ஏரிகளில் படிந்துள்ள மணலையும் தூர்வாரி எடுத்தால் அது தமிழகத்தின் பல ஆண்டுகால கட்டுமானப் பணிகளுக்கு கைகொடுக்கும்.

அதோடு நமது நீர்பிடிப்பு ஆதாரங்கள் வளம் பெறும். பூமிக்குள் மழைநீர் சேகரிக்கப்படும். இதோடு அனைத்துபகுதிகளில் உள்ள கட்டிடங்கள், தெருக்களில் மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் அமலாக்கப்படவேண்டும்! இவ்வாறு நாம் விழிப்புணர்வுடன் திட்டமிட்டால், 'வாராது வந்த மாமழையும் நமக்கு வரமாகும்! இல்லையெனில் வரமே, சாபமாகி சங்கடங்களைத் தரும்'!

NDTV -THE HINDU,
EDITORIAL VOICE,
19-10-2012

No comments: